காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்காக ஐ.நா பாதுகாப்புச் சபையில் வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் காசா மீது நேற்றும் இஸ்ரேல் கடுமையான வான் தாக்குதல்களை நடத்தியது.
போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு கெய்ரோவில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதோடு பாதுகாப்புச் சபையில் நடைமுறை சாத்தியம் கொண்ட தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றுக்கான மாற்று தீர்மானம் ஒன்றை அமெரிக்கா முன்வைக்க திட்டமிட்டுள்ளது.
முற்றுகையில் உள்ள காசாவின் மனிதாபிமான நிலை குறித்து ஐக்கிய நாடுகள் சபை கடும் கவலையை வெளியிட்டிருப்பதோடு, அங்கு நிலவும் உணவு தட்டுப்பாடு தடுக்க முடியாத குழந்தை மரணங்களை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.
நான்கு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இடைவிடாத தாக்குதல்களில் 2.4 மில்லியன் மக்கள்தொகை கொண்ட காசாவின் பெரும்பகுதி தரைமட்டமாக்கப்பட்டு பஞ்சத்திற்கும், மக்கள் தொகையில் முக்கால் பங்கினர் இடம்பெயர்வுக்கும் காரணமாகியுள்ளது.
“இந்தப் போரை நிறுத்துவதற்கு எம்மில் இன்னும் எத்தனை பேர் இறக்க வேண்டும்?” என்று தெற்கு காசாவின் பிரதான நகரான கான் யூனிஸில் உள்ள பலஸ்தீன மருத்துவர் ஒருவரான அஹமது மொக்ரபி தெரிவித்துள்ளார்.
“மனிதாபிமானம் எங்கே?” என்றும் கேள்வி எழுப்பினார்.
போர் நிறுத்தத்திற்கான சர்வதேச அழுத்தங்கள் மற்றும் முயற்சிகள் பின்னடைவை சந்தித்து வரும் சூழலில் பாதுகாப்புச் சபையில் அமெரிக்க நேரப்படி நேற்று வாக்கெடுப்பு ஒன்று இடம்பெறவிருந்ததோடு அதற்கு எதிராக அமெரிக்கா வீட்டோ வாக்கை பயன்படுத்த வாய்ப்பு இருந்தது.
இது தொடர்பில் பொது நிலைப்பாடு ஒன்றை பெறுவதற்கு ஒரு மாதமாக போராடிய நிலையில் ஹங்கேரி தவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து நாடுகளும் “மனிதாபிமான போர் நிறுத்தம்” ஒன்றுக்கு திங்கட்கிழமை (19) அழைப்பு விடுத்தன.
தெற்கு காசாவில் 1.5 மில்லியன் பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா நகரில் இஸ்ரேல் படை நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது என்றும் அந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இஸ்ரேலிய தரைப்படை இன்னும் நுழையாத பகுதியாக உள்ள ரபா நகர் காசா மக்களுக்கு எகிப்து வழியாக உதவிகள் செல்லும் வாயிலாகவும் உள்ளது.
இந்த நகர் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களால் மனிதாபிமான செயற்பாடுகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டிருப்பதோடு எல்லை அடிக்கடி மூடப்படுவதால் உணவு விநியோகத்திலும் இடையூறு ஏற்பட்டுள்ளது என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் தெரிவித்துள்ளது. வடக்கு காசாவில் உள்ள ஆறில் ஒரு குழந்தை தற்போது ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
வடக்கு காசாவில் மனிதாபிமான உதவி விநியோகத்திற்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலிய படை சூடு நடத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இதன்போது ஒருவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்கா மாற்றுத் தீர்மானம்
அல்ஜீரியாவினால் கொண்டுவரப்பட்ட அவசர மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தின் மீதே பாதுகாப்புச் சபையில் நேற்று வாக்கெடுப்பு நடைபெறவிருந்தது.
இதற்கு மாற்றாக அமெரிக்க தீர்மான வரைவு ஒன்றை கொண்டுவந்திருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதில் பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிப்பது மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு உள்ள அனைத்து தடங்கல்களையும் அகற்றுவதை அடிப்படையாகக் கொண்டு காசாவில் நடைமுறைப்படுத்த முடியுமான விரைவில் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனை வாக்கெடுப்புக்கு விடுவதில் அமெரிக்கா அவசரம் காட்டவில்லை என்றும் பேச்சுவார்த்தைக்கான கால அவகாசம் பெறப்படும் என்று அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முழுமையான போர் நிறுத்தம் மற்றும் காசா பகுதியில் நிவாரண உதவிகளுக்கு அனுமதித்தாலேயே கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை ஒன்றுக்கு இணங்குவதாக ஹமாஸ் அமைப்பு நேற்று முன்தினம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியது.
“மூன்று விலைகளை கொடுத்தாலேயே (இஸ்ரேலிய) ஆக்கிரமிப்புக் கைதிகள் திரும்புவார்கள். முதலில் எமது மக்களுக்கான நிவாரணம் வழங்கப்பட்டு அவர்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும். இரண்டாவது ஆக்கிரமிப்பு முடிவுக்கு வர வேண்டும் என்பதோடு மூன்றாவது இஸ்ரேலிய சிறையில் உள்ள எமது 10,000 கைதிகள் விடுவிக்கப்படும் உண்மையான கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை ஒன்று எட்டப்பட வேண்டும்” என்று ஹமாஸ் அரசியல் பிரிவு உறுப்பினர் கலீல் அல் ஹய்யா, அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன போராளிகளின் பிடியில் இருக்கும் பணயக்கைதிகளை விடுவிக்காத பட்சத்தில் ரபா மீது தாக்குதல் தொடுக்க இஸ்ரேல் எதிர்வரும் ரமலான் மாதம் வரை கெடு விதித்துள்ளது.
இந்நிலையில் காசாவின் நிலை குறித்து எகிப்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மெயில் ஹனியோ நேற்று எகிப்தை சென்றடைந்ததாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டாரின் மத்தியஸ்தத்தில் கெய்ரோவில் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாத சூழலில், காசாவுக்கு மேலும் உதவி கிடைக்காத பட்சத்தில் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறுவதாக ஹமாஸ் எச்சரித்திருப்பதோடு, ஹமாஸின் நிபந்தனைகள் “மாயையானது” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
உயிரிழப்பு 29,195 ஆக உயர்வு
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி வெடித்த இந்தப் போரில் கடந்த 24 மணி நேரத்தல் காசா எங்கும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மேலும் 103 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி அந்தக் குறுகிய நிலத்தில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 29,195 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 69,179 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று 137 ஆவது நாளாக இஸ்ரேல் போர் விமானங்கள், துப்பாக்கி படகுகள் மற்றும் பீரங்கிகளை பயன்படுத்தி பல படுகொலைகளில் ஈடுபட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.
குறிப்பாக தெற்கு கான் யூனிஸில் குடியிருப்புப் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கிகள் நடத்திய தாக்குதல்களில் 6 பேர் கொல்லப்பட்டு மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
கான் யூனிஸ் நகரில் மேற்கில் உள்ள நாசர் மற்றும் அல் அமல் மருத்துவமனையில் இஸ்ரேலிய படைகளின் சுற்றுவளைப்புகள் தொடர்ந்து நீடித்து வருவதோடு அங்கு நோயாளர்கள், மருத்துவப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிக்கியுள்ளனர்.
மத்திய காசாவில் உள்ள அகதி முகாம்களில் இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் நால்வர் கொல்லப்பட்டு மேலும் 10 பேர் காயமடைந்ததாக வபா செய்தி நிறுவனம் கூறியது.
கடந்த பல வாரங்களாக காசா பகுதிக்கான ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் சொந்த ஊரான கான் யூனிஸை மையப்படுத்தியே இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருந்தது. நேற்றும் அங்கு கடும் வான் தாக்குதல்கள் இடம்பெற்றதாக அங்கிருப்போர் குறிப்பிட்டுள்ளனர்.
“ஏவுகணைகள் எம் மீது விழுந்த வண்ணம் உள்ளன. மனிதனால் இன்னும் எவ்வளவு சமாளிக்க முடியும்” என்று மத்திய காசாவின் சவைதா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் தனது மனைவி மற்றும் மகளை இழந்த ஐமன் அபூ ஷம்மலி ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
“வடக்கில் உள்ளவர்கள் பசியால் இறக்கிறார்கள் நாம் குண்டுகளால் இறந்து வருகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பலஸ்தீன பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இஸ்ரேலின் கொலை, கற்பழிப்பு மற்றும் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டு தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. உரிமைகள் நிபுணர் குழு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.