Tuesday, October 15, 2024
Home » புள்ளிவிபர முறைமை நவீனமயமாக்கலுக்கு ஐ.நா. சனத்தொகை நிதியம் தொடர் உதவி
டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணம்

புள்ளிவிபர முறைமை நவீனமயமாக்கலுக்கு ஐ.நா. சனத்தொகை நிதியம் தொடர் உதவி

by mahesh
March 2, 2024 11:30 am 0 comment

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்துக்காக புள்ளிவிபர முறைமையை நவீனமயப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் உதவி வழங்க முன்வந்துள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் (United Nations Population Fund) ஆசிய பசுபிக் பணிப்பாளர் பியோ ஸ்மித்துக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் (29) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

கடந்த ஐம்பது வருடங்களில் இலங்கையின் புள்ளிவிபர முறைமையை நவீனமயப்படுத்தல் மற்றும் சனத்தொகை தரவு முறைமையை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் வழங்கிய ஆதரவுக்கு பிரதமர் இதன்போது நன்றி தெரிவித்தார். டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்துக்கு தரவு முறைமைகளை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் பிராந்திய பணிப்பாளர் உறுதியளித்தார். பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகளுக்கு ஆதரவான திட்டங்களுக்கு உதவுவதற்கும் தேசிய அளவில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் அவர் விருப்பம் தெரிவித்தார். மேலும், அடிமட்டத்தில் சமூகங்களிடம் சென்று அவர்களின் தேவைகளை மதிப்பிடவும், அதற்கேற்ப ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் பயனுள்ள ஆதரவிற்கான துறைகளை அடையாளம் காணவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நேற்றையதினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து அடிமட்டத்தில் உள்ள தேவைகளை இனங்கண்டு கொள்ள முயற்சித்ததாகவும் கிராமிய சமூகத்தின் பாரிய பிரச்சினையான பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் வெற்றியளித்திருப்பதை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார். பல பகுதிகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைப் பிரச்சினைகள் இருப்பதால், அந்த துறையில் விழிப்புணர்வு திட்டத்தை வலுப்படுத்த தமது அமைப்பு ஆதரவளிக்கும் என்றும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் பிராந்திய பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியமானது சுகாதாரம், கல்வி மற்றும் பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பங்குதாரர்களுடன் நீண்டகால ஒத்துழைப்புடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

குடும்பக் கட்டுப்பாடு, மகப்பேறு மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான சுகாதாரச் சேவைகள் உள்ளிட்ட விரிவான பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரச் சேவைகளை வலுப்படுத்த வழங்கப்படும் ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது என்று பிரதமர் கூறினார்.

தகவலறிந்த முடிவெடுப்பதற்கான அணுகக்கூடிய தகவல்கள் மற்றும் சேவைகளை உறுதிசெய்து இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான இலங்கையின் விரிவான அணுகுமுறைகளை ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் பிராந்திய பணிப்பாளர் பாராட்டினார். ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழா நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.

கிராமிய பிரதேசங்களில் விரிவான மகப்பேற்று மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளை வழங்குவதற்காக நடமாடும் சுகாதார கிளினிக்குகளை நிறுவவும், நெருக்கடியன காலகட்டங்களின் போது அத்தியாவசிய பொருட்களை அணுகுவதை உறுதி செய்வதற்காக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் கண்ணியத்தை பேணும் வகையில் மகப்பேற்று மற்றும் அத்தியாவசிய கருவித்தொகுதிகளை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் மேற்கொண்ட நடவடிக்கைகள் கிராமிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதி குன்லே அதெனியி மற்றும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதிய வேலைத்திட்ட நிபுணர் மது திஸாநாயக்க ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x