பல்வேறு பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் கல்விகற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கமளிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி புலமைப்பரிசில் 2024/2025 திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஏப்ரல் 01 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் 2024/2025 திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பாக பலரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தக் கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் திட்டம் தொடர்பில் அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாகவும் சகல அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இந்த புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள பெற்றோர்கள் உரிய விசாரணைகளை மேற்கொண்டு விண்ணப்பப் படிவத்தை பாடசாலை அதிபரிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி நிதியம் கோரியுள்ளது.
மேலும், கல்வி அமைச்சின் செயலாளரினால் ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, ஒவ்வொரு பாடசாலையிலும் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்த பாடசாலைக்கு எத்தனை புலமைப்பரிசில்கள் வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் பிராந்திய கல்விப் பணிப்பாளரினால் தீர்மானிக்கப்பட்டு வலயத்திலுள்ள அதிபர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதன்படி, அனைத்துப் பாடசாலைகளிலும் அதிபர்கள் தேர்வுக் குழுவை நியமித்து, 01.04.2024க்குப் பிறகு தங்கள் பாடசாலைக்குக் கிடைக்கும் புலமைப் பரிசில்களின் அளவுக்கேற்ப புலமைப்பரிசில் பெறுவோரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பாடசாலைகளால் தெரிவு செய்யப்படும் தகுதியான புலமைப்பரிசில் பெறுவோரின் பட்டியல், விண்ணப்பங்கள் மற்றும் விபரங்களை கல்வி அமைச்சு ஜனாதிபதி நிதியத்திற்கு அனுப்பிய பின்னர், இந்தப் புலமைப் பரிசில் தொகைகள் 2024 ஏப்ரல் முதல் அடுத்த 12 மாதங்களுக்கு வழங்கப்படும்.
இலங்கையிலுள்ள 10,126 பாடசாலைகளை உள்ளடக்கி, முதலாம் தரம் முதல் 11ம் தரம் வரை கல்வி கற்கும் ஒரு இலட்சம் (100,000) மாணவர்களுக்கான இந்த கல்வி உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், முழுத் திட்டத்திற்கும் ஜனாதிபதி நிதியத்தினால் 360 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட புலமைப்பரிசில் தகுதியாளர்களுக்கு அது பற்றி அறிவித்த பின்னர், சம்பந்தப்பட்ட மாணவர் தனது கூட்டுக் கணக்கொன்றை இலங்கை வங்கி, மக்கள் வங்கி அல்லது தேசிய சேமிப்பு வங்கிக் கிளையில் ஆரம்பிக்க வேண்டும். குறித்த வைப்புத் தொகை உரிய வகையில் குறித்த வங்கியினால் மாணவரின் கணக்கில் வைப்புச் செய்யப்படும்.
அதன்படி, புலமைப் பரிசில் பெறுவோர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதிபரினால் புலமைப்பரிசில் பெற்றவர்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கி வங்கி முகாமையாளருக்கு கடிதமொன்றை வழங்குவார். உதவித்தொகை பெறத் தகுதியான மாணவர் தனது தாய் / தந்தை / பாதுகாவலருடன் அந்தந்த வங்கிக் கிளைகளின் முகாமையாளர்களைச் சந்தித்து அறிவுறுத்தலின்படி வங்கிக் கணக்கைத் திறந்து வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களை அதிபரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.