Home » மாற்றங்களைக் கொணரும் வசந்த காலமாகட்டும்
தவக்காலம்

மாற்றங்களைக் கொணரும் வசந்த காலமாகட்டும்

by sachintha
February 20, 2024 12:18 pm 0 comment

Valentine’s Day என்றழைக்கப்படும் அன்பின் திருநாளன்று நாம் இம்முறை தவக்காலத்தைத் தொடங்கியிருப்பது இறைவன் நமக்கு வழங்கியுள்ள வரமாக எண்ணிப்பார்ப்போம்.

நாம் பயணிக்கின்ற இந்த தவக்காலம் முழுவதையும், அன்பு எண்ணங்களால், செயல்களால் நிறைப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வோம்.

இந்த வழிபாட்டு காலத்திற்கு, நாம் வழங்கியுள்ள பெயர், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. தமிழில் ‘தவக்காலம்’ என்று நாம் அழைப்பதை, ஆங்கிலத்தில் Lent அல்லது Lenten Season என்று அழைக்கிறோம்.

Lent என்ற சொல், ‘lente’ என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வந்தது. இலத்தீன் மொழியில், ‘lente’ என்றால், ‘மெதுவாக’ என்று பொருள். Lenten என்ற சொல், Lencten என்ற ஆங்கிலோ சாக்ஸன் (Anglo Saxon) சொல்லிலிருந்து வந்தது. இதன் பொருள் ‘வசந்தகாலம்’. ‘மெதுவாக’, ‘வசந்தகாலம்’ என்ற இரு சொற்களையும் இணைக்கும்போது உருவாகும், ‘மெதுவாக வரும் வசந்தகாலம்’ என்ற சொற்றொடர், தவக்காலத்திற்கு அழகியதோர் அடையாளம்.

உலகின் பல நாடுகளில், மூன்று மாதங்கள் கடும் குளிர்காலம். குளிர்காலத்திற்கு முன்னர், மூன்று மாதங்கள் இலையுதிர் காலம். எனவே, ஏறத்தாழ ஆறு, அல்லது ஏழு மாதங்கள், மரங்களும் செடிகளும், தங்கள் இலைகளை இழந்து, பொழியும் பனியில் மறைந்து போகும்.

ஆனால், அந்த பனிக்குள்ளும், சிறு துளிர்கள், கண்ணுக்குத் தெரியாதபடி வளர்ந்திருக்கும். பனிப்போர்வை, சிறிது சிறிதாகக் கரையும்போது, புதைந்துபோன துளிர்கள், தலை நிமிரும்.

‘வசந்தம்’ – கேட்பதற்கு அழகான சொல், அழகான எண்ணம். உண்மைதான். ஆனால், அந்த வசந்தம் வருவதற்கு முன், சவால்கள் நிறைந்த மாற்றங்கள், பொறுமையாக நிகழவேண்டும்.

ஆறு மாதங்களாக உயிரற்று காணப்படும் தாவர உலகில், திடீரென, ஓரிரவில், மாற்றங்கள் உருவாகி, அது பூத்துக் குலுங்குவது கிடையாது. நம் கண்ணையும் கருத்தையும் ஈர்க்காத வகையில், மிக, மிக மெதுவாக, வசந்த காலம் வந்துசேர்கிறது.

மெதுவாக, நிதானமாக, மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலம், தவக்காலத்திற்கு அழகியதோர் அடையாளம்.

அடையாளங்கள், மனித வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தவக்காலம் என்றதும், பொதுவாக, சாம்பல், சாக்குத்துணி, சாட்டையடி என்ற சோகமான அடையாளங்களே மனதை நிரப்பும். ஆனால், தவக்காலத்தை, ‘மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலம்’ என்ற கோணத்தில் பார்க்க திருச்சபை நம்மை அழைக்கிறது,

மாற்றத்தை, மிகக் குறிப்பாக, மனமாற்றத்தை உருவாக்க நமக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அரிய வாய்ப்பு, தவக்காலம். மாற்றத்தை நமக்கு நினைவுறுத்த, தவக்காலத்தின் முதல் நாளான திருநீற்றுப் புதனன்று நாம் பயன்படுத்தும் ஓர் அடையாளம் – சாம்பல். அருள்பணியாளர், நம் நெற்றியில் சாம்பலைக் கொண்டு சிலுவை அடையாளம் வரைந்தபோது, “மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள்” என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.

சில ஆண்டுகளுக்கு முன், சாம்பலை நெற்றியில் பூசும்போது அருள் பணியாளர் பயன்படுத்திய வார்த்தைகள், நம் இறுதி முடிவை நினைவுறுத்தும் வார்த்தைகளாக அமைந்தன: “நீ மண்ணாக இருக்கிறாய்; மண்ணுக்கேத் திரும்புவாய்.” என்பதே அந்த வார்த்தை.

சாம்பலை, அழிவாக, மரணமாக மட்டும் எண்ணிப்பார்க்காமல், புதிய மாற்றங்களைக் கொணரும் அடையாளமாகவும் காணலாம்.

ஒரு பொருள், நெருப்பில் அழிந்ததும், உருவாவது சாம்பல். எனவே, சாம்பலை நாம் அழிவின் அடையாளமாகவே பெரும்பாலும் கருதுகிறோம். ஆனால், அதே சாம்பல், உயிர்களை வளர்க்கும் உரமாகவும், பொருள்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்கி, அவற்றை ஒளிமயமாக்கும் காரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

அழிவின் அடையாளங்களாக நாம் கருதும், சாம்பலையும், நெருப்பைப்போலவே, பெருவெள்ளமாக வரும் நீரையும், அழிவின் அடையாளமாகக் கருதுகிறோம். பெருவெள்ளத்தின் அழிவிலிருந்து, அற்புதங்களை நிகழ்த்திய இறைவனை, (தொடக்கநூல் 9: 8-15) நமக்கு நினைவுறுத்துகிறது.

நோவா காலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் இறுதியில், இறைவன், புதியதொரு வாக்குறுதியை அளித்தார். அந்த வாக்குறுதியின் அடையாளமாக வானவில்லை விண்ணில் பதித்தார். கிறிஸ்தவ மறையில் மட்டுமல்லாமல், பல்வேறு மறைகளிலும், கலாச்சாரங்களிலும், வானவில், நம்பிக்கையின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

அழிவிலிருந்து அற்புதங்களை உருவாக்கும் இறைவனின் வார்த்தைகள் இந்த வாசகத்தில் இவ்வாறு ஒலிக்கின்றன: கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: “இதோ! நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும், பேழையிலிருந்து வெளிவந்து உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன்…

நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன்.” (தொடக்கநூல் 9: 8-13)

ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று, இயேசு, சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்க, திருஅவை நம்மை அழைக்கிறது. தவக்காலத்தை, ‘மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலம்’ என்ற வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பதுபோல், சோதனைகளையும் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்க முயற்சி செய்வோம்.

‘சோதனை’ என்ற வார்த்தையைக் கேட்டதும், அவ்விடத்தை விட்டு ஓடிவிடவேண்டும் என்ற அச்சமே நம்மில் பலருக்கு தோன்றும். ஆற அமர சிந்தித்தால், சோதனைகள் இல்லாத மனித வாழ்வு இல்லை என்ற உண்மையை நாம் உணரலாம். இயேசுவே சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இயேசு சோதனைகளைச் சந்தித்ததும், அவற்றை அவர் வென்றதும், நற்செய்தி (மாற்கு 1:12-15) நமக்குச் சொல்லித்தரும் நல்ல பாடங்கள்.

சோதனைகளை நாம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம்? நோவா காலத்தில் வந்ததுபோல், தப்பித்துக்கொள்ள முடியாத அளவு பெருகிவரும் ஒரு காட்டாற்று வெள்ளமாக, சோதனைகளையும், அதில் அடித்துச் செல்லப்படும் பரிதாபமானப் பாவிகளாக நம்மையும் எண்ணிப் பார்க்கிறோம். இத்தகைய எண்ணங்களுக்கு இடம்கொடுக்கும்போது, சோதனைகளுக்கு ஓர் அபூர்வ சக்தியை நாம் தருகிறோம்.

சோதனைகளுக்கும், அவற்றின் அடிப்படைக் காரணமான தீய சக்திக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதால், உள்ளத்தில் நம்பிக்கை குலைகிறதே, அதுதான் இன்று நம்மில் பலர் சந்திக்கும் மாபெரும் சோதனை. சோதனைகள் சக்தி வாய்ந்தவைதான். மறுப்பதற்கில்லை. ஆனால், அவற்றை எதிர்த்து நிற்கவும், அவற்றோடு போராடி வெற்றிபெறவும், நமக்கு சக்தி உள்ளது. இதை நாம் நம்பவேண்டும்.

நாம் வாழும் உலகில், ஆக்கப்பூர்வமான செயல்கள், ஆயிரக்கணக்கில், ஒவ்வொரு நாளும் நடக்கின்றன. ஆங்காங்கே தீயவைகளும், அழிவுகளும் நடக்கின்றன. ஆனால், நல்ல நிகழ்வுகளை காட்டுவது, விறுவிறுப்பைத் தராது என்பதாலும், அவற்றால், இலாபம் இல்லை என்பதாலும் அழிவுகளையும் பாதிப்பு களையுமே ஊடகங்கள் காட்டுகின்றன.

இந்த உலகத்தின் அழிவு சக்திகளுக்கு முன் நாம் வெறும் பார்வையாளர்கள் தான்… நம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற தவறான முடிவுக்கு நாம் வருகிறோம். இதுவே இன்று நம் மத்தியில் உள்ள பெரிய சோதனை. இந்தச் சோதனையை முதலில் நாம் வெல்ல வேண்டும்.

தம் பணிவாழ்வைத் தொடக்குவதற்கு முன்னதாகவே இயேசு சோதனைகளைச் சந்தித்தார். சோதனைகளைக் கண்டு அவர் துவண்டு போயிருந்தால், அவர் தன் மீட்புப் பணியைத் துவக்கியிருக்கவே மாட்டார்.

நல்லவேளை. இயேசு தனக்கு வந்த சோதனைகளை இனம் கண்டு வென்றதால், துணிவுடன் தன் பணிகளைத் தொடக்கினார். அதிலும் குறிப்பாக, தன் உறவினரும், முன்னோடியுமான யோவான் கைது செய்யப்பட்டதை அறிந்தபின், இயேசு, அவரது கைது நிகழ்வால் மனம் தளர்ந்து போகாமல், “கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே கலிலேயாவிற்கு வந்தார்” (மாற்கு 1:14)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x