Monday, July 22, 2024
Home » சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தயாராகின்றது அறுகம்பைக்குடா

சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தயாராகின்றது அறுகம்பைக்குடா

by damith
March 18, 2024 9:30 am 0 comment

‘உல்லாசப் பயணிகளின் சொர்க்கம்’ என வர்ணிக்கப்படும் இயற்கை வனப்புமிக்க பொத்துவில் அறுகம்பைக் குடாவுக்கு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் பெருமளவில் இவ்வருடம் வருகை தரவுள்ளனர். இதற்கான விரிவான ஏற்பாடுகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன.

கடலலை நீர்ச்சறுக்கல் விளையாட்டுக்கு சர்வதேச ரீதியில் பெயர்பெற்று விளங்கும் அறுகம்பைக் குடாவுக்கு பிரதி வருடமும் எப்ரல் முதல் செப்டம்பர் வரை உலக நாடுகளின் உல்லாசப் பயணிகள் பெருமளவில் வருகை தருவது வழமையாகும். வழமைபோன்று, இம்முறையும் உல்லாசப் பயணிகள் வருகை தரவுள்ளனர்.

அதிகளவான உல்லாசப் பயணிகள் பொத்துவில் உல்லை, அறுகம்பைக்குடா பிரதேசங்களுக்கு வருகை தரவுள்ளதாகவும், அதற்கான முன்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாகவும் தனியார் விடுதி உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

உல்லாசப் பயணிகளுக்குத் தேவையான தங்குமிடம், உணவு உள்ளிட்ட முக்கிய தேவைகளை நிறைவேற்றுவதில் பிரதேசத்திலுள்ள தனியார் ஹோட்டல் உரிமையாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். அதற்கான முன்னாயத்த வேலைகளில் அவர்கள் தற்பொழுது ஈடுபட்டு வருகின்றனர்.

விடுதிகளின் விஸ்தரிப்பு, புனரமைப்புப் பணிகளில் அவர்கள் தற்பொழுது ஈடுபட்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள, பொத்துவில் அறுகம்பைக்குடா, மட்டக்களப்பு, பாசிக்குடா, திருகோணமலை நிலாவெளி கடற்கரைப் பிரதேசங்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டு உல்லாசப் பயணிகளால் பெரிதும் விரும்பப்படும் சுற்றுலாத் தலங்களாகும். குறித்த பிரதேசங்களுக்கு சர்வதேச உல்லாசப் பயணிகள் மாத்திரமன்றி, உள்ளூர் உல்லாசப் பயணிகளும் பெருமளவில் வருகை தந்து பொழுதுபோக்கி வருகின்றமை வழமையாகும்.

இலங்கைக்கு வருகைதரும் உல்லாசப் பயணிகளை கொழும்பிலிருந்து கிழக்கு சுற்றுலாத் தலங்களுக்கு விமானம் மற்றும் ஹெலிகொப்டர் ஊடாக வான் வழியில் பயணிக்கும் ஏற்பாடுகளும் கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியதாகும். இந்த ஏற்பாடுகளை இலங்கை சுற்றுலா கைத்தொழில் மன்றத் தலைவர் ஏ.எம்.ஜௌபர் மேற்கொண்டிருந்தார்.

அண்மைக் காலத்தில் கிழக்கு மாகாணத்திற்கு வருகைதரும் உல்லாசப் பயணிகளில் அதிகமானவர்கள் துவிச்சக்கர வண்டிச் சவாரி பயணத்தில் அதிகம் நாட்டம் காட்டி வருகின்றனர். கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கிடையில் நீண்ட தூரப் பயணங்களை அவர்கள் துவிச்சக்கர வண்டியில் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சுற்றுலா பருவகாலத்தை முன்னிட்டு திருகோணமலையிலுள்ள புறாமலை

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கோவிட்-19 வைரஸ் பரவல் அசாதாரண நிலை காரணமாக, இலங்கைக்கு வருகைதரும் உல்லாசப் பயணிகள் தொகையில் கணிசமானளவு வீழ்ச்சியேற்பட்டிருந்தது.அது மாத்திரமன்றி, கிழக்கு உல்லாசப் பிரதேசங்கள் சோபையிழந்து, வெறிச்சோடிக் காணப்பட்டன.

உல்லாசப் பயணிகளின் வருகை பாதிப்படைந்ததைத் தொடர்ந்து உல்லாசப் பயணத்துறை போதிய வருமானமின்றி பெரும் சவால்களை எதிர்கொண்டது. நாட்டுக்கு கிடைக்கும் பெருந்தொகை அந்நியச் செலாவணியும் கிடைக்காமல் போனது.

இத்துறையில் ஈடுபட்டிருந்த பலர் தொழில்வாய்ப்பை இழந்திருந்தனர். உல்லாசப் பயண

ஹோட்டல்கள் தினசரி நிர்வாகச் செலவுகளுக்கேனும் போதியளவு வருமானமின்றி பெரும் பாதிப்பை எதிர்கொண்டன. உல்லாசப் பயணத்துறையுடன் இணைந்த இதர தொழில்துறையாளர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

அதுமாத்திரமன்றி, கடந்த 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்தும் உல்லாச பயணத்துறைக்கு பாரியளவு இழப்பேற்பட்டதை மறந்துவிட முடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக சோபையிழந்த உல்லாசப் பயணத்துறை வழமைக்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையிலேயே, கொவிட் 19 முடக்கம் ஆட்கொண்டது.

தற்பொழுது எதுவித பிரச்சினைகள், சிக்கல்கள் இன்றி உல்லாசப் பயணத்துறை சுதந்திரமாக இயங்கி வருகின்றமை நமக்கெல்லாம் மகிழ்ச்சியானதாகும்.

ஆ கையால், இலங்கையர் என்ற வகையில் உல்லாசப் பயணிகளை அன்புடன் வரவேற்பதற்கும், அவர்களுக்குத் தேவiயான உதவி, ஒத்துழைப்பு, உபசரிப்பினை வழங்குவதற்கும் நாங்கள் ஒவ்வொருவரும் தயாராக வேண்டும்.

முகம்மட் றிஸான் (அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT