தரமற்ற Immunoglobulins ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க அந்த சம்பவம் தொடர்பில் இன்று (04) நீதிமன்றத்தில் ஆஜராகி இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கவுள்ளார்.
அதற்காக அவர் தற்போது மாளிகாகந்த நீதவான் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
Immunoglobulins மருந்து கொள்வனவு சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்க மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க முன்னிலையில் நேற்று முன்தினம் 02ஆம் திகதி அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க குற்றவியல் சட்டக் கோவையின் 127 ஆவது சரத்துக்கு இணங்க நன்றாக சிந்தித்து, சுயாதீனமாக, எந்த வெளி அழுத்தங்களும் இன்றி இந்த இரகசிய வாக்குமூலத்தை வழங்குவதற்கு விருப்பமா என அதன் போது மாளிகாகந்த நீதவான் சந்தேகநபரிடம் வினவினார்.
அதற்கு தமது தரப்பான சந்தேக நபர் விருப்பம் தெரிவிப்பதாக சந்தேக நபர் சமன் ரத்நாயக்க சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி காஞ்சன ரத்வத்தே குறிப்பிட்டிருந்தார்.
அதனையடுத்தே சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜராகி அந்த இரகசிய வாக்குமூலத்தை இன்று 04ஆம் திகதி வழங்குவதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் இந்த சந்தேக நபர், குறித்த சம்பவம் தொடர்பான ஏனைய சந்தேக நபர்களுடன் தடுத்து வைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்ட நீதவான் அவரை மஹர சிறைச்சாலையில் தடுத்து வைப்பதற்கு சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்தார்.
மேற்படி மருந்து கொள்வனவு சம்பவம் தொடர்பில் 11 மணித்தியாலம் மேற்கொண்ட விசாரணையையடுத்து குற்றத்தெடுப்பு விசாரணைத் திணைக்களம் கடந்த முதலாம் திகதி இரவு சந்தேக நபரான சமன் ரத்னநாயக்கவை கைது செய்து 02ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
லோரன்ஸ் செல்வநாயகம்