Home » இவ்வருடத்திற்குள் தேசிய தரவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்படும்

இவ்வருடத்திற்குள் தேசிய தரவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்படும்

- 4.73% ஆக காணப்பட்ட டிஜிட்டல் பொருளாதாரம் இன்று 5%

by Rizwan Segu Mohideen
February 29, 2024 8:21 pm 0 comment

– டிஜிட்டல் பொருளாதார மாநாடு ஜூலை இறுதியில் இலங்கையில்

தேசிய தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை (National Cyber Security Act) இவ்வருடத்திற்குள் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் தரவுப் பாதுகாப்பு அதிகார சபையை நிறுவவுள்ளதாகவும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், டிஜிட்டல் பொருளாதார மாநாட்டை ஜூலை மாத இறுதியில் இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“கடந்த காலத்தில் 4.73% ஆக காணப்பட்ட டிஜிட்டல் பொருளாதாரம் இன்று 5% வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அதனால் பொருளாதாரமும் வலுவடைந்திருக்கிறது. அதனை மேலும் பலப்படுத்தும் வகையிலேயே டிஜிட்டல் பொருளாதார மாநாடு ஜூலை மாத இறுதியில் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. அதனூடாக உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை வௌிநாட்டு தூதரகங்கள், வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுக்கவுள்ளன.

கடந்த வருடத்தில் SLSI நிறுவனம் 50 மில்லியன் ரூபா இலாபத்தை திறைசேரிக்கு வழங்கியிருந்தது. அதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமை, நாட்டின் பொருளாதாரத்திற்கு 52% பங்களிப்பை வழங்கும் சிறு மற்றும் மத்தியத் தர தொழில்துறையைப் பலப்படுத்த புதிய வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறு மற்றும் மத்திய தரத் தொழிலாளர்களை, தொழில்நுட்ப ரீதியாகப் பலப்படுத்துவதே அதன் நோக்கமாகும். இதன்போது தொழில் முனைவோருக்கு GMP மற்றும் SLSI சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஊடாக குறைந்த வட்டியில் கடன் உதவிகளை வழங்கவும் எதிர்பார்க்கிறோம். சிறிய மற்றும் மத்திய தரத் தொழிலாளர்களை, தொழில்சந்தையை நோக்கி நகர்த்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

அதேபோல் இலங்கை சர்ட் நிறுவனத்தின் (Sri Lanka Cert Institute) ஊடாக தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டம் (National Cyber Security Act) இவ்வருடத்திற்குள் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதனையடுத்து சைபர் பாதுகாப்பு அதிகார சபையும் விரைவில் நிறுவப்படும்.

அத்தோடு, தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, கல்வி அமைச்சின் உதவியுடன் தொழில்நுட்ப வசதிகள் அற்ற 1000 பாடசாலைகளில் 700 பாடசாலைகளுக்கு இணைய வசதிகளைப் பெற்றுக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் இரண்டாம் கட்டமாக பாடசாலைகள் மட்டத்தில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மேலும் கல்வி அமைச்சுடன் இணைந்து தொழில்நுட்ப அறிவைப் பெறாமலிருக்கும் 10,000 பட்டதாரிகளைத் தெரிவுசெய்து அவர்களுக்கு தொழில்நுட்ப அறிவை வழங்கும் வேலைத்திட்டம் மே மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.” என்று தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x