அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பத்திரிகையாக இருக்கின்ற போதிலும், எமது மக்களுக்கு சிறந்த வழிகாட்டல்கள், செய்திகள் மற்றும் இதர விடயங்களை பக்கச்சார்பின்றி வழங்கக்கூடிய வகையில் தினகரன் வெளிவருவது வரவேற்கத்தக்கதாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையின் 92 ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த 18 ஆம் திகதி நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், “இலங்கையின் இலக்கிய வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய பத்திரிகைகளில் தினகரனுக்கு எப்போதும் தனியிடம் உள்ளது. பேராசிரியர் கைலாசபதி மற்றும் ஆர். சிவகுருநாதன் போன்றோரை எமது இலக்கிய கர்த்தாக்கள் இன்றும் நினைவுகூருகின்றனர்.
ஒருவர் சார்ந்தோ அல்லது கட்சிகள் சார்ந்தோ விமர்சனங்களை வெளியிடுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நபர்களிடமும் கட்சிகளிடமும் குழுக்களிடமும் அவ்விடயம் குறித்து வினவுவது ஆரோக்கியமான விமர்சனத்துக்கு வழிவகுக்கும் என நான் அடிக்கடி ஊடகத்துறை நண்பர்களுடன் கலந்துரையாடும்போது கூறுவதுண்டு. இதனையே இச்ந்தர்ப்பத்திலும் கூற விரும்புகின்றேன்.
எமக்கென்று சமூகக் கடமைகள் இருக்கின்றன. அதே சமூகக் கடமைகள் ஊடகங்களுக்கும் இருக்கின்றன. நான் தவறென்று ஆதாரபூர்வமாக ஒப்புவிக்கின்ற நிலையில் அதனை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்டு என்னை நானே திருத்திக்கொள்வேனே தவிர, நான் பிடிக்கும் முயலுக்கு மூன்று கால்கள் என்று கூறிக்கொண்டிருக்க மாட்டேன். அதுதான் எனது இயல்பு.
தற்போது தினகரன் பத்திரிகையை சிறந்த முறையில் முன்னெடுத்து வரும் ஆசிரியர் தே. செந்தில்வேலவரின் அயராத உழைப்பை என்னால் உணரக்கூடியதாக உள்ளது. அவருக்குத் துணையாக சிறந்த ஆசிரியர் குழுவினர் செயற்பட்டு வருவதும் பாராட்டுக்குரியது.
அந்த வகையில் இந்தப் பத்திரிகை மேலும் சிறப்போடு பல நூற்றாண்டுகளைக் காணவும் எனது வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.