‘பாராளுமன்ற செயற்பாடுகளும் ஒழுங்கு முறைகளும்’ எனும் தலைப்பில் நடத்தப்பட்ட கற்கைநெறியில் பங்குபற்றி அக்கற்கைநெறியை பூர்த்திசெய்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உள்வாரி இளங்கலை பட்டதாரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (27) அப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை, கலாசாரபீட அரசியல்துறை தலைவர் கலாநிதி எம்.அப்துல் ஜப்பார் மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவின் மக்கள் தொடர்பு அதிகாரி யாஸ்ரி முகம்மட் ஆகியோரின் கூட்டு நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் 246 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக, கலை கலாசாரபீட அரசியல் விஞ்ஞானத்துறை, பாராளுமன்றத்துடன் இணைந்து குறுகியகால கற்கையை பல்கலைக்கழக மாணவர்களுக்கு நடத்தியிருந்தது.
USAID மற்றும் தேசிய ஜனநாயக நிறுவனமும் இந்நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியதுடன், இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர கலந்துகொண்டு உரையாற்றினார். கௌரவ அதிதிகளாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், கலை கலாசாரபீட பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர உட்பட அதிதிகள் பல்கலைக்கழக சமூகத்தினரால் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் வரவேற்புரையை கலாநிதி எம்.அப்துல் ஜப்பார் நிகழ்த்தியதுடன், பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவின் மக்கள் தொடர்பு அதிகாரி யாஸ்ரி முகம்மட் அறிமுக உரையை நிகழ்த்தினார்.
ஒலுவில் மத்திய விசேட நிருபர்