இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களுள் ஒன்றாக நோன்பு திகழ்கிறது. இந்நோன்பானது ஹிஜ்ரி 02ஆம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. இதனை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். இஸ்லாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதமே ரமழான் ஆகும். ஸஹாபாக்கள் ரமழானை ஆவலுடன் எதிர்பார்த்து அதனை அடையும் பாக்கியத்தை தருமாறு அல்லாஹ்விடம் அதிகம் பிரார்த்தனை செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.
ரமழானில் நோன்பு நோற்பது முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதீனமுள்ள ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். இப்புனிதமான ரமழான் மாதமானது ஏனைய மாதங்களை விடவும் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள், “ரமழான் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி ) அதுமட்டுமன்றி அல்குர்ஆனை அல்லாஹ் புனித ரமழான் மாதத்திலேயே இறக்கியருளினான். இம்மாதத்தில் “லைலதுல் கத்ர்” எனும் புனிதமான ஓர் இரவு இருக்கிறது. இது ஆயிரம் மாதங்களை விட சிறந்ததோர் இரவாகும். இந்த இரவில் தான் அல்குர்ஆன் இறக்கப்பட்டது.
நோன்பாளிகள் சுவர்க்கத்தில் “ரய்யான்” என்று சொல்லப்படும் வாசலினூடாக நுழைவார்கள். இது நோன்பாளிகள் மாத்திரம் நுழையும் விசேட வாசலாகும். இம்மாதத்தில் செய்கின்ற அமல்கள் பல மடங்கு நன்மைகளைப் பெற்றுத்தரக்கூடியனவாகும். அதுமட்டுமல்லாமல் ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலைச் செய்யப்படுகின்றனர். இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்: அஹ்மத்).
இவ்வாறு அருள் நிறைந்த மாதம் எம்மை நோக்கி நெருங்கி வருகிறது.
இம்மாதத்தில் நல்ல முறையில் நோன்பு நோற்பதற்கு நாம் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் எம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். ஷஃபானுடைய சுன்னாத்தான நோன்புகளை நோற்பதன் மூலம் ரமழானுடைய பர்ளான நோன்பை நோற்பதற்கு உடல் ரீதியாக நம்மை தயார்படுத்திக்கொள்ளும் ஒரு சிறந்த வழிமுறையாகும். வருகின்ற ரமழானை பிரயோசனமான முறையில் கழிக்க முயற்சிசெய்ய வேண்டும். அதற்கான திட்டத்தை நாம் இப்போதே வகுத்துக்கொள்ள வேண்டும்.
இம்மாதத்தில் அல்குர்ஆனை அதிகமாக ஓத வேண்டும். அதன் கருத்துக்களை விளங்க முற்பட வேண்டும். நபி (ஸல்) அவர்கள், “நாம் நோற்ற நோன்பும், நாம் ஓதிய குர்ஆனும் மறுமையில் பரிந்து பேசும்” என்று கூறினார்கள். மேலும் இம்மாதத்தில் ஐவேளை தொழுகைகளை ஐமாஅத்தோடு தொழ முயற்சி செய்தல், அதிகமாக பிரார்த்தனைகளில் ஈடுபடல், நல்ல வார்த்தைகளைப் பேசுதல், மற்றவர்களுடைய மனம் புண்படாமல் நடத்தல், ஏழைகளுக்கு உதவுதல், அதிகமாக திக்ர் செய்தல், சண்டைகள், முரண்பாடுகளை தவிர்த்தல், ஸதகாக்கள் கொடுத்தல் போன்ற இன்னும் பல நற்காரியங்களை செய்வதற்கு இப்போதே திட்டமிட்டு அதற்காக முயற்சி செய்ய வேண்டும்.
நம்மிடமுள்ள தீய பழக்கங்களையும், தவறான செயற்பாடுகளையும் தவிர்த்து எம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். “எவன் பொய் சொல்வதையும், அதன் படி நடப்பதையும், விட்டு விடவில்லையோ அவன் பசியோடும், தாகத்தோடும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை, எவ்விதப் பயனுமில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதாரம்: புஹாரி).
பொறாமை கொள்ளல், புறம் பேசுதல், கோள் சொல்லல், அநியாயம் செய்தல், பெற்றோருக்கு நோவினை செய்தல் போன்ற தீய குணங்களை மாற்றி நற்குணங்களை வளர்த்துக்கொள்ள இந்த ரமழானை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துவோம். நேரத்தை வீணான காரியங்களில் செலவழிக்காமல் பிரயோசனமான காரியங்களில் நேரத்தை செலவிட முயற்சிக்க வேண்டும்.
ரமழான் எம்மில் நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், “ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து, எவர் ரமழான் மாதத்தை அடைந்து அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படாமல் நரகம் புகுவாரோ அவரை அல்லாஹ் (தன் அருளிலிருந்து) தூரமாக்கட்டும்’ என்று கூறி, ‘ஆமீன் என்று சொல்லுங்கள்’ என்றார்கள் நான் ‘ஆமீன்’ என்றேன்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்: முஸ்னத்).
எத்தனையோ ரமழான்கள் எங்களை விட்டு கடந்து சென்றுவிட்டது. எம்மில் எந்த மாற்றம் வந்திருக்கிறது? நாம் எத்தகைய முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம்? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ரமழானை அடைந்தும் எம்மில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லையாயின் நாம் தான் உண்மையான நஷ்டவாளிகள்.
கடந்த வருடத்தில் எங்களோடு வாழ்ந்தவர்கள், எங்களோடு நோன்பு நோற்றவர்கள் இன்று அவர்கள் மரணித்து மண்ணறைக்குச் சென்றுவிட்டார்கள். இன்னும் பலர் நோயாளிகளாகி விட்டார்கள். இந்த ஆண்டின் ரமழானை அடைந்துகொள்ளாமல் மரணித்துவிட்ட முஸ்லிம்கள் அனைவருக்குமாக நாம் பிரார்த்தனை செய்துகொள்வோம். அடுத்த ரமழானில் நாம் உயிரோடு இருப்போமா? என்பதை நாம் அறிய முடியாது. எனவே அருள் நிறைந்த ரமழானை அதற்குரிய முறையில் பயன்படுத்தி இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெற்றிடுவோம்.