Thursday, July 25, 2024
Home » தமிழ், சிங்கள புது வருடத்தில் அரச ஊழியர்களுக்கு ரூ. 10,000

தமிழ், சிங்கள புது வருடத்தில் அரச ஊழியர்களுக்கு ரூ. 10,000

- அஸ்வெசும பயனாளிகளுக்கு 20 கி.கி. அரிசி

by Rizwan Segu Mohideen
March 11, 2024 8:19 am 0 comment

– காணி அனுமதிப்பத்திரம் உள்ள அனைவருக்கும் நிரந்தர காணி உறுதி
– கொழும்பில் 50,000 அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு சட்டபூர்வ உரிமை
– ஐ.ம.ச. சிலரின் பிடியில் இருப்பதால் ஐ.தே.க. கொள்கை அங்கு இல்லை
– நாட்டைக் கட்டியெழுப்ப மீண்டும் ஐ.தே.கவுடன் இணையுங்கள்
– முதலாவது ஐ.தே.க. பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

இம்முறை சிங்கள- தமிழ் புத்தாண்டு முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும். மேலும் அஸ்வெசும திட்டத்தின் கீழ் சமுர்தியை விட மூன்று மடங்கு நன்மைகள் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் 24 இலட்சம் பேருக்கு அந்த நன்மைகள் கிடைக்கும். எதிர்வரும் சிங்கள – தமிழ் புத்தாண்டில் அந்த அனைத்து குடும்பங்களுக்கும் 20 கிலோ அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும், காணி அனுமதிப்பத்திரம் உள்ள அனைவருக்கும் நிரந்தர காணி உரித்து வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொழும்பில் 50,000 அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு சட்டபூர்வ உரிமைகள் வழங்கப்படும்.

குளியாப்பிட்டி மாநகர சபை மைதானத்தில் நேற்று (10) பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லையெனவும், சிலரின் கட்டுப்பாட்டில் அந்தக் கட்சி இருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டைக் கடன் சுமையில் இருந்து காப்பாற்றி, எதிர்காலச் சந்ததிக்காக பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு அனைத்து ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டுக்காக ஒன்றுபட்டு உழைக்க விரும்பும் மக்களின் சந்திப்பான இந்தப் பொதுக் கூட்டம் “நிதர்சனம்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, இந்த முதலாவது பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் பங்கேற்கும் முதலாவது பொதுக்கூட்டம் இதுவாகும். மைதானத்தில் கூடியிருந்த மக்களினால் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மக்கள் மத்தியில் சென்று அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

ஜனாதிபதியாக பதவியேற்றது முதல், கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, குறுகிய அரசியல் நலன்களை நிறைவேற்றாமல் நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இக்கட்டான காலத்திலும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் புரட்சியை ஏற்படுத்த அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

எப்பொழுதும் உண்மையைக் கூறி முன்னோக்கிச் செல்ல ஐக்கிய தேசியக் கட்சியினால் முடியுமாக இருந்தது தொடர்பில் தாம் பெருமை கொள்வதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது,

”இந்த மைதானத்தில் இன்று ஏராளமானோர் குவிந்துள்ளனர். கடினமான காலங்களில் நீங்கள் அனைவரும் எனக்கு வழங்கிய ஆதரவுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். அந்த இக்கட்டான காலகட்டம் முடிவடையும் போது முன்னோக்கிச் செல்வதற்கு தேசிய கருத்தொருமைப்பாடொன்றை ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது.

எங்கள் முன்னிலையில் இன்னும் சில சவால்கள் இருக்கின்றன. குறுகிய அரசியல் வேறுபாடுகள் இன்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறிச் செல்ல வேண்டும்.

நான் அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற போது, ​​நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வர முடியும் என நான் எதிர்பார்க்கவில்லை. இன்று நாம் வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளோம். இதற்கு குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகும் என்று பலர் நினைத்தார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இங்கு வந்துள்ளனர். அவர்களுடனும் உத்தியோகபூர்வ கடன் வழங்கிய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி மே அல்லது ஜூன் மாதத்தில் முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட எதிர்பாரக்கிறோம். அதன் பிறகு, வங்குரோத்தற்ற நாடாக, சலுகைகளைப் பெற முடியும்.

இந்தப் பயணத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்தது. மேலும், இந்த ஆண்டு அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிந்துள்ளது. அவர்களுக்கு இந்த சிங்கள- தமிழ் புத்தாண்டு முதல் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும். மேலும் அஸ்வெசும திட்டத்தின் கீழ் சமுர்தியை விட மூன்று மடங்கு நன்மைகள் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் 24 இலட்சம் பேருக்கு அந்த நன்மைகள் கிடைக்கும்.

இந்த சிங்கள – தமிழ் புத்தாண்டில் அந்தக் அனைத்து குடும்பங்களுக்கும் 20 கிலோ அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மேலும், காணி அனுமதிப் பத்திரம் உள்ள அனைவருக்கும் நிரந்தர காணி உரித்து வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொழும்பில் 50,000 அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு சட்டபூர்வ உரிமைகள் வழங்கப்படும். இக்கட்டான காலங்கள் இருந்தபோதிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கி, புரட்சியை உருவாக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம். மேலும், விவசாய நவீனமயமயப்படுத்தி, 10 ஆண்டுகளில் ஏற்றுமதி மூலம் வருமானம் ஈட்ட எதிர்பார்க்கிறோம்.

மேலும் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவை உருவாக்கியுள்ளோம். அதன் பணிகளில் நான் தலையிடவில்லை. தவறு செய்வர்களுக்கு எதிராக வழக்கு தொடர முடியும். அது எனக்கு பிரச்சினையும் இல்லை. மேலும் பாராளுமன்ற குழுக்கள் நியமிக்கப்பட்டன. பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டமூலம் மற்றும் பாலின சமத்துவ சட்டமூலம் ஆகியவற்றை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த தற்போதைய சட்டங்களைத் திருத்தவும் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனிப் பிரிவு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவை நாட்டின் சாதாரண மக்களின் வளர்ச்சிக்காக செய்யப்பட்டவை.

நான் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் எனக்கு ஆதரவளித்த ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கட்சி பேதமின்றி எனக்கு ஆதரவளித்த பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களிடம் குறுகிய அரசியல் நோக்கமில்லை. இந்த நாட்டைக் கட்டியெழுப்ப நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

2020 நாடாளுமன்றத் தேர்தலின் போது நாங்கள் பிளவுபட்டோம். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி என்ற ரீதியில் உண்மையைச் சொல்லி முன்னோக்கிச் செல்வோம் என அன்று நான் கூறினேன். திட்டமிட்டு செயற்பட்டால் குறுகிய காலத்தில் ஆட்சிக்கு வர முடியும் என சுட்டிக்காட்டினேன். ஆனால் பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தலில் வெற்றி பெற, பொய்யான வாக்குறுதிகளை அளிக்க வேண்டும் என்று சிலர் நினைத்தனர்.

இந்தக் கருத்தினால் ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டது. சிலர் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர். சிலர் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். சிலர் எங்களுக்கு வாக்களித்தனர். இன்று ஒரே ஒரு கட்சிதான் இருக்கிறது. அதுதான் ஐக்கிய தேசியக் கட்சி. டி.எஸ்.சேனாநாயக்க சுதந்திரம் பெற்றுக் கொடுத்த நாட்டை பாதுகாப்பதற்கும் ஜே.ஆர். ஜெயவர்தன உருவாக்கியது பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காகவும் நாம் முன்வந்துள்ளோம்.. அதற்காகத் தான் உங்கள் ஆதரவைக் கோருகிறேன்.

அன்று நான் சொன்னதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

“இந்த ஆண்டு, சுமார் 7000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு வருமானத்தை இழக்க நேரிடும். கடன்கள் மற்றும் சேவைகளுக்காக இந்த ஆண்டு 3000 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும். இதன் காரணமாக அடுத்த இரண்டு வருடங்களில் உள்ளுர் பொருளாதாரத்தைக் கையாள 6000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி கணித்துக் கூறியது. அடுத்த ஆண்டில் குறைந்தபட்சம் 3000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும். உலகின் பெரும்பாலான நாடுகள் சர்வதேச ஆதரவைப் பெற்று தங்கள் நாடுகளின் பொருளாதாரத்தை இந்த வழியில் புதுப்பிக்கத் தேவையான நிதியை பெற்றுக் கொண்டன” இவ்வாறு உண்மையைப் பேசி முன்னேறுவதில் பெருமைப்படுகிறேன். அனைத்தையும் தருவதாக ஐக்கிய மக்கள் சக்தி கூறியது.

இதேவேளை, பொருளாதாரம் குறித்து மக்கள் விடுதலை முன்னணி இவ்வாறு தெரிவித்தது,
“தனியார் துறை செயற்பாட்டு பங்காளராக பொருளாதார செயல்முறையுடன் தொடர்புடைய உற்பத்திப் பொருளாதாரத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்க வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவிப்பு உள்ளிட்ட உள்கட்டமைப்பு மற்றும் வரிச்சலுகைகளுடன் பொருளாதாரத்தை வழிநடத்த வல்லுநர்களைக் கொண்ட ஒரு சுயாதீன நிறுவனத்தை நிறுவ வேண்டும்.”

நாட்டின் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தில் உங்களின் வருமானத்தை இரட்டிப்பாக்க சுதந்திரமான நிறுவனமொன்றை நிறுவுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் 2021இல், “அடுத்த ஐந்தாண்டுகளில் அந்நியச் செலாவணியை எவ்வாறு அதிகரிப்பதற்கான திட்டத்தைத் தீட்டுவோம்” என்று அறிவித்தனர். அந்நியச் செலாவணி இல்லாத நேரத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் இவை.

ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியிடமும் திட்டம் இல்லை. இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது, ​​பொருளாதாரம் வீழ்ச்சியடைவதை அனுமதிக்கக் கூடாது என்று நினைத்தேன். எனவே சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநரிடம் பேசினேன். எங்களுக்கு உதவ விரும்புவதாகச் அவர் தெரிவித்தார். உலக வங்கியும் இதனைத்தான் சொன்னது. நான் இரண்டு முறை ஜனாதிபதியை சென்று சந்தித்தேன். இந்தத் தகவல்களை அவருக்கு முன்வைத்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக சில அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அடுத்து மே 09 ஆம் திகதி என்ன நடந்தது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். பிரதமர் பதவியை ஏற்க முடியாது என சஜித் பிரேமதாச தெரிவித்தார். அனுர திஸாநாயக்க அந்தப் பதவியை கோரவில்லை. அவர்கள் யாரையும் நான் குற்றம் சொல்லவில்லை. மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் அவர்கள் எப்படி பிரதமர் பதவியை ஏற்க முடியும்? காலி முகத்திடலுக்கு கூட அவர்களால் செல்ல முடியவில்லை.

அன்றைய தினம் ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் மகளின் திருமண விழாவில் நான் கலந்து கொண்டிருந்தேன். நான் ஹோட்டலுக்குள் இருப்பது வெளியில் இருந்த அனைவருக்கும் தெரியும். யாரும் வந்து என்னை வெளியேறுமாறு சொல்லவில்லை. அதன் பின்னர் நான் கிளம்பினேன். கொம்பனித்தெரு பகுதியில் இருந்தவர்களிடமும் பேசிவிட்டு தான் நான் சென்றேன். ஏனென்றால் நாங்கள் எப்போதும் உண்மையைத்தான் கூறினோம். மக்களை ஏமாற்றவில்லை. தோல்வியை ஏற்க தயாராக இருந்தோம்.

பின்னர், பொதுஜன பெரமுன பின்வரிசை எம்.பி.க்கள் என்னைச் சந்தித்து ஜனாதிபதி பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்தனர். நான் பிரதமராக பதவியேற்றேன். இதை ஏற்றுக்கொள்ள வேறு யாரும் முன்வரவில்லை. மொட்டுக் கட்சி ஏற்கமுடியாது. சஜித், அநுர ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. மேலும், சம்பந்தன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அவரால் அதை ஏற்க முடியாது. எனவே, பிரதமர் பதவியை ஏற்றேன். முடிந்தால் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதியிடம் கூறினேன். ஆனால் அவர்கள் அதனை விரும்பவில்லை.

நிதியமைச்சர் என்ற முறையில் சர்வதேச நாணய நிதியத்திடம் பேசினேன். அதன் ஆதரவு கிடைத்தது. இந்த நிலையில்தான் ஜூலை 9ஆம் திகதி இந்தச் சம்பவம் நடந்தது. அந்த எதிர்ப்பு முன்னாள் ஜனாதிபதியை பதவி நீக்க நடந்ததா அல்லது என்னை பதவி நீக்க நடந்ததா என்று தெரியவில்லை. எவ்வாறாயினும், ஜனாதிபதி மாளிகை சுற்றிவளைக்கப்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறினார். எனது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி வழங்கிய பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.

நான் அரச கட்டடமொன்றில் பதில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்வதற்கு அரச அதிகாரிகள் அஞ்சினார்கள். ஆனால் வாலுகாரம விகாரையில் நான் பதில் ஜனாதிபதியாக பதவியேற்றேன்.

நான் தேர்தலுக்கு செல்ல நினைத்தேன். ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள அனைவரும் எனக்கு ஆதரவளிப்பார்கள் என்று நினைத்தேன். அரசாங்கத்தை அமைத்து முன்னேற முடியும் என்று கருதினேன். அவர்கள் உடன்படவில்லை. சிலர் மாத்திரம் அமைச்சுப் பதவிகளை ஏற்றனர். திரும்பி வந்த அமைச்சர்கள் மனுஷா மற்றும் ஹரீன் ஆகியோரை வரவேற்கிறேன்.

டலஸ் அழகப்பெருமுக்கு ஆதரவளிப்பதாக சிலர் தெரிவித்தனர். ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவருக்கு ஜனாதிபதி பதவி வழங்க முடியாது என ஜி.எல்.பீரிஸ் எனக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்க முடியாது என சஜித் பிரேமதாசவும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து கொண்டன.

இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற அனைவரிடமும் உதவி கேட்டேன். மகிந்த ராஜபக்சவிடம் நான் பேசியபோது, ​​சர்வதேச நாணய நிதியத்துடன் ரணில் மட்டுமே பேச முடியும், அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். மகிந்த ராஜபக்ச உகந்தவரல்ல என்று சொல்பவர்கள் அன்று அவரை நாடிச் சென்று ஆதரவு கேட்டனர். நான் அவரிடம் தொலைபேசியில் தான் பேசினேன். எனவே பொய்யைப் பரப்ப வேண்டாமென ஐக்கிய மக்கள் சக்திக்கு கூறுகிறேன். ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு அந்தக் கட்சியில் இடமில்லை.

கடந்த 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுத்த போது, ​​கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு ஹர்ஷ டி சில்வா கோரிக்கை விடுத்தார். அந்த கலந்துரையாடலில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று நான் கூறினேன். அதன்படி திங்கட்கிழமை எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து இது குறித்து ஆராய்வதற்காக கடிதங்களை அனுப்பினோம். அப்போது ஹர்ஷ சொல்வது போன்று செயற்பட முடியாது என பண்டிதர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவரிடம் கூறியுள்ளார். நான் சொல்வதைச் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க மாட்டோம் என எனது செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். பண்டிதரின் பேச்சுக்கு அந்தக் கட்சி கட்டுப்பட்டுள்ளது. எனவே இந்தக் கட்சியில் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு இடமிருக்கிறதா?அந்த கட்சியில் அனைவரும் இன்று ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

நிதி தொடர்பான முதன்மையானவர் ஓரங்கட்டப்பட்டபோது எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும். இன்று ஐக்கிய மக்கள் சக்தி சிறு தரப்பினரிடம் சிக்கியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் அங்கு இல்லை. எனவே, எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைத்து உறுப்பினர்களுக்கும் எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுக்கிறேன். இந்த நாட்டை கடனில் இருந்து காப்பாற்றுவோம். அதற்காக ஒன்றிணைந்து செயல்படுவோம். என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நிகழ்வில், ஐ.தே.க உபதலைவர் ருவன் விஜேவர்தன,தேசிய அமைப்பாளர் சாகல ரத்னாயக்க,ஐ.தே.க தவிசாளர் வஜிர அபேவர்தன,முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கட்சி செயலாளர் பாலித ரங்க பண்டார,கொழும்பு மாவட்ட தலைவர் ரவி கருணாநாயக்க, அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரும் உரையாற்றினர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT