சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் நீல் வாக்னெர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நாளை (29) வெல்லிங்டனில் ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட நியூசிலாந்து குழாத்தில் நீல் வாக்னெர் இடம்பிடித்த போதிலும், அவுஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்காக பெயரிடப்பட்ட இறுதிப் பதினொருவர் அணியில் அவர் இடம்பெறவில்லை.
மறுபுறத்தில் 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன் அவரை அணியில் இருந்து விடுவிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, அவுஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள 2 போட்டிகளிலும் நீல் வாக்னெர் இடம்பெற மாட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கான அறிவிப்பை நீல் வாக்னெர் வெளியிட்டுள்ளார்.
12 ஆண்டுகளாக நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் ஆடிய 37 வயதான நீல் வாக்னெர் இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் 260 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.