யாழ். நெடுந்தீவில் வாய்மொழியாக இருந்த நாட்டார் பாடல்களின் தொகுப்பு நூலான ‘முள்ளில்லா வேலி’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 17.02.2024 சனிக்கிழமை காலை 10 மணிக்கு நெடுந்தீவு மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஆசிரியர் த. ஸ்ரீபிரகாஷ் இந்நூலைத் தொகுத்து நூல்வடிவில் ஆக்கியுள்ளார்.
வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற பிரதேசங்களில் தமிழர்கள் மத்தியில் வாய்மொழிப் பாடல்கள் மற்றும் கதைகள் அக்காலத்தில் பிரபல்யமாக இருந்தன. தமிழ் மக்களின் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்ததாக அந்த வாய்மொழி இலக்கியங்கள் காணப்பட்டன. அந்த வாய்மொழி நாட்டார் பாடல்கள் காலப்போக்கில் படிப்படியாக அருகிச் சென்று விட்டன. இன்றைய காலத்தில் குழந்தைகளை உறங்க வைப்பதற்காக தாலாட்டுப் பாடுகின்ற தாய்மாரையே காண முடிவதில்லை.
இவ்வாறாக அன்றைய காலத்தில் நெடுந்தீவில் மக்கள் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்திருந்த வாய்மொழி நாட்டார் பாடல்களை சிரமப்பட்டு தேடியறிந்து தொகுத்து நூல்வடிவில் கொண்டு வந்துள்ளார் ஆசிரியர் த. ஸ்ரீ பிரகாஷ்.மேற்படி நூல் வெளியீட்டு நிகழ்வின் தலைமையுரையை ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் திருமதி சாரதா தேவி கிருஷ்ணதாஸ் வழங்குவார். நூல் வெளியிட்டு உரையினை சிரேஷ்ட சட்டத்தரணி சோ. தேவராஜா ஆற்றுவார்.
இந்நிகழ்வில் பலர் கருத்துரை வழங்கவுள்ளனர். செம்முகம் ஆற்றுகை குழு வழங்கும் ‘எலியார் எங்கே போனார்?’ என்ற சிறுவர் நாடகமும், ‘தேவை’ என்ற குறுநாடகமும் ஏனைய கலைநிகழ்வுகளும் இடம்பெற உள்ளன.