Tuesday, October 15, 2024
Home » பங்களாதேஷ் உடனான டெஸ்ட் குழாமில் புதுமுக வீரராக நிஷான் பீரிஸ்

பங்களாதேஷ் உடனான டெஸ்ட் குழாமில் புதுமுக வீரராக நிஷான் பீரிஸ்

- ஒரு நாள் தொடருக்கான குழாமும் அறிவிப்பு

by Rizwan Segu Mohideen
March 11, 2024 8:56 am 0 comment

பங்களாதேஷுக்கு எதிரான 16 பேர் கொண்ட இலங்கை ஒருநாள் குழத்தில் இரு முக்கிய மாற்றங்களாக லஹிரு குமார அழைக்கப்பட்டிருப்பதோடு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிசங்க அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோன்று பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் குழாத்தில் புதுமுக சுழற்பந்து வீச்சாளர் நிஷான் பீரிஸ் அழைக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷுக்கு எதிரான ரி20 தொடரை 2-1 என கைப்பற்றிய இலங்கை அணி அடுத்து மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது. இதன் முதல் போட்டி எதிர்வரும் புதன்கிழமை (13) சிட்டோக்ராமில் நடைபெறும்.

இதில் உபாதைக்கு உள்ளான அசித்த பெனாண்டோவுக்கு பதில் லஹிர குமார அணிக்கு திரும்பியுள்ளார். கடைசியாக ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் ஆடிய லஹிரு, உபாதைக்கு உள்ளாகி இருந்தார்.

அதேபோன்று ஆப்கானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரட்டைச் சதம் பெற்ற நிலையில் காயத்துக்கு உள்ளான ஆரம்ப வீரர் பத்தும் நிசங்க மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இது அணியின் துடுப்பாட்ட வரிசையை பலப்படுத்துவதாக உள்ளது. ஷெவோன் டானியலுக்கு பதில் கமிந்து மெண்டிஸ் இணைக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் குழாம்: குசல் மெண்டிஸ் (தலைவர்), சரித் அசலங்க (உப தலைவர்), பத்தும் நிசங்க, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, கமிந்து மெண்டிஸ், துனித் வெள்ளலாகே, பிரமோத் மதுஷான், லஹிரு குமார, மஹீஷ் தீக்ஷன, டில்ஷான் மதுஷங்க, அகில தனஞ்சய, சஹன் ஆரச்சிகே, சாமிக்க கருணாரத்ன.

இதேவேளை எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி சில்ஹட்டில் ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாத்துக்கு புதுமுக வீரராக ஓப் சுழற்பந்து வீச்சாளர் நிஷான் பீரிஸ் அழைக்கப்பட்டுள்ளார்.

சுழற்பந்து முகாமை பலப்படுத்தும் வகையில் வேகப்பந்து வீச்சாளர் மிலான் ரத்னாயக்கவுக்கு பதிலாகவே 26 வயதான நிஷான் பீரிஸ் மேலதிக சுழற்பந்து வீச்சாளராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அண்மையில் நடந்த ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட் குழாத்தில் இலங்கை அணியின் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் இரு சுழற்பந்து வீச்சாளர்கள் இணைக்கப்பட்டிருந்தனர்.

தேசிய சுப்பர் லீக் 4 நாள் போட்டித் தொடரில் கொழும்பு அணிக்காக இரு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது உட்பட முதல்தர போட்டிகளில் 3 ஆட்டங்களில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி திறமையை வெளிப்படுத்தியதை அடுத்தே பீரிஸுக்கு இலங்கை டெஸ்ட் குழாத்தில் இடம் கிடைத்துள்ளது.

இதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு பாணியில் சந்தேகம் எழுந்ததை அடுத்து பீரிஸ் இலங்கை குழாத்துக்கு அழைக்கப்பட்டபோதும் தனது கன்னி டெஸ்டில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதேபோன்று காயத்துக்கு உள்ளாகி இருக்கும் அசித்த பெர்னாண்டோவுக்கு பதில் இலங்கை டெஸ்ட் குழாத்திலும் லஹிரு குமார சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் 74 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் லஹிரு குமார கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த போட்டியில் ஆடி இருந்தார். அவரது வருகை விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித்த மற்றும் சாமிக்க குணசேகரவுடன் இலங்கையின் வேகப்பந்து முகாமை பலப்படுத்தும்.

துடுப்பாட்டத்தில் சோபித்து வருகின்றபோதும் பணிச் சுமையை குறைக்கும் வகையில் பத்தும் நிசங்க டெஸ்ட் குழாத்தில் சேர்க்கப்படவில்லை.

டெஸ்ட் குழாம்: தனஞ்சய டி சில்வா (தலைவர்), குசல் மெண்டிஸ் (உப தலைவர்), திமுத் கருணாரத்ன, நிஷான் மதுஷங்க, அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், சதீர சமரவிக்ரம, ரமேஷ் மெண்டிஸ், லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித்த, கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, லஹிரு உதார, சாமிக்க குணசேகர, நிஷான் பீரிஸ்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x