கனடா ஒட்டாவா பகுதியில் இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கனடாவில் கல்வி கற்கும் 19 வயதுடைய Febrio De-Zoysa என்ற இலங்கையர் என ஒட்டாவா பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது மிகக் குறைவாகவே பேசியுள்ளதாகவும், நீதிமன்றத்தில் மீண்டும் அமர்வதற்கு முன்பு தனது பெயரையும் பிறந்த இடத்தையும் மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் 14ம் திகதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
சந்தேகநபர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த சந்தேகநபர் விக்கிரமசிங்க குடும்பத்தை ஏன் கொலை செய்தார் என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.
குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்ட குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
புதன்கிழமை (06) இரவு 10:52 மணியளவில் 911 என்ற எண்ணுக்கு இரண்டு அழைப்புகள் வந்ததாகக் ஒட்டாவா பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சந்தேக நபரை சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர்.
கொலைச் சம்பவத்திற்கு முன்னர் இந்த இலங்கைக் குடும்பத்திடமிருந்து பொலிஸாருக்கு எவ்வித முறைப்பாடும் கிடைக்கவில்லை என ஒட்டாவா பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் முதலில் துப்பாக்கிச் சூடு என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் ஆயுதமொன்றால் கொலைகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சுமார் மூன்று தசாப்தங்களில் ஒட்டாவாவில் இவ்வாறான ஒரு கொலை இடம்பெற்றது இதுவே முதல் தடவை என மேயர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் வருமாறு:
தாய் – தர்ஷனி பண்டாரநாயக்க – 35 வயது
இனுக விக்கிரமசிங்க – 07 வயது
அஸ்வினி விக்கிரமசிங்க – 04 வயது
றின்யானா விக்கிரமசிங்க – 02 வயது
கெலீ விக்கிரமசிங்க – 02 மாதங்கள்
காமினி அமரகோன் என்ற 40 வயதுடைய நபரே கொல்லப்பட்ட மற்றைய நபராவார்.
இந்த சம்பவத்தில் பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்துள்ளதுடன் அவரது பெயர் தனுஷ்க விக்ரமசிங்க எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.