சர்வதேச மகளிர் தினமான இன்று (08) காலை 10.00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
மகளிர் தினத்தை முன்னிட்டும், முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் ஏழு வருட பூர்த்திக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று இப்போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தெரிவித்தனர்.
இக்காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வடக்கு, கிழக்கு 8 மாவட்டங்களை சேர்ந்த உறவினர்கள், தென்பகுதியில் இருந்து வருகை தந்த மதகுரு செறாட் ஜெயவர்த்தன உள்ளிட்ட குழுவினர் ஆதரவு வழங்கியிருந்தனர்.
குறித்த போராட்டத்தின்போது இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்?, நீதி தேவதை ஏன் கண்மூடி விட்டாய்?, சர்வதேசமே இன்று பெண்கள் தினமா? பெண்கள் ஒடுக்கப்படும் தினமா?, முடிவில்லா துயரம் தான் தமிழ் தாயின் தலைவிதியா?, 55 ஆவது தொடரிலாவது எமக்கு நீதி கிடைக்குமா?, கால அவகாசம் வேண்டாம் முறையான நீதி விசாரணையே வேண்டும், பெண்கள் நாட்டின் கண்களா ? இல்லை கண்ணீருக்காக கண்களா? போன்ற பல்வேறு வாசகங்களையுடைய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஓமந்தை விஷேட நிருபர்