ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினராக எஸ்.சி.முத்துகுமாரன இன்று (05) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
அநுராதபுரம் தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன இராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முத்துக்குமாரன நியமிக்கப்பட்டார்.
அனுராதபுரம் மாவட்டத்திற்கான SLPP பட்டியலில் அவர் அடுத்த இடத்தில் இருந்தார்.
பிரேமரத்ன தனது இராஜினாமா கடிதத்தை பெப்ரவரி 27 ஆம் திகதி பாராளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளரிடம் கையளித்திருந்தார்.
1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1) ஆம் பிரிவின் பிரகாரம் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக, பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு சபையில் உள்ள வெற்றிடத்தை எழுத்துப்பூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1953ஆம் ஆண்டு பிறந்த எஸ்.சி. முத்துகுமாரன அநுராதபுரம் மத்திய கல்லூரியில் தனது கல்வியைப் பெற்றுக்கொண்டார்.
இவர் 1977ஆம் ஆண்டு தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். 1991ஆம் ஆண்டு கலாவெவ பிரதேச சபைக்குத் தெரிவுசெய்யப்பட்டதுடன், 1993 மற்றும் 1999ஆம் ஆண்டுகளில் வடமத்திய மாகாணசபைக்குத் தெரிவுசெய்யப்பட்டார்.
சுதந்திரக் கட்சியின் கலாவெவ கிளையின் பிரதித் தலைவராகவும் அவர் பணியாற்றியிருந்தார். அத்துடன், 2000ஆம் ஆண்டு வடமத்திய மாகாணசபையின் கமத்தொழில் அமைச்சர் பதவியையும் வகித்திருந்தார்.
2010ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் அநுராதபுர மாவட்டத்திலிருந்து ஏழாவது பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.