முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (14) கர்மாரம்ப கிரியைகளுடன் தொடங்கி சிறப்புற நடைபெற்று வருகின்றது.
வெள்ளைக்கை நாச்சியாரால் வழிபட்டதும் பரராசசேகர மன்னரால் பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதுமான முள்ளியவளை காட்டு விநாயகப்பெருமானுக்கு 9 தளங்கள் கொண்ட இராஜகோபுரம் புதிதாக அமைக்கப்பட்டு புனருத்தாபன பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நாளை (20) நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்புபெற்ற ஒரு ஆலயமாக காணப்படுகின்றது. உப்பு நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாக பொங்கலுக்குரிய பாக்குத்தெண்டல் என்ற நிகழ்வும் கடல் நீரில் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வும் தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு உப்பு நீரில் விளக்கெரியும் நிகழ்வு இடம்பெற்று ஞாயிற்றுக்கிழமை (24) காட்டுவிநாயகர் பொங்கல் நடைபெற்று திங்கட்கிழமை (25) மடப்பண்டத்துடன் எடுக்கப்பட்ட கடல்தீர்த்தமும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் கொண்டு செல்லப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெறும்
இவ்வாறு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துடன் தொடர்புடைய சிறப்புமிக்க தொன்மைகொண்ட ஆலயமாக முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயம் காணப்படுகின்றது.
இந்த ஆலயம் கடந்த 2017 ஆம் ஆண்டு பாலஸ்தானம் இடம்பெற்று திருப்பணிவேலைகள் நடைபெற்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா காலகட்டமான இரண்டு ஆண்டுகள் அதன் பின்னர் போக்குவரத்து தடை, எரிபொருள் விலையேற்றம் போன்ற காரணங்களினால் மூன்று ஆண்டுகள் திருப்பணிவேலைகள் நடைபெறாத நிலையில் அதன் பின்னர் திருப்பணிவேலைகள் பக்த்தர்கள் மற்றும் புலம்பெயர் பக்த்தர்களின் ஒத்துழைப்புடன் நிர்வாகத்தினரின் செயற்பாடு காரணமாக ஆலயம் முழுமையாக புனருத்தாபனம் செய்யப்பட்டு நவதள இராஜகோபுரம் புலம்பெயர்ந்த கொடையாளர் சிவராசாவினால் நிர்மானிக்கப்பட்டு நாளை மஹாகும்பாபிஷேக பெரும் சாந்தி விழா சிறப்புற நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேக நிகழ்வின் மூலாலய பிரதிஷ்டா பிரதம குருவாக ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ கா.இரகுநாதக்குருக்கள் தலைமையில் வடக்கில் உள்ள பல முதன்மை குருமார்களின் பங்குபற்றலுடன் கடந்த 14.03.2024 அன்று தொடங்கிய கிரியைகள் நேற்று முன்தினம் (17) , நேற்று (18) ,இன்று (19) எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு சிறப்புற நடைபெற்று நாளை மஹா கும்பாவிஷேகம் சிறப்புற நடைபெறவுள்ளது.
நடைபெற்று வரும் கும்பாபிஷேக நிகழ்வுகளில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முதன்மை குருக்கள் உள்ளிட்ட பல்வேறு குருக்களின் வேத பாராயணங்கள் ஓதலுடன் கும்பாபிஷேக கிரியைகள் நடைபெற்று வருகின்றது.
புதுக்குடியிருப்பு விசேட நிருபர்