Saturday, May 25, 2024
Home » பாணந்துறை, கொறக்கானை நக்க்ஷபந்தியா ஜும்ஆ பள்ளிவாசலின் 105 ஆம் வருட கந்தூரி தமாம் மஜ்லிஸ்
114 ஆவது வருட நிறைவைக் காணும்

பாணந்துறை, கொறக்கானை நக்க்ஷபந்தியா ஜும்ஆ பள்ளிவாசலின் 105 ஆம் வருட கந்தூரி தமாம் மஜ்லிஸ்

by Gayan Abeykoon
February 23, 2024 10:28 am 0 comment
பள்ளிவாசலின் முகப்புத் தோற்றம்

(வரலாற்று பாதையில் 114ஆவது ஆண்டை எட்டிப்பிடித்திருக்கும் கொறக்கான நக்க்ஷபந்தியா ஜும்ஆ மஸ்ஜித் வரலாறு (105வது வருட பெரிய கந்தூரி தமாம் வைபவம் நாளை (24.02.2024)

மேல் மாகாணத்தின் , களுத்துறை மாவட்டத்திலுள்ள, பாணந்துறை தேர்தல் தொகுதியில் 671 A கிராம சேவகர் பிரிவில் அமையப்பெற்றுள்ள அழகிய சிறு கிராமமே எமது கொறக்கான கிராமமாகும்.

கொறக்கான கிராமம் மரங்களால் சூழப்பட்ட வனப்பிரதேசமாக காணப்பட்டதால், சிங்கள மக்களால் கொறக்கா கம என அழைக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் இப்பெயர் ‘கொறக்கான’ என தமிழ் மொழியில் திரிபடைந்து அழைக்கப்பட்டதாக முன்னோர்களின் ஒரு சான்றாகும். சுமார் 1900 ஆம் ஆண்டளவில் இக்கிராமத்தில் கிட்டத்தட்ட 10 குடும்பங்கள் அளவில் குடியேறி அது காலப்போக்கில் 50 குடும்பங்களுடன் 50 வீடுகளாக வளர்ச்சி பெற்றதாக சரித்திரம் கூறுகின்றது.

இக்கால கட்டத்தில் தொழுகைக்காக பள்ளிவாயல் ஒன்று இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வந்துள்ளது. தத்தமது வீடுகளிலே ஐங்காலத் தொழுகையை நிறைவேற்றி வந்துள்ளனர். ஜும்ஆ தொழுகைக்காகவும் ஜனாஸா நல்லடக்கத்திற்காகவும் அயல் ஊரான ஊர்மனை ஜும்ஆ மஸ்ஜிதையும் பள்ளிமுல்லை ஜும்மா மஸ்ஜிதையும் இக்கிராம மக்கள் நாடினர். அந்நாட்களில் கால்நடையாகவே செல்லும் வழமை இருந்து வந்துள்ளது.

பள்ளிவாசலின் உள்ளக அமைப்பு

பள்ளிவாசலின் உள்ளக அமைப்பு

இவ்வூரைச் சேர்ந்த பிரபல மாணிக்கக்கல் வியாபாரியும் கொடை வள்ளலுமான மர்ஹும் அப்துல் லத்தீப் மரிக்காரினால் 1910 ஆம் ஆண்டில் தனது சொந்தப்பணத்தில் தனக்குரிய காணியில் சுமார் 35’ X 35’ கட்டடமொன்றை புதிதாக கட்டி அதை நக்க்ஷபந்தியா தக்கியா எனப் பெயரிட்டு அல்லாஹ்வின் பெயரில் வக்பு செய்துள்ளார். இத் தக்கியாவின் முதலாவது பரிபாலன சபைத் தலைவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இப்பள்ளியின் நக்க்ஷபந்தியா தரீக்காவின் அமல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன.

மர்ஹும் அப்துல் லத்தீப் மரிக்காரின் மறைவுக்குப் பின் அவரது புதல்வர் மர்ஹும் மொஹமட் சமீம் ஏ லத்தீப் மரிக்காரும் அவரின் மறைவுக்குப் பின் அவரது சகோதரர் மர்ஹும் மொஹமட் தாஹிர் மரிக்காரும் இப்பள்ளியில் நிர்வாக சபைத் தலைவர்களாக கடமையாற்றியுள்ளனர்.

நாடு முன்னேற்றம் கண்டிருந்தாலும் நமது கிராமத்திற்கு 1970 க்குப் பிறகே மின்சாரம் கிடைக்கப்பெற்றது. அதுவரை தக்கியாவில் மெழுகுவர்த்தியுடனான லாந்தர் விளக்குகளும் மண்ணெண்ணெய் விளக்குகளுமே பள்ளியை ஒளியூட்டின. முழு கிராமமுமே இருளில் மூழ்கிய காலம் அது. சிறிது காலத்தின் பின்னரே பெட்ரோல் மெக்ஸ்  பாவனைக்கு வந்தது.

பள்ளிவாசல் நிர்வாகிகள்

பள்ளிவாசல் நிர்வாகிகள்

அக்காலப் பகுதியில் வாழ்ந்த ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி ஆலோசனை செய்து ஹிழ்ர் (அலை) அவர்களின் பெயரால் கந்தூரி வைபவம் ஒன்றை நடத்துவதற்கு முடிவு செய்து 1919 ஆம் ஆண்டில் முதன் முதல் இந்தக் கந்தூரி வைபவம் கிராம மட்டத்தில் சிறிய அளவில் நடைபெற்றது.

ஆரம்ப காலத்தில் இப்பகுதி பெரும் காடுகள் நிறைந்த இடமாக இருந்ததால் காட்டு முயல்கள் வேட்டையாடப்பட்டு முயல் இறைச்சியால் கறிசமைத்து இந்தக் கந்தூரி வைபவத்தில் பரிமாறப்பட்டதாக முன்னோர்களின் சான்றுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன.  எனவே இந்த கந்தூரி ‘முயல் கந்தூரி’ என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

1919 இல் ஆரம்பித்த இக்கந்தூரி இன்று நம் நாட்டில் நடைபெறுகின்ற பிரபல்யமான கந்தூரிகளில் ஒன்றாக இன்றுவரை அக்கந்தூரி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 105 ஆவது வருடமாக பெரிய கந்தூரி தமாம் வைபவம் நாளை 24ஆம் திகதி நடைபெற இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

காலப்போக்கில் இக்கிராமத்தில் மக்கள் தொகை பெருகத்தொடங்கியது. தொழுகைக்காக கட்டப்பட்ட நக்க்ஷபந்தியா தக்கியாவில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. காலத்திற்கேற்ப விஸ்தீரப்படுத்தப்படவேண்டிய கட்டாய தேவை உணரப்பட்டது. இக்காலப்பகுதியில் பள்ளி பரிபாலன சபைத் தலைவராக இருந்த மர்ஹும் M .T .A பௌசியின் தலைமையின் கீழ் ஊர் ஜமாத்தினர் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.

இதன் பயனாக 1977 ஆகஸ்ட் மாதமளவில் சிறிய தக்கியா உடைக்கப்பட்டு கட்டிட புனர் நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்காக ஊர்மக்கள் உடலாலும் சிரமதானப் பணிகள் மூலமும் நிதியுதவியின் மூலமும் இரவு பகலாக அயராது உழைத்துள்ளனர். கட்டிட வேலை ஆரம்பம் முதல் நிறைவடையும் வரை முழுபொறுப்புகளையும் ஏற்று தமது சொந்த நிதியின் மூலம் கட்டிடத்தை முடித்து தந்த அல்ஹாஜ் மர்ஹும் ஹம்தூன் (ஹம்தூன் சன்ஸ்) அன்னாரினதும் அவர்களின் குடும்பத்தினரதும் சேவையை எமது கிராம மக்கள் என்றும் நன்றியுடன் நினைவு கூர்கின்றனர். நிதியுதவி வழங்கியவர்களுள் இவ்வூரைச் சேர்ந்த அப்துல் லத்தீப் மரிக்கார் அன்னவர்களின் குடும்பத்தினரையும் நாடறிந்த கொடைவள்ளலான பேருவளை மர்ஹும் நளீம் ஹாஜியாரையும் கிராம மக்கள் நன்றியுடன் நினைவு கூர்கின்றனர். அத்துடன் நக்க்ஷபந்தியா தரீக்காவின் உலகளாவிய ஆன்மீகத் தலைவராக திகழ்ந்த அஷ்ஷெய்க் முஹம்மது நாசிம் ஹக்கானி 1973,1986,1993 ம் ஆண்டுகளில் எமது பள்ளிவாயிலுக்கு வருகை தந்து முரீதீன்களுக்கு ஆன்மீக தர்பியாக்களும் அவ்ராதுகளும் வழங்கிவிட்டு சென்றதுடன் ஊர்மக்கள் அவரிடம் பைஅத்  செய்து கொண்டமையும் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டிய அம்சமாகும் .

அத்துடன் தஃவத் தப்லீக் உடைய பணியும் சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக எமது மஸ்ஜிதில் நடைபெற்று வருகிறது தற்போது அழகுமிக்க தோற்றத்துடன் காட்சியளிக்கின்ற நக்க்ஷபந்தியா ஜும்மா மஸ்ஜித் புதிய கட்டடம் 1978 ம் ஆண்டு செப்டெம்பர் மதம் திறந்து வைக்கப்பட்டது. எனினும் இவ்வளவு சிறப்பான எமது கிராம பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகை நடைபெறாமல் இருப்பது ஒரு பாரிய குறையாக எனக்குத் தெரியவே அன்றைய பள்ளி பரிபாலன சபைத் தலைவராக இருந்த ஜனாப்

அஹமத் பௌசியை, கபூரியா அரபுக் கல்லூரியில்

கல்வி பயின்று கொண்டிருந்த (மெளலவி எம்.ஆர்.எம்.நஜிமுதீன் ஆகிய) நான் நேரடியாக சந்தித்து இது தொடர்பாக எடுத்துக் கூறி ஊர்மக்கள் அனுபவிக்கின்ற சிரமங்களை அவருக்கு உணர்த்தினேன். அல்லாஹ்வின் நாட்டப்படி அவசரமாக ஜும்ஆ தொழுகையை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை நிர்வாகக் குழுவுடன் இணைந்து அவர் மேற்கொண்டார்.  அதன் பயனாக 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதன் முதல் குத்பா எமது மஸ்ஜிதில் ஆரம்பமானது. முதல் குத்பாவை இலங்கையின் அன்று மூத்த ஆலிம்களில் ஒருவராக மிளிர்ந்த மர்ஹும் மஸ்ஊத் ஆலிம் அவர்கள் நிகழ்த்தி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து சுமார் இரண்டு வருடங்களாக நான் அல்லாஹ்வின் உதவியோடு எவ்வித சன்மானமும் பெறாமல் , கபூரிய்யா மத்ரஸாவில் இருந்து இங்கு வந்து குத்பாப் பிரசங்கத்தை நிகழ்த்திச் சென்றதை இன்று நினைவு கூர்கிறேன். அப்போது கபூரியாவின் அதிபராக இருந்த மர்ஹும் அல்ஹாஜ் முபாரக் ஹஸரத்  குத்பாப் பிரசங்கத்தை நிகழ்த்திவிட்டு வருவதற்கு விசேட அனுமதி வழங்கியது மறக்க முடியாத நினைவாகும்.

1919 ம் ஆண்டு தொடக்கம் எமது நக்க்ஷபந்தியா மஸ்ஜிதுடன் இணைந்ததாக  மன்பஉல் ஹிதாயா குர்ஆன் மத்ரஸாவும் நடைபெற்று வந்துள்ளது. களுத்துறை மாவட்டத்திலுள்ள குர்ஆன் மத்ரஸாக்களுள் மிக பிரபல்யம் பெற்ற மத்ரஸாவாக இது திகழ்ந்ததுடன் பாணத்துறைப் பிரதேசத்தில் நடைபெற்ற மீலாதுன் நபி போட்டிகளிலும் முதலாம் இடத்தைப்பெற்று அனைவரினதும் பாராட்டைப் பெற்ற குர்ஆன் மத்ரஸாவாக திகழ்ந்து வந்துள்ளது. அது இன்றும் அதே பெயரில் நடைபெற்று வருகின்றது. இதில் பகுதி நேர குர்ஆன் மனனப் பிரிவும் இயங்கிக்கொண்டு இருக்கிறது.

பிற்காலத்தில் மத்ரஸா மாணவர்களின் சுகாதாரம், ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றிற்குப் பொறுப்பாக இருந்து வாரம் தோறும் மத்ரஸாவிற்கு சமுகமளித்து மேற்பார்வைக் கடமையில் ஈடுபட்டதுடன் ரமழான் மாதத்தில் தராவீஹ் தொழுகைக்கு பின் நடைபெறுகின்ற ஹிஸ்பு மஜ்லிஸை தலைமை தாங்கி நடாத்தி மாணவர்களுக்கு திருத்தமாக அல் குர்ஆனை கற்றுக்கொடுத்த மர்ஹும்  முஸம்மில் ஹாஜியாரை இவ்விடம் நன்றி உணர்வுடன் ஞாபகப்படுத்திக்கொள்கிறோம்.  அத்துடன் எமது பள்ளி பரிபாலன சபையின் கண்காணிப்பின் கீழ் மத்ரஸதுல் மன்பஉல் ஹுதா, குர்ஆன் மத்ரஸாவும் மத்ரஸதுல் மன்பஉல் ஹைராத் குர்ஆன் மத்ரஸாவும் மிகச் சிறப்பாக எமது ஊரில் இயங்கி வருகிறது. இதில் ஆண், பெண் இருபாலருக்கும் குர்ஆனை போதிக்கும் பணியை நக்க்ஷபந்தியா தக்கியாவின் கதீபாக மிக நீண்டகாலம் சேவை புரிந்த மர்ஹும் செய்னுதீன் மரிக்கார் லெப்பை, அவருடன் இணைந்து முஅத்தீனாக கடமை புரிந்த மர்ஹும் மஸ்ஊத் முஅத்தினாரையும்  எமது தக்கியாவில் நடைபெற்று வந்த ராத்தீப் வைபவம் கந்தூரி வைபவங்களை முன்னின்று நடாத்தியவரும் பள்ளியில் இமாம்கள் விடுமுறை சென்றுள்ள போதெல்லாம் மஸ்ஜிதின் இமாமாக நின்று தொழுகை நடத்தியதுடன் இப்பிரதேசத்திற்கு அளப்பரிய சேவைகள் செய்த முன்னாள் விவகாப் பதிவாளர் மர்ஹும் அல்ஹாஜ் ரஷீத் லெப்பை அவர்களையும், எமது கிராமத்தின் முதல் ஆலிம் மர்ஹூம் அப்துல் காதிர் அவர்களையும் நன்றியோடு ஒருகனம் நினைத்துப்பார்க்கிறோம்.

தற்போதுள்ள ஜும்ஆ மஸ்ஜித் அமையப்பெற்றுள்ள இடத்தின் ஒரு பகுதி நிலத்தினையும் அதனைச் சூழவுள்ள தற்போது மதில் கட்டப்பட்டுள்ள பெரிய நிலப்பகுதியை, கொறக்கானையைப் பிறப்பிடமாகவும் களுத்துறையில் வசித்தவருமான மர்ஹும் நசீர் ஹாஜியாரும் அவரது குடும்பத்தினரும் சுமார் 80 பேர்ச்சஸ் நிலத்தை வக்பு செய்துள்ளனர். அதே போன்று தற்போது மையவாடி அமையப்பெற்றுள்ள நிலத்தை மர்ஹும் ஏ.எஸ். மொஹமட் தாஹிர் அவர்களின் மனைவி ஹாஜியானி மர்ஹுமா சேய்நம்பு நாச்சியா  தனக்கு சொந்தமான 72 பேர்ச்சஸ் அளவுள்ள நிலத்தை வக்பு செய்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் சுமார் 16 ஜனாஸாக்கள் இம்மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டன. எனினும் 2008 ஆம் ஆண்டு முதலே சட்டரீதியாக அங்கீகாரம் பெற்ற மையவாடியாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. எதற்கும் அயராது உழைத்த முன்னாள் நிருவாக சபை தலைவர் எம்.ஏ. பிர்தெளஸ் ஹாஜியாரையும் அவர்களது நிர்வாக சபை உறுப்பினர்களையும் என்றும் எமது ஊர் ஜமாஅத்தினர்  நன்றியுடன் ஞாபகப்படுத்துகின்றனர் .

2019 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட நிருவாக சபையினர், முன்னைய மையவாடியுடன் இணைந்ததாகக் காணப்பட்ட 7 பேர்ச்சஸ் நிலத்தை வாங்கி மையவாடியுடன் இணைத்துள்ளனர். இதனை வாங்குவதற்கு ஊர் ஜமாஅத்தினர் நலன் விரும்பிகள் தனவந்தர்கள் அனைவரினதும் உதவி ஒத்தாசை கிடைக்கப்பெற்றதை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். தற்போது சுமார் ஒரு ஏக்கரை விட அதிகமாக நிலப்பரப்பை தன்னகத்தே உள்ளடக்கியதாகவும் சுமார் 1000  பேரளவில் நின்று தொழக்கூடியதாக விசாலமானதாகவும் இயற்கை எழில்மிகு அழகுத் தோற்றத்துடன் இன்று கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

அல் மத்ரஸதுல் மன்பஉல் ஹைராத்  மாணவிகள்  பொறுப்பான முஅல்லிமாவுடன்

அல் மத்ரஸதுல் மன்பஉல் ஹைராத் மாணவிகள் பொறுப்பான முஅல்லிமாவுடன்

அல் மத்ரஸதுல் மன்பஉல் ஹைராத் மாணவர்கள்

அல் மத்ரஸதுல் மன்பஉல் ஹைராத் மாணவர்கள்

மத்ரஸதுல் மன்பஉல் ஹுதா மாணவிகள்

மத்ரஸதுல் மன்பஉல் ஹுதா மாணவிகள்

மத்ரஸதுல் மன்பஉல் ஹுதா மாணவர்கள்

மத்ரஸதுல் மன்பஉல் ஹுதா மாணவர்கள்

மத்ரஸதுல் ஹிதாயா மாணவர்கள் பொறுப்பான மெளலவி மார்களுடன்

மத்ரஸதுல் ஹிதாயா மாணவர்கள் பொறுப்பான மெளலவி மார்களுடன்

 

 

 

 

 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT