Home » மற்றொரு வரட்சி காலநிலையை எதிர்கொள்ளும் நிலையில் நாடு!

மற்றொரு வரட்சி காலநிலையை எதிர்கொள்ளும் நிலையில் நாடு!

by sachintha
February 27, 2024 6:26 am 0 comment

நாட்டில் தற்போது நிலவும் அதிக உஷ்ணத்துடன் கூடிய காலநிலை வரட்சி நிலையை ஏற்படுத்தி விடக்கூடிய அச்சுறுத்தலைஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நீர் மின்னுற்பத்தி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து வருவதாக அறிவித்துள்ள இலங்கை மின்சார சபை, நீர் மின்னுற்பத்தி சுமார் 20 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பாவிக்குமாறும் பாவனையாளர்களைக் கேட்டுள்ளது.

இவை இவ்வாறிருக்க, தற்போதைய வரட்சிக் காலநிலையினால் மாத்தறை மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 3000 ஏக்கர் தேயிலைப் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டிருப்பதாக சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக மாத்தறை மாவட்டத்திலுள்ள சிறு தேயிலைத் தோட்டங்களில் தேயிலை உற்பத்தி பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளதோடு, நில்வளா கங்கையின் உவர் நீர்த்தன்மை இடையூறு காரணமாக தேயிலைச் செடிகள் அழிவடைந்திருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

காலநிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை ஆரோக்கியமானதாக இல்லை. சுமார் ஐந்தாறு மாதங்கள் நீடித்த தொடர் மழைவீழ்ச்சிக் காலநிலை, நீங்கிய சில வாரங்களில்தான் இவ்வாறான உஷ்ணத்துடன் கூடிய வரட்சி காலநிலை ஏற்பட்டிருக்கிறது. இக்காலநிலை ஆரம்பத்திலேயே தாக்கம் மிக்கதாகவும் விளங்குகிறது.

ஆனால் கடந்த மழைவீழ்ச்சிக் காலநிலை ஆரம்பமாவதற்கு முன்னர் கடந்த வருடத்தின் பிற்பகுதியில் நாட்டில் கடும் வரட்சிக் காலநிலை நிலவியது. அச்சமயம் நாட்டு மக்களும் வனஜீவராசிகள் உள்ளிட்ட உயிரினங்களும் கூட தண்ணீர் உள்ளிட்ட பலவிதமான அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்திருந்தமை தெரிந்ததே.

அவ்வரட்சிக் காலநிலையைத் தொடர்ந்து ஆரம்பித்த மழையுடன் கூடிய காலநிலை சுமார் ஐந்தாறு மாதங்கள் நீடித்தது. அதன் விளைவாக தாழ்நிலங்களில் வெள்ள நிலையும் மண்சரிவுகளும் கூட அவ்வப்போது ஏற்பட்டன. அவற்றின் விளைவாகவும் மக்கள் பல்வேறு விதமான அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்தார்கள்.

ஆனாலும் அம்மழைக் காலநிலை நீங்கி சில வாரங்கள்தான் கடந்துள்ளன. அதற்கிடையில் கடும் உஷ்ண காலநிலை நிலவி வருகிறது. இதனால் நாட்டில் மீண்டும் வரட்சி ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை தற்போதைய நிகழ்வுகள் காண்பிக்கின்றன.

மாத்தறை மாவட்டத்தில் 3000 ஏக்கர் தேயிலைச் செய்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது. மாத்தறை மாவட்டத்தில் தேயிலைச் செய்கையில் மாத்திரம் இவ்வாறான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றால் ஏனைய மாவட்டங்களிலும் இந்த உஷ்ண காலநிலை தாக்கம் செலுத்தாமல் இருக்காது. அத்தோடு ஏனைய உணவு உற்பத்தி பயிர்ச்செய்கைகளிலும் கூட இக்காலநிலை நிச்சயம் தாக்கம் செலுத்தி பாதிப்புக்களை ஏற்படுத்தவே செய்யும். இது தொடர்பிலான அனுபவங்களை இந்நாட்டு மக்கள் ஏற்கனவே பெற்றவர்களாக உள்ளனர்.

மேலும் தற்போதைய உஷ்ண காலநிலை அடுத்துவரும் சில மாதங்களுக்கு நீடிக்கவே செய்யும். இது வழமையாகும். வருடாவருடம் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும். அதற்கு முன்னரான காலப்பகுதி அதிக உஷ்ணம் கொண்டதாக இருக்கும். அதனால் சூரியன் இலங்கைக்கு நேரே உச்சம் கொடுப்பது நீங்கும் வரையும் அதிக உஷ்ண காலநிலை நிலவவே செய்யும். அதனால் அடுத்துவரும் சில மாதங்களுக்கு மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்க முடியாது. அதுவே வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பும் ஆகும். அதனால் விரும்பியோ விரும்பாமலோ அதிக உஷ்ணத்துடன் கூடிய வரட்சி காலநிலை நீடிக்கவே செய்யும்.

ஆகவே அதிக உஷ்ணம் மற்றும் வரட்சிக் காலநிலையின் தாக்கங்களுக்கு முகம்கொடுப்பதற்கு ஏற்ப ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் ஒவ்வொருவரும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். குறிப்பாக தண்ணீர் வீண்விரயம் செய்யப்படுவதை தவிர்ப்பது இன்றியமையாததாகும். அத்தோடு இவ்வரட்சிக் காலநிலையினால் ஆரோக்கிய ரீதியில் ஏற்படக்கூடிய தாக்கங்களையும் பாதிப்புக்களையும் தவிர்த்துக் கொள்வதில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்ளவும் தவறக்கூடாது. குறிப்பாக உடலில் நீரிழப்பைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில் அடிக்கடி போதியளவில் நீரைப் பருக வேண்டும். நிழல் மிக்க இடங்களில் ஒய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறான ஏற்பாடுகளின் ஊடாக அதிக உஷ்ணம் மற்றும் வரட்சி காலநிலையினால் ஏற்படக்கூடிய தாக்கங்களையும் பாதிப்புக்களையும் பெரும்பாலும் தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x