காசாவில் போர் வெடித்து ஐந்து மாதங்களை தொடும் நிலையில் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 30,000ஐ தாண்டியுள்ளது.
சில நாட்களில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் ஒன்று பற்றி மத்தியஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்து வரும் அதேநேரம், வடக்கு காசாவில் பஞ்சம் சூழ்ந்து வருவது பற்றி உதவி நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
காசா நகரின் அல் ஷிபா மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழப்பு மற்றும் பரந்த அளவிலான பஞ்சத்தினால் சிறுவர்கள் உயிரிழந்து வருவதாக காசா சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் குத்ரா தெரிவித்துள்ளார். இவ்வாறான மேலும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு சர்வதேச அமைப்புகள் அவசர நடவடிக்கை எடுப்பதற்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
காசாவின் மோசமான சூழலை மேற்கோள் காட்டி இஸ்ரேல் எல்லைக்கடவைகளை மேலும் திறக்க வேண்டும் என்று யுஎஸ்எயிட் தலைவர் சமன்தா பொவர் வலியுறுத்தியுள்ளார். மனிதாபிமான உதவிகள் வேகமாக அதிகரிப்பதற்கு அது தீர்க்கமாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘இது உயிருக்கும் மரணத்துக்கும் இடையிலான விடயம்’ என்று எக்ஸ் சமூகதளத்தில் பொவர் குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் இஸ்ரேல் வான், தரை மற்றும் கடல் மார்க்கமாக நடத்தும் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30,035 ஆக அதிகரித்துள்ளது என்று காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக நேற்றுக் காலை அங்கு தாக்குதல்கள் உக்கிரமைந்திருந்தது. இதில் 104 பேர் கொல்லப்பட்டு மேலும் 760 பேர் காயமடைந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
ஆறு வார போர் நிறுத்தம் ஒன்றுக்கு அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து ஆகிய மத்தியஸ்த நாடுகள் முயற்சித்து வருகின்றன. எனினும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸிடம் இருந்து இன்னும் உறுதியான பதில் கிடைக்கவில்லை.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து ஆரம்பமான இந்தப் போரில் ஹமாஸை முழுமையாக ஒழிக்கப்போவதாக இஸ்ரேல் சூளுரைத்து வருகிறது.
காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் காசாவுக்கு உதவிகள் செல்வது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட போர் நிறுத்தம் ஒன்றை எதிர்வரும் மார்ச் 10 அல்லது 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்திற்கு முன்னர் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் முழுமையான போர் நிறுத்தம் ஒன்றை வலியுறுத்தும் ஹமாஸ் காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் முழுமையாக வாபஸ் பெற கோருகிறது.
எனினும் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் போர் நிறுத்தத்தில் இஸ்ரேலிய துருப்புகள் நகரங்கள் மற்றும் மக்கள் செறிந்த பகுதிகளில் இருந்து வெளியேறவே கோரப்பட்டுள்ளது.
உடன்பாடு ஒன்றின் இறுதிக் கட்டத்தை எட்டுவதற்கு (அமெரிக்க ஜனாதிபதி ஜோ) பைடன் எம் அனைவரையும் தள்ளி வருவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.
இதில் எகிப்து எல்லையை ஒட்டி காசாவுக்கு உதவிகள் வரும் வாயிலாக இருக்கும் ராபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் நிலையில் அந்த நகரம் தீர்க்கமானதாக உள்ளது.
மறுபுறம் வடக்கு காசாவுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக எந்த ஒரு மனிதாபிமான அமைப்பும் உதவிகளை கொண்டு செல்ல முடியாமல் இருப்பதாக உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேல் உதவிகள் செல்வதை முடக்குவதாக அது குற்றம்சாட்டியுள்ளது.
அண்டை நாடான ஜோர்தான் தெற்கு காசாவுக்கு வானில் இருந்து உதவிகளை போட்டுள்ளது. ‘எதுவும் மாற்றமடையாத பட்சத்தில் வடக்கு காசாவில் பஞ்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது’ என்று உலக உணவுத் திட்ட பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் கார்ல் சகாவு எச்சரித்திருந்தார்.
மக்கள் நிரம்பி வழியும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். போர் நிறுத்தம் ஒன்று அந்த நடவடிக்கையை தாமதப்படுத்த மாத்திரமே செய்யும் என்றும் ஹமாஸுக்கு எதிரான முழு வெற்றிக்கு ரபா நடவடிக்கை அவசியமானது என்றும் அவர் கூறுகிறார்.
ரபாவை எல்லையாகக் கொண்டிருக்கும் எகிப்து, இந்தப் படை நடவடிக்கை பேரழிவை ஏற்படுத்தும் என்று எச்சரித்து வருகிறது.
காசாவின் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் மற்றவர்கள் போர் தமது வீட்டை விட்டு இடம்பெயர்ந்து ரபா பகுதியில் இருக்கும் டால் அல் சுல்தான் மாயனத்தில் நாட்களை கழித்து வரும் அஹமது என்பவர், அந்த மயானத்தில் புதைகுழிகளை வரிசையாகத் தோண்டுவது மற்றும் அடையாளப்படுத்துவதற்கு கற்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
‘நான் வெவ்வேறு நபர்களைப் பார்க்கிறேன், ஆனால் ஒரே முகத்துடன், ஒரே துன்பத்துடன். மனவருத்தம் தருகிறது’ என்று அவர் குறிப்பிட்டார். ‘என்றாலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வேலையை நிறுத்த நான் விரும்புகிறேன்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.