நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மாற்றம் என்பது சங்கீதக் கதிரை விளையாட்டாக இருந்து வருவதாகவும், பாராளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துமாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அண்மையில் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற நிகழ்வில் குறிப்பிட்டார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு இதுபற்றி மேலும் தெரிவித்ததாவது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை பதவியிலுள்ள ஜனாதிபதிக்கு ஏற்றாற் போல் மாற்றி அமைத்துக் கொள்வதும், தக்க வைத்துக் கொள்வதுமான “சங்கீதக் கதிரை “விளையாட்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவைத் தொடர்ந்து, நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இதனை நீக்க வேண்டும் என்ற போராட்டம் ஒரு புறமும், நீக்கத் தேவை இல்லை என்ற போராட்டம் மறு புறமும் நடந்தே வருகின்றன. சிறுபான்மை சமூகம் என்ற அடிப்படையில், இந்த நாட்டில் ஓர் ஆட்சித் தலைமையைத் தீர்மானிப்பதில், அதாவது, நிறைவேற்று அதிகாரத்தின் தலைமைப் பீடமாக ஒருவரை தீர்மானிக்கும் விவகாரத்தில் முழு நாடுமே ஒரு தனித் தொகுதியாக கணிக்கப்பட்டு, வாக்களிக்கின்றபோது எங்கள் சமூகத்தின் பேரம் பேசும் சக்தி வலுவாக இருக்கிறது.
இதனால், இவ்வதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும், அதே வேளை பாராளுமன்றத்தைப் பலவீனப்படுத்தாமல் அதன் அதிகாரங்களை சற்று அதிகரித்து கொள்வதற்கு சில மாற்றங்களைச் செய்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைக் கொண்டு இந்த நாட்டை முன்கொண்டு போக வேண்டும். இந்த நிலைபாட்டில்தான் நாங்கள் தொடர்ந்தும் இருந்து வருகிறோம்.