நாட்டின் தேசிய உரக் கொள்கையில் சேதன உரத்தின் பயன்பாடும் உள்ளடக்கப்பட வேண்டும் என உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் டீ. வீரசிங்ஹ தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அவருடைய தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழு, உணவுப் பாதுகாப்பு தொடர்பான கொள்கை வரைபு ஆராயப்பட்டதுடன், இந்த வரைபில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களையும் குழு முன்மொழிந்திருந்தது.
கரிம உரப் பயன்பாட்டு தொடர்பில் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை கமத்தொழில் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறியிருப்பதாகவும், அனைத்துப் பிராந்தியங்களில் விவசாயிகளைத் தெளிவுபடுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன், கரிம உரத்தைப் பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபடும் முன்மாதிரியான விவசாயப் பண்ணைகளைக் குழுவின் சார்பில் சென்று பார்வையிட இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கரிம உரத்தைத் தயாரிக்கும் தொழில்முயற்சியாளர்களைத் தைரியப்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், உரப் பாவனை தொடர்பில் உறுதியான தேசியக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்தினால் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.
இக்கூட்டத்தில் பராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரள மற்றும் சுதத் மஞ்சுள ஆகியோரும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.