Home » மரதன் ஓடிய மாணவனின் மரணம் தொடர்பில் விசாரணை!

மரதன் ஓடிய மாணவனின் மரணம் தொடர்பில் விசாரணை!

- மக்கள் திருக்கோவில் வைத்தியசாலை முன் போராட்டம்

by Rizwan Segu Mohideen
March 12, 2024 8:12 pm 0 comment

– “2 மணித்தியாலங்களுக்கு மேல் நடவடிக்கை இல்லை”
– அம்பியூலன்ஸ் வண்டி சாரதியையும் காணவில்லை
– திருக்கோவில் வைத்தியசாலை அசிரத்தை?

திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெறும் விளையாட்டு போட்டியின், நேற்று இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற மாணவன் ஒருவர் திடீரென மயக்கமுற்று சுகவீனமடைந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யபட்ட குறித்த அம்மாணவன் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் திருக்கோவிலை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க ஜெயக்குமார் விதுர்ஜன் எனும் மாணவனே உயிரிழந்தவராவார்.

சம்பவத்தை அடுத்து, குறித்த மாணவன் உரிய சிகிச்சை வழங்கப்படாததன் காரணமாகவே உயிரிழந்ததாக பாடசாலை மாணவரகள் மற்றும் பொதுமக்கள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடி மாணவனின் மாணவனின் மரணத்திற்கு வைத்தியர்களின் அலட்சிய நிலையே காரணம் என தெரிவித்து நீதி கோரி போராட்டங்களை முன்னெடுத்தனர்.

திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழந்த மாணவன் மூன்று மணித்தியாலயங்கள் வரை எந்தவொரு சிகிச்சையுமின்றி இருந்த நிலையில் மரணமடைந்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் , வரவழைக்கப்பட்டதுடன் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அருகில் மரணமடைந்த மாணவனுக்கு நீதி கோரி பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து, பொலிஸார் அவர்களுக்கு விடயம் தொடர்பில் எடுத்துக் கூறிய நிலையில், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மாணவனின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதோடு, சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

வெப்பமான காலநிலை காரணமாக வெளிப்புற நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு கல்வி அமைச்சு அண்மையில் அனைத்து பாடசாலை அதிகாரிகளுக்கும் விசேட சுற்றறிக்கை ஒன்றை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT