Sunday, April 21, 2024
Home » இலங்கை முஸ்லிம்களது வரலாறு தொடர்பிலான ஆய்வரங்கம் நாளை

இலங்கை முஸ்லிம்களது வரலாறு தொடர்பிலான ஆய்வரங்கம் நாளை

by Gayan Abeykoon
March 1, 2024 8:00 am 0 comment

எம்.ஐ.எம். முஹியத்தீன் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் நிலையம் இலங்கை முஸ்லிம்களது வரலாறு தொடர்பிலான ஆய்வரங்கமொன்றை(Annual Symposium) நாளை இரண்டாம் திகதி  மாலை மூன்று மணிக்கு கொழும்பு தபால் திணைக்கள தலைமையக கேட்போர் கூடத்தில் நடத்துகிறது.

நிலையத்தின் ஆளுநர்சபைத் தலைவர் பொறியியலாளர் ஜௌபர் இஸ்மாயில் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆய்வரங்கில் நோக்க உரையை வரலாற்றுத்துறைப்பேராசிரியரும் புரூணை தாருஸ்ஸலாம் பல்கலைக்கழக ஓய்வு நிலைப்பேராசிரியருமான எஸ்.ஏ ஹுசைன்மியா நிகழ்த்தவுள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் எம் ஏ .நுஹ்மான், பேராதனைப் பல்கலக்கழக மெய்யியல் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ், களனிப்பல்கலைக்கழக தொல்பொருள் பட்டப்பின்படிப்பு நிறுவன சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, கொழும்பு பல்கலைக்கழக பொதுக்கொள்கை மற்றும் அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ். அனீஸ், எழுத்தாளர், பன்னூலாசிரியர் வரலாற்றுத்துறையில் முதுமாணி, வரலாற்றுத்துறை ஆய்வாளர் கலாநிதி றவூப் செயின், எழுத்தாளர், ஆய்வாளர், தொல்லியல்துறை பட்டபின்படிப்பு மேற்கொண்டுள்ள ஆசிப் ஹுசைன், ஆய்வாளர் தொல்லியல் துறையில் கலாநிதி ஜெஸ்மில் அப்துல் ரகீம், எழுத்தாளர், ஆய்வாளர் சிராஜ் மஷூர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபன செய்தி ஆசிரியர்,வரலாற்று ஆர்வலர் பர்ஹான் நவாஸ், சப்ரகமுவ பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் லறீன் அப்துல் ஹக் போன்றோர் தமது ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்கவுள்ளனர்.

இவ்வாய்வரங்கம் தொடர்பாக எம்.ஐ.எம்.முஹியத்தீன் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிராஜ் மஷூர் கருத்துத் தெரிவிக்கையில் “சித்திலெப்பையின் சகாவான I.L.M.அப்துல் அஸீஸ், 1907 இல் எழுதிய ‘A Criticism of Mr.Ramanathan’s Ethnology of the Moors of Ceylon” என்ற நூல்தான் இலங்கை முஸ்லிம்களது வரலாறு தொடர்பாக முஸ்லிம் தரப்பு சார்பில் வெளிவந்த முதல் நூல். அது வெளிவந்து சுமார் 115 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், நமது வரலாற்று அறிவின் நிைலவரம், திசைவழி எப்படி உள்ளது என்று அலசி ஆராய்வது முக்கியமாகும்” என்றார்.

இலங்கையின் சிறந்த ஆய்வாளராக,முற்போக்கு சிந்தனையாளராக, எழுத்தாளராக வாழ்ந்து மறைந்த அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக்கொண்ட மர்ஹூம் எம்.ஐ எம்.மொஹிடீனை நினைவு கூரும் வகையில் அக்கரைப்பற்றில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மர்ஹூம் ‘மர்ஹூம் எம்.ஐ எம். மொஹிடீன் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் நிலையம்’ வைபவரீதியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டது. மேலும் அன்னாரை கௌரவிக்குமுகமாக அவரின் பிறந்த இடமான அக்கரைப்பற்று இரண்டாம் மூன்றாம் குறிச்சி பொதுவீதி அக்கரைப்பற்று மாநகரசபையால் சூட்டப்பட்ட மொஹிடீன் வீதி என்ற பெயர்ப்பலகையும் மாநகரசபை உத்தியோகஸ்தர்கள் முன்னிலையில் மர்ஹூம் எம்.ஐ.எம். மொஹிடீன் ஆய்வு மற்றும்ஆவணப்படுத்தல் நிலைய ஆளுநர் சபையின் தலைவர் ஜௌபர் இஸ்மாயிலால் திரைநீக்கம் செய்யப்பட்டதும் இங்கு குறிப்படத்தக்கது.

அக்கரைப்பற்று பட்டினப்பள்ளி வீதியில் அமைந்துள்ள இந்த நிலையத்தில் மர்ஹூம் எம்.ஐ எம். மொஹிடீனின் ஆய்வுக்கட்டுரைகள், தகவல் கணிப்பீடுகள், அவரது சிந்தனையில் உருவான கட்டட தொழில்நுட்பங்கள், கருத்துக்கணிப்பீடுகள், அன்னார் கலந்து கொண்ட தேசிய, சர்வதேச ரீதியிலான பேச்சுவார்த்தைகள் பற்றிய துணுக்குகள், சமாதான பேச்சுவார்த்தையின்போது அவர் கூறிய கருத்துகள் ஆகியன சம்பத்தப்பட்ட நூல்கள், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு அவை இறுவட்டு வடிவத்திலும் வைக்கப்பட்டுள்ளன. விரும்பியோர், ஆய்வாளர்கள் மற்றும் ஆவலர்கள் இங்கு வருகை தந்து தமக்குத் தேவையானவற்றைப் பார்வையிடலாம், வாசிக்கலாம், பிரதிகள் பண்ணலாம்.

அதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நிலையத்தின் நிறைவேற்று அதிகாரி சிராஜ் மசூர் தெரிவித்தார்.

எம்.ஏ. பகுர்டீன்   

(அட்டாளைச்சேனை குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT