அமரர் டி.ஆர். விஜேவர்தன இலங்கையில் என்றும் நினைவு கூரப்படுகின்ற பெயர். இந்நாட்டு பத்திரிகை உலகில் அழியாத்தடம் பதித்துள்ள நாமம் அவராவார்.
இலங்கையில் பத்திரிகைகளின் தாய்வீடாக விளங்கும் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகரும் அவரேயாவார். அவர்தான் இந்நாட்டு பத்திரிகைகளின் கட்டமைப்பு, ஒழுங்கமைப்புக்கு அடித்தளமிட்டு வித்தூன்றியவர் ஆவார்.
கொழும்பு சேதவத்தையைச் சேர்ந்த முஹந்திரம் துடுகலகே டொன் பிலிப் விஜேவர்தன மற்றும் ஹெலினா வீரசிங்க தம்பதியினரின் மூன்றாவது மகனாக 1886 இல் பிறந்த இவர், ஆரம்பக் கல்வியை சேதவத்த பாடசாலையிலும் அதன் பின்னர் முகத்துவாரம் சென் தோமஸ் கல்லூரியிலும் பெற்றார். அதனைத் தொடர்ந்து பிரித்தானியா சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இணைந்து சட்டத்துறையில் உயர்கல்வியை மேற்கொண்ட இவர், பத்திரிகை வெளியீட்டு துறையிலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கற்கும் போது அன்றைய பிரித்தானியாவின் பல பத்திரிகை அலுவலகங்கள் அமைந்திருந்த பகுதியில் இவரும் தங்கி இருந்தார். அதனால் அந்த அலுவலகங்களுக்கு அடிக்கடி சென்று வந்ததன் ஊடாக பத்திரிகை வெளியீட்டு துறை குறித்த ஆர்வம் இவருள் ஏற்பட்டது.
அதேநேரம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இவருடன் கல்வி பயின்ற பல மாணவர்கள் தங்கள் நாடுகளது சுதந்திரத்திற்காக பத்திரிகைகளைப் பயன்படுத்தி வந்ததையும் இவரும் அறிந்திருந்தார். இச்சூழலில் இலங்கையும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு உள்ளாகி இருந்தது. அச்சமயம் சுதந்திரத்தின் தேவையும் முக்கியத்துவமும் உணரப்படலாயின.
இவ்வாறான சூழலில் சட்டத் துறையில் உயர்கல்வியை நிறைவு செய்து பரிஸ்டர் பட்டம் பெற்றுக்கொண்ட டி.ஆர் விஜேவர்தன 1912 இல் தாயகம் திரும்பி புதுக்கடை நீதிமன்றத்தில் சட்டத் தொழிலில் ஈடுபடலானார். அச்சமயம் அவருக்கு 26 வயது. அவர் நாட்டின் சுதந்திரத்திற்காக உழைப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்.
அதனால் சுதந்திரத்தின் தேவையையும் முக்கியத்துவத்தையும் விரைவாகவும் வேகமாகவும் மக்கள் மயப்படுத்துவதற்கு அவர் விரும்பினார். அதற்கு பத்திரிகை சிறந்த ஊடகமெனக் கருதினார் டி.ஆர். விஜேவர்தன.
பிரித்தானியாவிலுள்ள பத்திரிகை அலுவலகங்களுக்கு நேரில் சென்ற போது பத்திரிகை வெளியீடு, பத்திரிகைகளின் ஒழுங்கமைப்பு, கட்டமைப்பு, பத்திரிகை உள்ளடக்கம் உள்ளிட்ட அனைத்து விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தி பெற்றுக்கொண்ட அனுபவமும் பரந்த அறிவும் இதற்கு அடித்தளமாகின.
அன்றைய காலகட்டத்திலேயே பிரித்தானியாவில் பத்திரிகை வெளியீட்டுத்துறை செல்வாக்கு மிக்க ஒரு கைத்தொழில் துறையாக வளர்ச்சி பெற்றிருந்ததையும் அவர் அவதானித்தார். இந்நிலையில் தாயகம் திரும்பி சட்டத் தொழில் ஊடாகப் பொதுவாழ்வை ஆரம்பித்திருந்த டி.ஆர் விஜேவர்தன, பத்திரிகை துறையின் ஊடாக நாட்டின் சுதந்திரத்திற்கு பங்களிக்க விரும்பினார். அதற்கு அவர் பத்திரிகை வெளியீட்டுத்துறையில் பெற்றிருந்த அறிவும் அனுபவமும் பக்கபலமாகின.
இந்நாட்டின் அச்சு வெளியீட்டுத்துறையின் வரலாறு கி.பி.1725 ஆம் ஆண்டில் ஆரம்பமான போதிலும் 1802 மார்ச் 02 ஆம் திகதி அரசாங்க வர்த்தாமானி பத்திரிகை தமிழ், சிங்கள மொழிகளில் முதன் முதலாக வெளியானது. அரச விளம்பரங்களை வெளியிடுவதற்காக மாத்திரம் வெளியானதே இந்த வர்த்தமானி.
அதன் பின்னர் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தனித்தனி பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் ஆங்காங்கே வெளிவரலாயின. அவை பெரும்பாலும் தனிநபர்களால் வெளியிடப்பட்டன. அவை அச்சு பத்திரிகை, சஞ்சிகைக்குரிய கட்டமைப்பு ஒழுங்குகளைக் கொண்டிருக்கவுமில்லை. நீடித்து நிலைக்கக்கூடிய பொருளாதார வசதிகளும் அவற்றிடம் இருக்கவுமில்லை. நிதி நெருக்கடி அன்றைய பத்திரிகை, சஞ்சிகைகளுக்கு பெரும் சவாலாக இருந்தது.
இவ்வாறான சூழலில் 1909 முதல் எச்.எஸ். பெரேரா என்பரை ஆசிரியாராகக் கொண்டு வெளியாகிக் கொண்டிருந்த ‘தினமின’ என்ற சிங்கள மொழிப் பத்திரிகையும் நிதி நெருக்கடிக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்தது. அதனால் அப்பத்திரிகையும் கைவிடப்படக்கூடிய நிலையை அடைந்திருந்தது.
இது டி.ஆர் விஜேவர்தன பத்திரிகை வெளியீட்த் துறையில் பிரவேசிக்கும் காலசூழலாக இருந்தது. இந்நிலையில் தினமின பத்திரிகையை வாங்கிய டி.ஆர் விஜேவர்தன, அதனைப் பத்திரிகைக்குரிய கட்டமைப்பு ஒழுங்குகளுடன் சகோதரர் டி.சி. விஜேவர்தனவுடன் இணைந்து 1914 முதல் வெளியிடத் தொடங்கினார். புதுப்பொலிவுடன் வெளியான அப்பத்திரிகைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றது. அதனைத் தொடர்ந்து சேர் பொன்னம்பலம் அருணாச்சலம் வெளியிட்டு வந்த, ‘தி சிலோனிஸ்’ என்ற ஆங்கில நாளிதழை 1917 இல் ரூ.16,000.00 இற்கு வாங்கிய டி.ஆர் விஜேவர்தன, அதனை ‘சிலோன் டெய்லி நியூஸ்’ என்ற பெயரில் 1918 ஜனவரி 03 ஆம் திகதி முதல் வெளியிடலானார். இப்பத்திரிகைக்கும் மக்கள் நல்ல வரவேற்பை அளித்தனர். இந்நாட்டு மக்களின் சுதந்திரத் தாகம், எதிர்பார்ப்பு குறித்த செய்திகள் உடனுக்குடன் அன்றைய ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு சென்றடைய இப்பத்திரிகை வழிவகை செய்தது.
இவ்வாறான நிலையில் லேக் ஹவுஸ் நிறுவனம் தற்போது அமையப் பெற்றுள்ள இடத்தில் பத்திரிகை வெளியீட்டுத்துறைக்கென தனியான அலுவலகமொன்றை ஆரம்பித்தார் டி.ஆர் விஜேவர்தன. அதனைத் தொடர்ந்து 1926 இல் அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிட்டட் என்ற நிறுவனத்தையும் அவர் ஸ்தாபித்தார். அதே காலப்பகுதியில் ‘சிலுமின’ என்ற பத்திரிகையையும் வெளியிடத் தொடங்கினார்.
இவர் வெளியிடும் பத்திரிகைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்று வந்த நிலையில் சுதந்திரம் குறித்த தேவையும் முக்கியத்துவமும் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் வளர்ச்சியடையத் தொடங்கியது.
இந்நிலையில் இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு சுதந்திரம் தொடர்பான செய்திகளையும் அதன் முக்கியத்துவத்தையும் கொண்டு செல்வதற்கு ஒரு பத்திரிகை இல்லாத குறைபாடு காணப்பட்டது. இது தொடர்பில் கவனம் செலுத்திய டி.ஆர். விஜேவர்தன அக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் 1932 மார்ச் 15 ஆம் திகதி முதல் ‘தினகரன்’ தமிழ்மொழிப் பத்திரிகையை வெளியிடலானார். இதன் ஊடாக இந்நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்காக தமிழ் மொழி சாராத ஒருவரான டி.ஆர் விஜேவர்தன, தமிழ் பத்திரிகையை வெளியிட்ட முதலாமவர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டுள்ளார். அத்தோடு நில்லாது மூன்று மொழிகளில் பத்திரிகை வெளியிடும் நிறுவனத்தை கட்டியெழுப்பிய கௌரவமும் அவருக்குரியதே.
பொதுவாக எந்தவொரு பத்திரிகைக்கும் ஆசிரிய பீடம், விளம்பரப் பிரிவு, விநியோகப் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளும் மிகவும் முக்கியமானவை. அவற்றை அறிமுகப்படுத்தியவரும் டி.ஆர். விஜேவர்தன ஆவார். இலங்கையில் பத்திரிகைத்துறைக்கென ஆசிரிய பீடப் பிரிவை அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். பத்திரிகையின் உள்ளடக்கம் மற்றும் அச்சு இரண்டிலும் அதன் தரத்தை மேம்படுத்துவதிலும் அதன் விநியோகத்தை விரிவுபடுத்திலும் அதிக அக்கறை எடுத்துக்கொண்டதன் ஊடாக தீவின் முதன்மையான காலைப் பத்திரிகைகளை உருவாக்கினார்.
ஒரு தடவை டி.ஆர் விஜேவர்தன தமது பத்திரிகை கொள்கை குறித்து இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
‘சொத்து செல்வங்களை அடைந்து கொள்வதற்காக நான் பத்திரிகைத்துறையில் பிரவேசிக்கவில்லை. பணம் தேடிக்கொள்ள வேண்டிய தேவை என்றால் பத்திரிகைத்துறையை விடவும் பல வழிகள் அதற்கு உள்ளன. இத்துறைக்காக நான் பெரிதும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறேன். பொதுமக்கள் சேவையும் தேசிய அபிவிருத்தியுமே எனது பத்திரிகைத்துறையின் நோக்கம்’.
அந்தக் கொள்கை, கோட்பாட்டின் அடிப்படையில் லேக் ஹவுஸ் நிறுவனப் பத்திரிகைகள் ஆரம்பம் முதல் பணியாற்றி வருகின்றன. குறிப்பாக இந்நாட்டின் சுதந்திரத்தற்கும் தேசிய அபிவிருத்திக்கும் பாரிய பங்களித்துவரும் இப்பத்திரிகைகள், பொதுமக்கள் சேவையையே முக்கிய பணியாக முன்னெடுத்து வருகின்றன.
டி.ஆர். விஜேவர்னவினால் ஆரம்பிக்கப்பட்ட லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனம் 1973 இல் அரசுடமையாகப்பட்டு அரச நிறுவனமாக இயங்கி வருகின்றது. அவர் வெளியிடத் தொடங்கிய ஒவ்வொரு பத்திரிகையும் உறுதியான வாசகர் அடித்தளத்தோடு பயணித்த வண்ணமுள்ளன. அதன் பயனாக தினமின, டெய்லி நியூஸ் பத்திரிகைகள் ஒரு நூற்றாண்டைக் கடந்து வெளிவந்து கொண்டிருக்கின்ற அதேநேரம், தினகரன் ஒரு நூற்றாண்டை அண்மிக்கும் தறுவாயை நெருங்குகிறது.
இலங்கைப் பத்திரிகைத் துறையின் பயணப் பாதையை மாற்றியமைத்து இத்துறையில் மறுமலர்ச்சியையும் புத்துயிர்ப்பையும் ஏற்படுத்தியவர் டி.ஆர். விஜேவர்தன என்றால் அது மிகையாகாது
மர்லின் மரிக்கார்