பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் சம்பள நிர்ணய சபைக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள இ.தொ.காவின் தலைமையகமான சௌமிய பவனில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகச்சந்திப்பிலேயே ஆளுநர் செந்தில் தொண்டமான் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,
தற்போதைய வாழ்வாதாரச் செலவுகளை கணக்கிட்டு மக்கள் வாழ்வதற்கு 1700 ரூபா அடிப்படை சம்பளம் வேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைத்துள்ளோம்.
இந்த தொகையை சம்பள நிர்ணய சபையின் ஊடாக பெற்றுக்கொடுக்க இ.தொ.கா முழுமையான பணிகளையும் ஆரம்பித்துள்ளது.
கம்பனிகளுடன் அடுத்துவரும் சுற்றுப் பேச்சுகளில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டால் சம்பளம் விரைவாக கிடைக்கும். இல்லாவிட்டால் சம்பள நிர்ணய சபையில் இடம்பெறும் வாக்கெடுப்பின் ஊடாக சம்பளம் கிடைக்கப்பெறும்.
சம்பளக் கோரிக்கைக்கு அப்பால் வரவு – செலவுத் திட்ட கொடுப்பனவு மற்றும் ஊழியர் சேமலாப, ஊழியர் நம்பிக்கை நிதியையும் கோரியுள்ளோம்.” என்றார்.