சவூதி அரேபிய கால்பந்து சம்மேளனம் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஓர் ஆட்டத்தில் விளையாடத் தடை விதித்துள்ளது. கடந்த வாரம் நடந்த ஆட்டமொன்றின்போது மைதானத்தில் அவர் சினமூட்டும் சைகையைச் செய்ததாக சம்மேளனம் கூறியது.
அந்தச் சைகைக்காக அல் நாசர் அணி வீரரான ரொனால்டோவுக்கு 30,000 ரியால் (8,000 டொலர்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆட்டத் தடை, அபராதம் ஆகியவற்றை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் சம்மேளனம் கூறியுள்ளது.
அல்-ஷபாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோவின் அணி 3–2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
பின்னர், அவரது பரம வைரி லயனல் மெஸ்ஸியின் பெயரை உரக்கக் கத்திக்கொண்டிருந்த ரசிகர்களை நோக்கி ரொனால்டோ மீண்டும் மீண்டும் சினமூட்டும் சைகையைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
அதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. அது சவூதி அரேபிய கால்பந்துச் சம்மேளனத்தின் கவனத்துக்கும் சென்றது.
இதற்கிடையே ரொனால்டோ, வெற்றியைக் கொண்டாடவே அந்தச் சைகையைச் செய்ததாகக் கூறினார் என்று சவூதியிலுள்ள விளையாட்டுச் செய்தித்தாள் அல்-ரியாடியா தெரிவித்தது.
அதில் தவறேதும் இல்லை என்றும் ஐரோப்பாவில் அது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் என்றும் அவர் விளக்கம் தந்தார்.
எனினும் இந்தத் தடையால் ரொனால்டோ வியாழக்கிழமை (29) நடைபெற்ற அல் நாசர் – அல் ஹஸ்ம் இடையிலான போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த போட்டி 4–4 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.