Saturday, May 25, 2024
Home » நீர்வளத்தை திட்டமிட்டுப் பயன்படுத்த தவறினால் உயிரின வாழ்வுக்கு ஆபத்து!

நீர்வளத்தை திட்டமிட்டுப் பயன்படுத்த தவறினால் உயிரின வாழ்வுக்கு ஆபத்து!

இன்று உலக நீர்தினம்

by Gayan Abeykoon
March 22, 2024 9:55 am 0 comment

எமது உலகம் சந்தித்துள்ள ஒவ்வொரு யுத்தமும் இயற்கை வளமொன்றை மூலகாரணமாகக் கொண்டதாகும். அதை எம்மால் மறுக்க முடியாது. அதற்கு நீர் வளமும் விதி விலக்கல்ல.  

இன்று உலக நீர் தினம். இந்தியாவின் பெங்களூர் போன்ற நகரங்கள் நீர்ப்பற்றாக்குறையால் தவிப்பதை இன்று நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்நிலையானது ‘சமாதானத்துக்கான நீர்’ என்ற உலக நீர்தினக் கருப்பொருளை மேன்மேலும் நியாயப்படுத்துகிறது. பெங்களூர் நகரம் எதிர்கொள்ளும் சவால்களை இலங்கையின் உலர்வலயம் மட்டுமன்றி முழுத்தீவும் ஏதேனுமொரு வகையில் எதிர்கொள்கிறது.

இந்த நெருக்கடி நிலைமை நீருக்கான ஒப்புரவுமிகு அணுகலின் அவசரத் தேவையை வலியுறுத்தி நிற்கிறது. காலநிலை மாற்றம், சனத்தொகை வளர்ச்சி, வளங்களின் முறையற்ற முகாமைத்துவம் போன்ற அச்சுறுத்தல்களின் மத்தியில் அது ஒரு மனித உரிமையாகப் பார்க்கப்படுகிறது.

முன்னொரு காலத்தில் ஏரிகளால் நிறைந்து காணப்பட்ட பெங்களூர் துரித நகரமயமாக்கலுக்கு ஆட்பட்டது. நிலங்களும் நீர்ப்பரப்புகளும் அத்துமீறிப் பிடிக்கப்பட்டன. எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச நீர்நிலைகளும் மாசடைந்தன. கட்டடங்கள் பெருகி நகரின் வளங்கள் மீது பெரும் அழுத்தத்தைப் பிரயோகித்தன. நீண்ட தூரத்திலும் ஆழத்திலிருந்தும் கிடைக்கப்பெறும் நீருக்காக பெங்களூர் நகரம் ஏங்கி நிற்கிறது. அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட நீர் கிடைக்காமல் நகரவாசிகள் தவித்து நிற்கிறார்கள்.

இலங்கையின் உலர்வலயம், வரலாற்றுரீதியாகப் பல வரட்சி நிலைமைகளைக் கடந்து வந்தது. காலநிலை மாற்றம் மழை பெய்யும் பாங்கைக் குலைத்ததால் உலர்வலய மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவை தனிப்பட்ட சம்பவங்களல்ல. மாறாக முரண்பாட்டுக்கான மையமாக நீர்ப்பற்றாக்குறை காணப்படுகிறது என்ற உலகளாவிய போக்கினை இவை நியாயப்படுத்துகின்றன.

2024 ஆம் ஆண்டுக்கான உலக நீர்தினம் ஒரு தெளிவான செய்தியைச் சொல்கிறது. நீர்ப்பாதுகாப்புக்கான திறவுகோல் கூட்டுறவேயன்றி போட்டியல்ல என்பதே அதுவாகும். நீர் என்பது அனைவருக்குமானது. எல்லைகளால் பிரிக்கப்பட முடியாதது. நீர்வள நாகரிகத்தின் அடியோடு வந்த சமூகம் எங்கள் சமூகம். அனைவருக்கும் நீருக்கான ஒப்புரவுமிகு அணுகலை வழங்க வேண்டியது எமது பொறுப்பல்லவா?

இந்த ஒப்புரவுமிகு அணுகல் என்பது நீரின் அளவுடன் மட்டும் நின்று விடாது. அது நீரின் தரத்தையும் உள்ளடக்கியது. கைத்தொழில் கழிவுகளும், மிகையான உரப்பாவனை, கிருமிநாசினிகளின் பாவனை காரணமாக நீரில் உள்ள இரசாயனங்கள் பெரும் அச்சுறுத்தலைத் தோற்றுவித்திருக்கின்றன.

நிலைபேறான நடவடிக்ைககள் இங்கு தவிர்க்க முடியாததாகின்றன. இன்றைய நீர் தினத்திலே நாம் அனைவரும் இணைந்து அரசாங்கம், தனிநபர்கள், சமூகங்கள் என்ற பாகுபாடின்றி நீர் முரண்பாட்டுக்கானதல்ல, சமாதானத்துக்கானது என்பதை உறுதி செய்வோம். நீருக்கான எங்கள் ஒவ்வொருவரது தவிப்புகளிலிருந்தும் மற்றவர்கள் கற்றுக் கொள்வோம்.

நீருக்கான ஒப்புரவுமிகு அணுகல் என்ற மனிதஉரிமையை அனைவரும் அனுபவிப்பதற்காக நாம் கரம் கோர்ப்போம்.

1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றாடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மகாநாட்டில் செய்யப்பட்ட சிபாரிசையடுத்து மார்ச் 22 ஆம் திகதியை உலக நீர்தினமாக ஐ.நா.பொதுச்சபை பிரகடனம் செய்தது. அதைத் தொடர்ந்து இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. நீர்வளத்தை மனிதன் தன் தேவைக்குத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காகவே இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

நீரின்றி உலகமே இல்லை. எல்லா வளங்களுக்கும் மூலவளம் நீரே. உலக மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த உன்னத பொக்கிஷமே நீர். நீர்வளமானது சகல உயிரினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையாகும். அதனைப் பயன்படுத்துவோர்களிடையே மேலும் மேலும் தேவைகள் அதிகரிப்பதனால் இன்று நீர் போட்டிப் பொருளாகவும், சந்தைப் பொருளாகவும் கூட மாறிவிட்டது.

நீர் உயிரின் ஆதாரம். உயிர்களனைத்துக்கும் அதுவே ஜீவாதாரம். நீர் இல்லை என்றால் இந்த உலகிலும் உயிருள்ள ஜீவன்கள் இருக்கமாட்டாது. உணவு இல்லை என்றால் அதனை உற்பத்தி செய்து கொள்ளலாம். உடை இல்லை என்றாலும் அதனையும் உற்பத்தி செய்து கொள்ளலாம். ஆனால் நீர் இல்லாது போய்விட்டால் அதனை எந்த ஒரு சக்தியாலும் உற்பத்தி செய்யவே முடியாது.

மனித சமுதாயத்துக்கு நீரின் பயன் அளப்பரியது. பிறப்பிலும், வாழ்விலும், இறப்பிலும் கூட இணை பிரியாத இன்றியமையாத சாதனமாக விளங்குவது தண்ணீர். நீரின்றி நிலமில்லை, நிலமின்றி நீரில்லை எனும் தத்துவத்தைப் போதிக்கும் மகத்துவம் நிறைந்த தண்ணீரின் பெருமைகளை மதங்களும் மகிமைப்படுத்துகின்றன.

ஒவ்வொரு வருடமும் உலக நீர்தினத்துக்கென ஒரு தொனிப்பொருள் பிரகடனம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டின் தொனிப்பொருள் ‘சமாதானத்துக்கான நீர்’ என்பதாகும்.

நீர்வளத்தின் முக்கியத்துவம் எல்லாக் காலங்களிலும் உணரப்பட்டு வந்துள்ளது. உலக வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கும்போது புகழ்பெற்ற உலக நாகரிகங்கள் எல்லாம் நீர் நிலைகளை அடிப்படையாகக் கொண்டே தோன்றியுள்ளன. எனவே நாகரிக எழுச்சியின் மூலமே நீர் என்பது புலனாகின்றது.

பூமியின் நிலப்பரப்பில் 75 சதவீதம் இருப்பது நீர் ஆகும். எனினும் உலக சனத்தொகையின் ஒவ்வொரு நான்கு பேரிலும் மூவர் அருந்துவதற்கு தூய நீரின்றி அவதிப்படுகின்றனர். 33 சதவீதமானவர்களுக்கு தூய குடிநீர் கிடைப்பதில்லை. உலக நீர்ப்பரப்பில் 97.5 சதவீதம் உப்பு நீராகவும், 2.5 சதவீதம் நன்னீராகவும் உள்ளது. நன்னீர்ப் பரப்பிலும் 69 சதவீதம் பனிக்கட்டியால் மூடப்பட்ட பிரதேசமாகும். 30 சதவீதம் நிலக்கீழ் நீர். 3 சதவீதம் நன்னீர் ஏரிகளும், நதிகளும் ஆகும். எஞ்சிய பகுதி ஈரலிப்பு தரைப் பிரதேசங்களாகும். உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது நீரை அதிகமாகப் பயன்படுத்தும் துறை விவசாயமாகும். 85 சதவீதம் நீர் விவசாயத்துக்காக பயன்படுத்தப்படுகின்றது. கைத்தொழில்துறை 10 சதவீதத்தைப் பயன்படுத்துகின்றது. எஞ்சிய 5 சதவீதமே வீட்டுப் பாவனைக்குரியது.

எனவே, அருமையாக உள்ள வளத்தை மக்கள் தற்போது எவ்வாறு பாவிக்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே எதிர்கால மக்களின் வாழ்வு அமையும்.

கலாபூஷணம் பரீட் இக்பால்…?

யாழ்ப்பாணம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT