Sunday, September 8, 2024
Home » விவாதத்தை ஒத்திவைத்துவிட்டு சமநிலை அடையாளத்தை ஏற்போம்
'இந்தியத் தமிழரா?, மலையகத் தமிழரா'?

விவாதத்தை ஒத்திவைத்துவிட்டு சமநிலை அடையாளத்தை ஏற்போம்

by gayan
February 24, 2024 9:34 am 0 comment

‘இந்தியத் தமிழரா, மலையகத் தமிழரா’ என்ற விவாதத்தை இப்போது ஒத்திவைத்துவிட்டு, இம்முறை சனத்தொகை கணக்கெடுப்புக்கு ‘இந்தியத் தமிழர்/ மலையகத் தமிழர்’ என்ற சமநிலை

அடையாளத்தை ஏற்றுக்கொள்வது பொருத்தமானதாக எண்ணுவதுடன், அடுத்த 10 வருடங்களின் பின்னர் நடைபெறும் சனத்தொகை கணக்கெடுப்பின் போது காலம் ஓர் அடையாளத்தைக் காட்டுமெனவும், தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

‘தமிழர்’ என்ற பொது தமிழ் இன அடையாளமாக இருக்கலாம். அல்லது இன அடையாளமே மறைந்து ‘இலங்கையர்’ என்ற பொது நாட்டு அடையாளமாகவும் இருக்கலாமெனவும், அவர் கூறினார். சனத்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக மனோ கணேசன் எம்.பி.யை அவரது இல்லத்தில் மலையகத் தமிழ் அடையாளத்துக்கான கூட்டிணைவு அமைப்பினர் நேற்று சந்தித்து கலந்துரையாடியதுடன், தமது கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தையும் கையளித்தனர். இச்சந்திப்பு தொடர்பாக மனோ கணேசன் எம்.பி. மேலும் தெரிவித்த போது,

“மலையக சிவில் அமைப்பினருடன் கலந்துரையாடல் நடைபெற்றதுடன், சிவில் சமூக நண்பர்களின் முன்னெடுப்பு சமநிலைப்பாட்டை அடைந்தமைக்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்தேன். இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் மற்றும் அனைத்து தமிழ் பேசும் மக்கள், இலங்கை மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த முடியாது. இது இலங்கை நாட்டவர் என்ற அடையாளத்துக்கு உள்ளே வரும் ஒரு சட்டபூர்வமான உள்ளக அடையாளமென்பதை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இது தொடர்பாக முற்போக்கு நிலைப்பாட்டை கணக்கில் எடுத்து, உத்தேச கணக்கெடுப்பு ஆவணங்களில் உரிய அடையாளம் இடம்பெறுவதற்கான உரிய அறிவுறுத்தல்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கிடைக்க வேண்டுமென்று என்னுடன் தொலைபேசியில் உரையாடிய தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தொலைபேசியில் தொடர்புகொண்டு எமது நிலைபாட்டை தெரிவித்தேன். இதற்கு அவசியமான அறிவுறுத்தல்களை, தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்துக்கு வழங்குவதாக அவர் உறுதியளித்தார்.

இதை ஒருங்கிணைத்து மேல் நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறினேன்” என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x