இந்த ஆண்டு நடைபெறவுள்ள பரிஸ் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் 58 வீர, வீராங்கனைகளை உள்ளடக்கிய உயர் செயல்திறன் குழாம் ஒன்றை விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெனாண்டோ பரிந்துரைத்துள்ளார்.
பரிஸ் ஒலிம்பிக்கு போட்டி எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. பரிஸ் ஒலிம்பிக் போட்டியின் 11 போட்டி நிகழ்ச்சிகளில் மொத்தம் 33 மெய்வல்லுனர்கள் பங்கேற்கவிருப்பதோடு பாரா ஒலிம்பிக்கில் எட்டு போட்டி நிகழ்ச்சிகளுக்காக 25 வீர, வீராங்கனைகள் பங்கேற்கவிருப்பதாக விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஷெமால் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த 33 மெய்வல்லுனர்களில் 19 பேர் பரிஸ் ஒலிம்பிக் போட்டியின் தடகள போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.
ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு முன்னதாக மாதாந்த கொடுப்பனவு மற்றும் வீரர்கள் பங்கேற்க தேவையான அனைத்து வசதிகளையும் நிதியையும் பெறுவதை இந்த முயற்சி உறுதி செய்வதாக உள்ளது. பரிஸ் ஒலிம்பிக்கில் இலங்கை சார்பில் 19 தடகள வீரர்கள் தவிர பூப்பந்து (1), குத்துச்சண்டை (2), டைவிங் (1), ஜிம்னாஸ்டிக் (2), ஜூடோ (1), துப்பாக்கி சுடுதல் (2), ஸ்குவாஷ் (1), நீச்சல் (1), பலுதூக்குதல் (2) மற்றும் மல்யுத்தம் (1) ஆகிய விளையாட்டு நிகழ்ச்சிகளில் வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளன.
மறுபுரம் பாரிஸில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு இலங்கை சார்பில் 12 தடகள வீரர்களுடன் ஏர் ரைபிள் (3), வில்வித்தை (2), நீச்சல் (2), சக்கர நாற்காலி டென்னிஸ் (2) பூப்பந்து (1), படகோட்டம் (1) மற்றும் மேசைபந்து (1) விளையாட்டுகளில் வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
பாரா ஒலிம்பில் விளையாட்டு வரலாற்றில் இலங்கை ஒரு தங்கம், மூன்று வெண்கலங்கள் என நான்கு பதக்கங்களை வென்றுள்ளது. இதில் தினேஷ் பிரியந்த 2020இல் தங்கப் பதக்கத்தை வென்றதோடு, 2016 இல் வெண்கலப்பதக்கத்தை வென்றார். 2012 இல் பிரதீப் சஞ்சய மற்றும் 2020 இல் துலான் கொடிதுவக்கு வெண்கலப்பதக்கம் வென்றிருந்தனர்.