பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஏழு மாடி கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் குறைந்தது 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு பத்து மணி அளவில் உணவகம் ஒன்றில் ஆரம்பித்த தீ மேல் மாடிகளுக்கு வேகமாக பரவியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது எழுபது பேர் வரை மீட்கப்பட்டிருப்பதோடு பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்திருப்பதோடு தீ ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உணவகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்தே தீ ஏற்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அடுக்குமாடி கட்டடத்தில் புடவைக் கடைகள் மற்றும் பாதணி கடைகள் என பல கடைகள் இருந்துள்ளன.
பங்களாதேஷில் வர்த்தக மற்றும் குடியிருப்பு கட்டடங்களில் தீ ஏற்படுவது வழக்கமாக நிகழ்ந்து வருகிறது. மோசமான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை முறையாக பின்பற்றாமை இதற்கு காரணம் என குறைகூறப்படுகிறது.