Home » கொட்டகலையில் நாளைமறுதினம் இ.தொ.காவின் மகளிர்தின விழா

கொட்டகலையில் நாளைமறுதினம் இ.தொ.காவின் மகளிர்தின விழா

by Gayan Abeykoon
March 8, 2024 4:34 pm 0 comment

லங்கை தொழிலாளர் காங்கிரசின் மாபெரும் மகளிர் தின பெருவிழா எதிர்வரும் 10ம் திகதி (10.03.2024) கொட்டகலை காங்கிரஸ் தொழில்நுட்ப வளாகத்தில் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. இ.தொ.காவின் இணை மாநிலங்கள் இணைந்ததாக பெருந்திரளான மங்கையர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.  

இ.தொ.காவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இ.தொ.காவின்; பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் நிதிச்செயலாளரும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கண்காணிப்புக்குழு பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரது பரிந்துரைக்கமைய, மலையக பிரதேசங்களிலுள்ள இயக்குனர்கள், மாநில, மாவட்ட பிரதிநிதிகள் மகளிர் இணைப்பதிகாரிகள், இ.தொ.காவின் அனைத்து உத்தியோகத்தர்களும் இப்பெருவிழாவை ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

இதில் பேச்சுக்கள், கலாசார நிகழ்வுகள், சிலம்பாட்டம், கும்மி நடனம், வீதி நாடகம், கிராமிய நடனங்கள் இடம்பெறவுள்ளன. இ.தொ.காவின் பிரதித் தலைவரான திருமதி. அனுசியா சிவராஜா இப்பெருவிழாவிற்கு தலைமை வகிப்பார்.

மலையக மகளிர் பிற சமூக மகளிருக்கு சமமாக சிந்திக்கவும், செயற்படவும் வாழவும் வேண்டும் என்பதற்காக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான். குறிப்பாக மகளிருக்கு 52 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி இ.தொ.காவின் பல்வேறு பிரிவுகளிலும் அவர்களை பங்களிப்பு செய்ய வைத்தவர் அவர். தலைமைபயிற்சி, மகளிர் முகாமைத்துவம், சமூக உணர்வு, அரசியல் பாசறை, தொழிற்சங்க பணியென்று மலையக மகளிரை பன்முகத் தன்மை கொண்டவர்களாக மாற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். அதில் வெற்றியும் கண்டார். அதன் பலனாக இ.தொ.காவில் முக்கிய பொறுப்புகளை மலையக மகளிருக்கு மிகச் சாதுரியமாக செய்துவருகின்றமை கவனிக்கத்தக்கது.

இ.தொ.காவின் பிரதித்தலைவரான திருமதி அனுசியா சிவராஜா தொழிற்சங்கதுறையில் பல்வேறு மட்டங்களிலும் அங்கம்வகித்து மத்திய மாகாண சபை உறுப்பினராக, மாகாண கல்வியமைச்சராக, இ.தொ.காவின் நிர்வாகச் செயலாளராக, பின்னர் பொதுச்செயலாளராக பல பொறுப்புகளை வகித்தமை இன்று நல்ல உதாரணம். எனவே தான் மகளிர் தின நிகழ்வுகளில் மகளிரை மாண்புபடுத்திட அமரர் தொண்டமானின் எழுச்சி நிகழ்வுகளை ஞாபகப்படுத்துவது சாலவும் பொருந்தும்.

பெண்களின் பலர் தோட்டக்கமிட்டி தலைவிகளாகவும், மாதர்சங்க தலைவிகளாகவும் இருந்து வருகிறார்கள். இப்பெண் உறுப்பினர்கள் பலர் தேயிலை மலை மேற்பார்வையாளர்களாகவும் (சூபர்வைசர்) கங்காணிகளாகவும், உதவி தோட்ட அதிகாரிகளாகவும் அமையப் பெற்று இருக்கின்றார்கள். மாகாண சபைகளிலும் பிரதேச சபைகளிலும் நகர சபைகளிலும் இந்தப் பெண்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த வகையில் மலையகத் தமிழ் பெண்கள் நாடளாவிய ரீதியில் உள்ளுராட்சி சபைகளில் 27 அங்கத்தவர்களை கொண்டிருந்தமை வரலாற்றில் பெருமையே. கிளை பணிமனைகளில் பிரதிநிதிகளாக பலர் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள். பலர் உப தலைவர்களாகவும் இருப்பது பெருமைத் தரக்கூடிய விடயமாகும்.

இம்மாபெரும் மகளிர் தின நிகழ்வுகளில் இ.தொ.காவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் நிதிச்செயலாளரும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கண்காணிப்புக்குழு பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் இ.தொ.கா பிரதி தலைவர்கள், நிர்வாகச்செயலாளர், சிரேஷ்ட சட்ட ஆலோசகர், கணக்காளர், உபதலைவர்கள், அரசியல் அமைப்பாளர்கள், தேசிய அமைப்பாளர்கள், இ.தொ.காவின் உயர்மட்ட அதிகாரிகள் இயக்குனர்கள், மாநில, மாவட்டப்பிரதிநிதிகள் அனைத்து உத்தியோகத்தர்கள் ஆகியோர் அடங்களாக மகளிர் இணைப்பதிகாரிகள், பிரதேச சபையின் தலைவர்கள், உறுப்பினர்கள், மாவட்ட மகளிர் தலைவிகள், மகளிர் அணி நிர்வாக சபை பெண் உறுப்பினர்கள், முன்னால் பிரதேச சபை பெண் உறுப்பினர்கள், பெருந்தோட்ட சேவையாளர்களாக பணிபுரியும் பெண்கள் உத்தியோகஸ்தர்கள், பல்வேறு தொழில்துறைகளில் ஈடுபட்டுள்ள மகளிர் அமைப்புகள் இதில் பங்கேற்கவுள்ளனர் பல்வேறு கலாசார நிகழ்வுகளோடு இ.தொ.காவின் அங்கத்தவர்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

தேவதாஸ் சவரிமுத்து…

சிரேஷ்ட ஊடக இணைப்பாளர்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT