வவுனியா வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் சிவாரத்திரி பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் வவுனியா நீதிமன்றத்தால் நேற்று (19) விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி பூஜை வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் வைத்து ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 9 ஆம் திகதி வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
கடந்த 12 ஆம் திகதி வழக்கு விசாரணை மீள எடுக்கப்பட்டபோது, நேற்று வரை பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பொலிஸார் அவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க தவறிய காரணத்தால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு 8 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இது தொடர்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா கருத்து தெரிவிக்கையில்,
கடந்த சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதி சிவலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பொலிஸ் தரப்பில் தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் வவுனியா நீதிமன்றம் அனைவரையும் கடந்த 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கின்ற உத்தரவை வழங்கியிருந்தது.
பொலிஸாரையும் விசாரணையை துரிதப்படுத்தி பூரணமான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு தெரிவித்திருந்தது. கடந்த 12 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் பொலிஸ் தரப்பில் சொல்லப்பட்ட பல்வேறு விடயங்களையும் ஆட்சேபித்து, எந்தவொரு இடத்திலும் சட்டம் மீறப்படுவில்லை என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி,தொல்பொருட்கள் கட்டளைச்சட்டம் பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அவதானிக்கின்றபோது இதற்கு பொருந்தாது என்று சுட்டிக் காட்டப்பட்டு அவர்களுக்கு பிணை வழங்குமாறு வாதிட்டோம்.
ஆயினும், பொலிஸ் தரப்பில் குறித்த கட்டளைச் சட்டத்தின் பிரிவு 15 உப பிரிவு C இனை சுட்டிக்காட்டி அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என மீண்டும் கோரப்பட்டது. அந்நிலையில் அறிவு சார் நீதவான் இந்த விசாரணை முடிவுறுத்தப்பட்டு பொலிஸ் தரப்பில் இறுதி அறிக்கை வடிவில் பிராத்து எனப்படும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு பொலிஸார் கோரியவாறு ஏற்றுக் கொண்ட ஒருவார கால அவகாசத்தை வழங்கியிருந்தார்.
நேற்று வரை சந்தேகநபர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்கும் உத்தரவை வழங்கியிருந்தார். மீண்டும் நேற்று வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபருடைய ஆலோசனையையும், அறுவுறுத்தல்களையும் பெறுவதற்காக வழக்கின் விசாரணை கோவையையும், தங்கள் வசம் இருக்கும் அனைத்து கோவைகளையும் சட்டமா அதிபரின் பரிசீலனைக்காக தாங்கள் அனுப்ப வேண்டி இருப்பதால் இன்று (19) குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்ய முடியவில்லை எனவும் மன்றில் தெரியப்படுத்தினர்.
இந்த அடிப்படையில் சந்தேகநபர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைப்பதற்கான விண்ணப்பதை முன்வைத்தனர். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சந்தேகநபர்கள் அனைவரும் இந்த நாட்டின் பிரஜைகள். நீதிமன்ற கட்டளை ஊடாக விளக்கமறியலில் வைப்பதனால் அவர்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது. அது சட்டத்திற்கு அமைவாகவே இருக்க வேண்டும் என தெரிவித்தோம்.
பொலிஸ் தரப்பின் விண்ணப்பம், குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்ய தாங்கள் ஒத்துக் கொண்ட இன்றைய தினம் (19) தாக்கல் செய்யாமல் சட்டா அதிபரின் அறிவுரையை இப்போது நாடியிருப்பது இந்த வழக்கின் சட்ட அடிப்படை தொடர்பிலே அவர்கள் திட்டவட்டமான தெளிவான நிலைப்பாட்டில் இல்லை என்பதை முன்வைத்தோம். இருட்டு அறை ஒன்றில் கறுப்பு பூனையை தேடுவது போன்று தான் சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை வடிவமைக்கும் விதமாக செயற்படுகிறார்கள் என்பதையும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.
எங்கள் தரப்பில் செய்யப்பட்ட பல்வேறு சமர்ப்பணங்கள் தொடர்பாக பரிசீலித்த நீதிமன்றம், குற்றப்பத்திரம் தாக்கல் செய்யாது சட்டமா அதிபரிடம் தற்போது ஆலோசனை பெறுவது தொடர்பில் பல கேள்விகளை பொலிஸாரிடம் கேட்டிருந்தது. இறுதியில் விபரமான தீர்ப்பினை வழங்கியிருக்கின்றது. சந்தேகநபர்கள் பிணை மறுக்கப்படும் தொல்பொருள் கட்டளைச் சட்டம் 15 Cஇன் கீழ் பொலிஸார் தாக்கல் செய்துள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டிய மன்று, பிரஜைகள் சுதந்திரத்தை கட்டுப்படுத்த முடியாது. இது சட்டத்திற்கோ, நீதிக்குகோ ஏற்புடையது அல்ல. குற்றச்சாட்டு நிருப்பிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகளே. அதனடிப்படையில் நாங்கள் கோரியவாறு உகந்த கட்டளை ஒன்றை வழங்குமாறு முன்வைத்த கருத்தினை எடுத்து இந்த வழக்கில் இருந்து அனைத்து சந்தேகநபர்களையும் விடுதலை செய்து வழக்கினையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
குறித்த வழக்கில் சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம், க.சுகாஸ், தி.திருஅருள், அ.திலீப்குமார், நிவிதா, கிசான், தர்சா, நிதர்சன், கொன்சியஸ், சாருகேசி உள்ளிட்ட பலர் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா விசேட நிருபர்