Friday, June 21, 2024
Home » சமுர்த்தி திணைக்கள அதிகாரி அலியார் பணியிலிருந்து ஓய்வு

சமுர்த்தி திணைக்கள அதிகாரி அலியார் பணியிலிருந்து ஓய்வு

by mahesh
March 20, 2024 10:06 am 0 comment

இலங்கை சமுர்த்தி திணைக்களத்தில் நீண்ட காலம் சேவையாற்றிய அம்பாறை மாவட்ட சமுர்த்தி அதிகாரி சேகு இப்றாகிம் அலியார் ஓய்வு பெற்றுள்ளார். அவர் சமுர்த்தி அபிவிருத்தி பணியில் சுமார் 30ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார்.

மறைந்த சேகு இப்றாகிம்_ ஆசியா தம்பதியினரின் நான்காவது பிள்ளையான அவர் சமுர்த்தி திணைக்களத்தில் பலராலும் பாராட்டப்பட்ட சிறந்த அதிகாரி ஆவார்.

அவர் தனது ஆரம்பக்கல்வியினை சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்திலும், இடைநிலை மற்றும் உயர்தரக் கல்வியினை சாய்ந்தமருது சாஹிறா கல்லூரியிலும் பயின்று கலைப்பிரிவில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டம் பெற்றுள்ளார். பின்னர் மொழிபெயர்ப்பில் டிப்ளோமா பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார்.

1994 ஆம் ஆண்டு சமுர்த்தி முகாமையாளராக அம்பாறை மாவட்ட சமுர்த்தி காரியாலயத்தில் நியமனம் பெற்றார். இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் செயற்பாடுகளை இன மத பேதங்களின்றி செயற்படுத்தியதுடன் சக உத்தியோகத்தர்களையும் அரவணைத்து வழிகாட்டினார்.

இதனால் இப்பிரதேச மக்களின் மதிப்புக்குரிய அதிகாரியாக இன்றுவரை விளங்குகின்றார். சிலகாலம் சமுர்த்தி உள்ளக கணக்காய்வு பிரிவிற்கு பொறுப்பாக செயற்பட்டார். சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் தலைமைப்பீட முகாமையாளர் பதவியிலும் இருந்தார்.

பின்னர் மீண்டும் மாவட்ட சமுர்த்தி இணைப்பாளராக அம்பாறை மாவட்ட சமுர்த்தி காரியாலயத்திற்கு பதவியுயர்வு பெற்று அர்ப்பணிப்புடன் கடமையாற்றினார்.

மும்மொழியிலும் இவர் பாண்டித்தியம் பெற்றுள்ளார். திணைக்களத்தின் பெரும்பாலான சுற்றுநிருபங்கள் இவரது மொழிபெயர்ப்பாகவே இருந்து வந்தன.

இதன் காரணமாக அவர் சமுர்த்தி திணைக்களத்தின் தலைமைக்காரியாலயத்தின் உதவிப்பணிப்பாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். சில காலம் திணைக்களத்தின் குறுநிதிப்பிரிவில் சிறப்பாக கடமையாற்றி பின்னர் குறுகிய காலப்பகுதியில் மீண்டும் பிரதிப்பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றார்.

2020 ஆண்டு மன்னார் மாவட்ட பதில் சமுர்த்தி பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் நான்கு வருடங்கள் வினைத்திறன் மிக்க கடமையாற்றி அரசசேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

தனது சேவைக்காலத்தில் சர்வதேச செயலமர்வுகள், நிருவாக பயிற்சிப் பட்டறைகள், கேட்டறிதல் கண்டறிதல் என்பவற்றுக்காக மலேசியா, இந்தியா போன்ற பல நாடுகளுக்கு சென்றுள்ளார்.

நிஸா இஸ்மாயீல் 
மருதமுனை

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT