Sunday, June 23, 2024
Home » அச்சுறுத்தல் நிறைந்த இன்றைய உலகில் ஆகாயத்தை பாதுகாப்பது மிக முக்கியம்

அச்சுறுத்தல் நிறைந்த இன்றைய உலகில் ஆகாயத்தை பாதுகாப்பது மிக முக்கியம்

விமானப்படைத் தளபதி எயார் மாஷல் உதேனி ராஜபக்‌ஷ தினகரனுக்கு விஷேட பேட்டி

by Gayan Abeykoon
March 1, 2024 12:04 pm 0 comment

ரோயல் இலங்கை விமானப்படைஎன்ற பெயரில் 1951 மார்ச் 02 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்நாட்டு விமானப்படை 1972 இல் இலங்கை குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டதும்இலங்கை விமானப்படைஎன பாராளுமன்றத்தின் ஊடாக அங்கீகரிக்கப்பட்டது. அன்று தொடக்கம் இன்று வரையும் இலங்கையில் கீர்த்திமிக்க விமானப்படையாக விளங்கும் இலங்கை விமானப்படை நாளை (மார்ச்) 02 ஆம் திகதி 73 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இதன் பொருட்டு இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மாஷல் உதேனி ராஜபக் தினகரனுக்கு விஷேட பேட்டி வழங்கினார்.  

கேள்வி: 73 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இலங்கை விமானப்படையானது நாடு எதிர்கொள்ளும் சவால்களின் போது விஷேட பங்களிப்புக்களை நல்கி வருகிறது. அந்த வகையில் விமானப்படை கடந்து வந்த பாதை குறித்து குறிப்பிட முடியுமா?  

பதில்: ஆம். இலங்கை விமானப்படையின் 73 வருட வரலாற்றில் கடந்து வந்த பாதை தொடர்பில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ரோயல் விமானப் படையாக ஆரம்பிக்கப்பட்ட எமது விமானப்படை ஆரம்ப உறுப்பினர்களாக 6 உத்தியோகத்தர்களையும் ஏனைய தரத்திலான 24 உத்தியோகத்தர்களையும் கொண்டதாக இருந்தது. ஆரம்பத்தில் சிறிய நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட எமது விமானப்படை, 1972 இல் இலங்கை குடியரசானதும் இலங்கை விமானப்படையானது.

எமது பணிகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை. தற்போது எமக்கு சுமார் 20 பிராந்தியக் கிளைகள் காணப்படுகின்றன. அதற்கு மேலதிகமாக சுமார் 73 தொழில்வாண்மைப் பிரிவுகளும் உள்ளன. எமது ஒவ்வொரு பிரிவும் தொழில்வாண்மை மட்டத்தில் செயற்படுகின்றன. எமது படைவீரர்களின் எண்ணிக்கை 2009 இல் யுத்தம் முடிவுற்ற போது 35 ஆயிரமாகக் காணப்பட்டது. அது தற்போது 26 ஆயிரமாக உள்ளது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் எமது படையினர் முக்கியமான பணிகளை முன்னெடுத்துள்ளனர். அரசாங்கத்தினால் விமானப்படையாக முன்னெடுத்துச் செல்லக்கூடிய மட்டத்தை அடைந்துள்ள எமது படையினர் தொழில்வாண்மையைப் பேணி முன்னோக்கிப் பயணிக்கத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.

எமது படையினர் தமது விஷேட திறமைகளை பல மட்டங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக அரசாங்க நிறுவனங்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட போட்டிகளில் தேசிய உற்பத்தி திறன் விருது, தர விருது என்பவற்றைப் பல வருடங்கள் நாம் வென்றெடுத்துள்ளோம். அதேபோன்று உலகின் ஏனைய விமானப் படைகளோடு பயிற்சிகளை நடத்துகிறோம். தொழில்நுட்ப படையணியை மாத்திரமல்லாமல் விமானப்படையினரையும் பராமரிப்பதற்காகப் பெருந்தொகை நிதி செலவாகிறது. அதனால் விமானப்படையை உரிய முறையில் பராமரிக்கவென நாம் பல நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறான சிரமங்களுக்கு மத்தியில் நாம் கடந்து வந்த பயணப்பாதை குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். அத்தோடு ஆரம்பம் முதல் இற்றைவரையும் பதவி வகித்த விமானப் படைத்தளபதிகளுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் ஏனைய பதவி நிலைகளினருக்கும் இச்சமயம் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி: விமானப்படையின் 73 ஆவது ஆண்டு விழா நாளை 02 ஆம் திகதியாகும். இதன் நிமித்தம் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் எவை?  

பதில்: கல்வி மற்றும் சமூக சேவை வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து 73 ஆவது ஆண்டு விழாவை கௌரவமான முறையில் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். இம்முறை ஆண்டு விழாவை யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஊடாக தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொடுப்பதோடு விமானப்படை குறித்த சரியான தெளிவை வழங்கவும் எதிர்பார்த்துள்ளோம். ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கு இணையாக எமது பணிகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

விமானப்படையினர் தினத்திற்கு இணையாக கல்வி மற்றும் சமூக சேவை வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்படவிருக்கின்றன. இவ்வேலைத்திட்டங்களுக்காக 125 மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சமூக சேவை வேலைத்திட்டங்களுக்கு ‘நட்புறவின் சிறகுகள்’ எனப் பெயரிட்டுள்ளோம். கடந்த வருடங்களில் விமானப்படையினர் தினம் கொழும்புக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. இம்முறை வடக்கையும் தெற்கையும் இணைக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் இவ்விழா நடத்தப்படுகிறது.

இவ்விழாவை சிறப்பாக நடாத்தவென பெருந்தொகை நிதி செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ள போதிலும் அவற்றில் சிறுதொகை நிதியும் அரசிடமிருந்தோ விமானப்படை மூலமோ ஒதுக்கீடு செய்யப்படாது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இவ்விழாவை சிறப்பாகவும் அபிமானமாகவும் நடாத்துவதில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டுள்ளோம். இதற்காக அனுஷரணையாளர்கள் முன்வந்துள்ளனர். நிச்சயம் இவ்விழா மிகவும் வெற்றிகரமாக அமையும்.

கேள்வி: இவ்விழாவின் பிரதான வைபவங்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படுவது குறித்து குறிப்பிடுங்கள்?  

பதில்: இவ்விழாவுக்காக சர்வமத சமய நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கும் ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். குறிப்பாக பௌத்த சமய நிகழ்ச்சிகள் களனி ரஜமகா விகாரையில் இடம்பெறும். அதற்கு இணையாக ஏனைய சமய நிகழ்ச்சிகளும் முன்னெடுக்கப்படும். விமானப்படைத் தலைமையகத்தில் 02 ஆம் திகதி காலை விமானப்படை ஆண்டு விழா அணிவகுப்பு மரியாதை இடம்பெறும். அதனைத் தொடர்ந்து வடக்கு தெற்கு ஒத்துழைப்பை இலக்காகக் கொண்ட ‘நட்புறவின் சிறகுகள்’ வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும். யாழ்ப்பாணம், முற்றவெளி விளையாட்டரங்கில் இடம்பெறும் இந்நிகழ்ச்சிகளுக்கு வடக்கு சகோதரர்கள் மற்றும் இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸார், பெருந்தொகையான அரச நிறுவனங்கள் ஒத்துழைப்புக்களை நல்க உள்ளன. இதற்காக பல வேலைத்திட்டங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கல்வி அமைச்சின் அங்கீகாரத்துடன் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 73 பாடசாலைகளில் 100 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும். ‘வடக்குக்கு என்னால் புத்தகம்’ என்ற வேலைத்திட்டத்தின் கீழ் 73 ஆயிரம் தமிழ், ஆங்கில மொழிப் புத்தகங்களை பகிர்ந்தளிக்கவென 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் வட மாகாணத்திலுள்ள பல பிரதேசங்களிலும் அப்பிரதேசங்களுக்கு பொருத்தமான 73 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்படும்.

கேள்வி: இவ்விழாவின் விஷேட நிகழ்வாக அமைந்துள்ள நிகழ்ச்சி யாது?  

பதில்: விஷேட நிகழ்வாக விமானப்படை பைசிக்கிள் ஒட்டம் இடம்பெறும். இது 25 ஆவது தடவையாக நடத்தப்படுகிறது. மார்ச் 3 ஆம் திகதி ஆரம்பமாகும் இப்போட்டி மார்ச் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும். கடந்த காலங்களில் இப்போட்டி மூன்று நாட்கள் நிகழ்வாக இடம்பெற்றது. இம்முறை இப்போட்டி ஐந்து நாட்கள் நிகழ்வாக இடம்பெறுகிறது. ஆண்களுக்கான பைசிக்கிள் ஒட்டப் போட்டியில் 100 பேரை இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம். மகளிருக்கான பைசிக்கிள் ஒட்டப் போட்டியில் 30, 40 பேர் பங்குபற்றுவர் என எதிர்பார்க்கிறோம்.

காலிமுகத்திடலில் (ஜனாதிபதி அலுவலகம்) ஆரம்பமாகும் இப்போட்டிகள் கண்டி, ஹபரணை, பொலன்னறுவை, திருகோணமலை, வவுனியா ஊடாக ஐந்து நாட்களில் யாழ்ப்பாணத்தை அடைய உள்ளது. ஆண்களுக்கான பைசிக்கிள் ஒட்டப் போட்டி சுமார் 700 கிலோ மீற்றர் தூரத்தையும் மகளிருக்கான போட்டி 100 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டதாகும்.

மேலும் பொலன்னறுவை, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இசைக்கச்சேரிகளை நடத்தவும் ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். அதேபோன்று நான்கு மாவட்டங்களை இணைத்து விமானப்படை தளபதி கிண்ணத்திற்கான சிநேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டியை நடாத்த உள்ளோம். இப்போட்டிகளில் 11 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்ற உள்ளன. வடக்கில் பெரும்பாலான மக்கள் கரப்பந்தாட்டப் போட்டிக்கு அதிக விருப்பம் கொண்டவர்களாவர். இதன் இறுதிப்போட்டி மார்ச் 06 ஆம் திகதி துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறும்.

அதேநேரம் யாழ்ப்பாணத்தில் எயார் டெட்டு 2024 இல் கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி முற்றவெளி விளையாட்டரங்கில் நடாத்தப்படும். பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் என்பவற்றுக்கு நாம் அழைப்பு விடுத்துள்ளோம். அதேநேரம் யாழப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு விமானத்தின் கேஸ் டேர்பைன் என்ஜின் ஒன்றை வழங்கவும் எதிர்பார்த்துள்ளோம்.

இவ்விழாவின் பிரதான வைபவங்கள் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்றாலும் நாடெங்கிலும் அமைந்துள்ள விமானப்படை முகாம்களிலும் விஷேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாரம்பரிய முறைப்படி அணிவகுப்புக்கள், விளையாட்டுப் போட்டிகள், மாகாணத்துடன் சம்பந்தப்பட்ட சமூக சேவைகள், மருத்துவ முகாம்கள், இரத்ததானம் போன்ற நிழ்ச்சிகளும் இடம்பெறும்.

கேள்வி: 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் யுத்தத்திற்கு நேரடி பங்களிப்பு நல்கிய விமானப்படையினர், அதன் பின்னர் நாட்டின் அபிவிருத்திக்கு எவ்வாறு பங்களிக்கின்றனர் என்பதை சுருக்கமாகக் குறிப்பிடுங்கள்?  

பதில்: யுத்தம் நிலவும் போது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டுவது எமது பொறுப்பாகும். அனைத்து படையினரதும் இறுதி இலக்கு நிலைபேறான சமாதானமாகும். அதனால் யுத்தம் நிலவும் போது அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கி யுத்தத்தை வெற்றி கொள்வோம். அதன் பின்னர் ஏற்பட்ட சமாதானத்தை நிலைநிறுத்துவதற்காக பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம்.

அந்த வகையில் கடந்த காலத்தில் வடமாகாணத்தில் பல புனரமைப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினோம். நாட்டின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்காக நாம் எங்களது சக்தியைப் பயன்படுத்துகிறோம். மக்களின் அறிவையும் கல்வி ஞானத்தையும் மேம்படுத்தவும் நாம் பங்களிப்புக்களை நல்குகின்றோம். பிரிவினைகளுடன் நாம் முன்னோக்கிப் பயணிக்க முடியாது. அதனால் இந்நாட்டிலுள்ள அனைத்து இனமக்களும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம். அதன் உடாக சமூக அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும்.

கேள்வி: 73 ஆவது ஆண்டு விழா நடைபெறவிருக்கும் இந்தச் சூழலில் நீங்கள் கூற விரும்புவதென்ன? 

பதில்: விமானப் படையினரான எமது முதல் பணிதான் விண்ணைப் பாதுகாப்பதாகும். காலத்திற்கு காலம் அதனை வழங்கும் முறைமையில் மாற்றங்கள் ஏற்படலாம். நாடென்ற வகையில் வேறு நாடுகளின் அச்சுறுத்தல்கள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக இன்று முழு உலகிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் விளைவாக ட்ரோன் தொழில்நுட்பம், ஆளில்லா விமானங்கள் என்பவற்றினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து முழுஉலகும் கவனம் செலுத்தியுள்ளது. ஏனெனில் ஆகாயத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும். அதுவே எங்களது முதல் பணி. இதற்காக எமது கே 8 விமானத்தைப் பயன்படுத்துகிறோம். எங்களுக்கென எதிரி நாடுகள் கிடையாது. அனைத்து நாடுகளோடும் ஒற்றுமையோடு பணியாற்றுகிறோம். இந்து சமுத்திரத்தின் அமைதி நிலையைப் பேணுவதற்கு அது மிகவும் முக்கியமானது.

நாடென்ற வகையில் எம்மால் தனியாக வாழ முடியாது. எமக்கு சர்வதேச சமூகத்தினர் அவசியமானவர்கள். இலங்கையில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது முதலில் ஸ்தலத்திற்கு விரைபவர்கள் நாமே. எம்மிடம் அனர்த்த முகாமைத்துவம் குறித்த கற்கைகளுக்கான பாடசாலையொன்று உள்ளது. அங்கு பலர் கற்று வெளியாகின்றனர். அத்தோடு அரசின் முக்கிய நிறுவனங்களின் இணைய தளங்களின் பாதுகாப்பை நாமே உறுதிப்படுத்துகிறோம். இதன் நிமித்தம் 24 மணித்தியாலங்களும் கண்காணிப்புக்களை மேற்கொண்டுள்ளோம். தொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்தும் இலங்கை விமானப்படை டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேட்டி கண்டவர்: மர்லின் மரிக்கார்…
படங்கள்: வாசித பட்டபெந்திகே

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT