அல்லாஹ் மாபெரும் கருணையாளன். அவனது கருணையின் காரணமாகவே மனிதர்களாகிய நாம் செய்யும் பாவங்களுக்காக அவன் உடனடியாகத் தண்டிப்பதில்லை. மனிதன் தவறு செய்யக்கூடிய பண்பை இயல்பாகக் கொண்டுள்ளான். இதனை அல்குர்ஆன், ‘உங்கள் மீது இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் அன்பும், கருணையும் பொழிந்திருக்காவிட்டால், எந்த விஷயங்களில் நீங்கள் மூழ்கியிருந்தீர்களோ அதன் விளைவாக உங்களுக்குப் பெரும் வேதனை ஏற்பட்டிருக்கும்’ (24:14) என்று குறிப்பிட்டிருக்கிறது.
உலகில் ஒரு இறைநம்பிக்கையானுக்கு அல்லாஹ் கொடுக்கும் சோதனைகள் கூட அவனின் கருணையேயாகும். ஏனெனில், சோதனைகள் ஊடாகத் திருந்தி வாழ்வதற்கு அல்லாஹ் வாய்ப்பளிக்கிறான், அல்லது அந்த சோதனைகளையே அவனது பாவத்திற்கு தண்டனையாக்கி விடுகிறான். அதன் ஊடாக மறுமையில் எந்தக் குற்றமும் அற்றவனாக அவனைச் சுவனத்தில் நுழையச்செய்வான்.
‘இறுதி விளைவு, நீங்கள் ஆசைப்படுவது போன்றோ, வேதம் அருளப்பட்டவர்கள் ஆசைப்படுவது போன்றோ ஏற்படப்போவதில்லை. எவன் தீமை செய்தாலும் அவன் அதற்குரிய விளைவை அடைவான்’ (4:123) என்ற அல் குர்ஆன் வசனம் இறங்கியபோது, அபூபக்கர் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் பயந்த வண்ணமே கேட்டார். ‘அல்லாஹ்வின் தூதரே! இந்த இறை வசனத்தைப் பார்த்தால் மறுமை வெற்றி என்பது கடினமாக இருக்கும் என்றல்லவா தோன்றுகிறது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இறை நம்பிக்கையாளர்களுக்கான தீமையின் விளைவு, உலகில் ஏற்படும் இந்தச் சோதனைகள் தான். ஏனெனில் மறுமையில் பாவமற்றவனாக அல்லாஹ்வை சந்திப்பதற்காக ஒருவர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதற்குரிய கூலியை பல மடங்காக அல்லாஹ் கொடுக்கின்றான். இதுவும் அவனது கருணையேயாகும்.
ஒரு தடவை மதீனாவில் நபித்தோழர் ஒருவர் மரணமடைந்தபோது அவரைப்பற்றி மக்கள் பலரும் பலவாறாகக் கதைத்தனர். இவர் ஒரு பாவி… நன்மையே செய்யாதவர்… அநியாயக்காரர்… என்றெல்லாம் மக்கள் பேசிக் கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் அவ்விடம் வந்தார்கள். அம்மக்களிடம் நபிகளார் கேட்டார்கள், ‘ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள்? இவர் நன்மையே செய்யவில்லை என்று எப்படி நீங்கள் கூறுகின்றீர்கள். அதற்கு மக்கள், ‘எங்களுக்கு தெரிந்த இவர் எந்த நன்மையும் செய்யவில்லை’ என்றனர். அச்சமயம் அக்கூட்டத்தில் இருந்த ஒரு முதியவர் எழுந்து ‘எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ஒரு சமயம் மதீனாவை எதிரிகள் சூழ்ந்துகொண்ட போது நகருக்குள் எதிரிகள் வராமல் இருக்க நாங்கள் காவல் புரிந்தோம். ஆனால் எதிரிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்த வடக்கு எல்லையை மட்டும் காவல் காக்க எல்லாரும் தயங்கினார்கள். இவர் மட்டும்தான் ‘நான் போகின்றேன்’ என்று கூறி இரவு முழுவதும் காவல் புரிந்தார். இது ஒன்றுதான் நான் அறிந்த வகையில் இவர் செய்த நன்மை’ என்றார் அந்த முதியவர்.
நபி(ஸல்) அவர்களுக்கு மகிழ்ச்சி பொறுக்க முடியவில்லை. அச்சமயம் நபி (ஸல்) அவர்கள், ‘இது சுவனவாசிகளின் செயல், இவர் தமது சமூகத்தை காக்க உயிரையே கொடுக்கவும் தயாராக இருந்துள்ளார். இவர் சுவனவாசி. இறந்தவர்கள் குறித்து நீங்கள் எப்போதும் நல்லவற்றையே பேசுங்கள். மனிதன் செய்த நற்செயலை அல்லாஹ் மட்டுமே அறிவான்’ என்று கூறினார்கள். (நபிமொழி)
இந்நபிமொழியின் ஊடாக, ஒருவர் செய்த ஒரே ஒரு செயலைக் கூட அல்லாஹ் வீணாக்குவதில்லை என்பது தெளிவாகிறது. அதற்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குகிறான் என்றால் அவன் எவ்வளவு கருணையாளன் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
‘ஒரு இறை நம்பிக்கையாளன் உலகை பிரிந்து மறுமையை நோக்கிய பயணத்தின் போது உயிர் பறிக்கப்படும் வேளையில் வெள்ளை ஆடையில் பிரகாசமான முகத் தோற்றத்துடன், நல்ல நறுமணத்துடன் கண்ணுக்கு எட்டிய தொலைதூரம் வரை வானவர்கள் நிறைந்து நிற்பதைக் காண்பான். குவளையிலிருந்து நீர் எப்படி வேகமாக சிதறுமோ அவ்வளவு எளிதாக அவனது உயிர் கைப்பற்றப்படும். உயிர் கைப்பற்றப்பட்டால் ‘மலகுல்மௌத்’ எனும் வானவரிமிருந்து அந்த உயிரை மற்ற வானவர்கள் வாங்கி விண்ணுலகிற்கு எடுத்துச் சொல்வார்கள். வானுலகெங்கும் இவ்வுயிர் நறுமணம் வீசும். அங்கிருக்கும் மற்ற வானவர்கள் வியப்புடன் யாருடைய உயிர் இது? என்று கேட்பார்கள். அதற்கு ‘இன்னாருடைய மகன் இன்னாரின் உயிர்’ என்று பதில் கூறப்படும். அப்போது கருணையாளன் அல்லாஹ், ‘நல்லடியார்களின் வினைப்பட்டியலில் எனது அடியாரின் பெயரையும் சேருங்கள். இவரை பூமிக்கு எடுத்துச் செல்லுங்கள்’ என்பான்.
பின்னர் வானவர்களின் கேள்வி பதில் மண்ணறையில் இடம்பெறும். அக்கேள்விகளுக்கு (மரணித்த) இவன் சரியாகப் பதில் கூறுவான். அப்போது அவனது மண்ணறையில் ஒரு வாசல் ஏற்படுத்தப்படும். அவ்வாசல் வழியாக சுவனத்தில் தனக்கான தங்குமிடத்தை அவன் காண்பான். பின்னர் திடீரென ஒரு உருவம் அங்கு தோன்றும். அழகிய தோற்றத்தில் நல்ல நறுமணத்துடன் அவர் இருப்பார். நீர் யார்? என்று (மரணித்த மனிதர் கேட்பார். அதற்கு அவர், ‘நான் தான் உனது நற்செயல்கள். மறுமை நிகழும் வரை உனக்கு துணையாக இருப்பேன்’ அப்போது அந்த (மரணித்த) அடியான், ‘என் ரப்பே! மறுமையை (விரைவாக) கொண்டுவா… மறுமையைக் கொண்டுவா…! என்மீது எவ்வளவு கருணை புரிந்துள்ளாய் என்பதை எனது பெற்றோரிடமும் குடும்பத்தாரிடமும் நான் கூறவேண்டும்’ என்பான் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்)
அல்லாஹ்வின் கருணைவாசல் அவ்வளவு விசாலமானது, ‘அல்லாஹ்வின் கருணை பற்றி நம்பிக்கை இழக்க வேண்டாம்’ (39:53) என்று அல் குர்ஆன் குறிப்பிட்டிருக்கிறது. அல்லாஹ்வின் கருணையை அதிகளவில் பெற்றுக்கொள்வதற்கான வழிகளாவன, ‘பிறர்மீது கருணை காட்டுங்கள், திண்ணமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்பவர்களுக்கு அருகில் இருக்கிறது (7:56) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘பூமியில் உள்ளவர்கள் மீது நீங்கள் கருணை காட்டினால் வானில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்’
(ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)
இரண்டு ரக்அத்கள் என்றாலும் உபரியான வணக்கங்களை வீட்டில் தொழுங்கள், முடிந்தால் அந்த தொழுகையையே கூட்டாகத் தொழுங்கள். ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், ‘பள்ளிவாசலில் நீங்கள் தொழுதால் உங்கள் வீடுகளில் தொழுவதற்கும் ஒரு பகுதியை மீதி வையுங்கள். உங்கள் குடும்பத்திற்கு அது நன்மையாக இருக்கும்’ என்று குறிப்பிட்டார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம்)
மேலும் ‘உறவுகளைப் பேணுங்கள். ஏனெனில், உறவுகளை வெட்டி வாழ்பவர்கள் இருக்கும் இடத்தில் அல்லாஹ்வின் கருணை இறங்காது என்றும் அன்னார் குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம்: திர்மிதி, அபூதாவூத்)
அதேநேரம் பெற்றோருடன் நல்லமுறையில் நடந்து கொள்ளுங்கள். இது தொடர்பில் அல் குர்ஆன், ‘மேலும் பண்புடனும் கருணையுடனும் அவர்களிடம் நடந்து கொள்ளுவீராக. மேலும் நீர் இறைஞ்சிய வண்ணம் இருப்பீராக! ‘என் ரப்பே! சிறு வயதில் என்னை எவ்வாறு இவர்கள் கருணையுடனும் பாசத்துடனும் வளர்த்தார்களோ… அவ்வாறு இவர்கள் மீதும் நீ கருணை புரிவாயாக! (17:24) என்றுள்ளது.
அல்குர்ஆனை அதிகமதிகம் பொருள் விளங்கி ஓதுங்கள். ‘இறை நம்பிக்கையாளருக்கு நிவாரணமாகவும் அருளாகவும் உள்ளவற்றை நாம் இறக்கியருளிக் கொண்டிருக்கிறோம்’ (17:82)
‘மேலும் குர்ஆன் ஓதப்படும்போது அதனை கவனமாகக் கேளுங்கள். மௌனமாகவும் இருங்கள்! உங்கள் மீது அல்லாஹ்வின் கருணை பொழியப்படலாம் (7:284)
ஆகவே அல்லாஹ்வின் எல்லையில்லாக் கருணையை அடைந்து கொள்வதற்கு ஏற்ப வாழ்வொழுங்கை அமைத்திடுவோம்.