Home » காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 61.5 மில்லியன் டொலர் நிதி உதவி

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 61.5 மில்லியன் டொலர் நிதி உதவி

இந்திய உயர்ஸ்தானிகர் அமைச்சர் நிமலிடம் உறுதி

by mahesh
March 20, 2024 9:00 am 0 comment

இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான யாழ். காங்கேசன்துறை துறைமுகத்தின் முழுமையான அபிவிருத்திக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கிடையில் அண்மையில் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலே இந்த விடயங்கள் பேசப்பட்டுள்ளன .

இந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ், துறைமுகத்தின் உட்பகுதிபகுதியை 30 மீற்றர் ஆழப்படுத்தவும், துறைமுகத்தில் பாரிய கப்பல்கள் மற்றும் படகுகள் தரித்து நிற்பதற்கு புதிய (பிரேக்வாட்டர்) அலைத் தடுப்பு அணையை கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பிராந்திய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்ப்பதற்கும் இந்தியா பூரண ஆதரவை வழங்கும் என உயர்ஸ்தானிகர் இங்கு தெரிவித்தார்.

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்த இடமாக இலங்கையை இந்தியா பெயரிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகிய துறைகளில் இந்திய அரசு இலங்கைக்கு அளித்து வரும் ஆதரவுக்கு இலங்கை அரசும், தனது அமைச்சும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையே விமான சேவை தொடங்குவது மிகவும் சிறந்த விடயமென்றும் அமைச்சர் கூறினார்.

இந்திய சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக காங்கேசன்துறை துறைமுக வளாகத்தில் 600 மில்லியன் ரூபா செலவில் நவீன முனையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், கடந்த 09 மாதங்களில் அதிகளவான இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT