Sunday, September 8, 2024
Home » அரச பல்கலைக்கழகங்களில் பல்துறை பட்டங்களை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

அரச பல்கலைக்கழகங்களில் பல்துறை பட்டங்களை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

- இலங்கையில் 3 சர்வதேச பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை

by Rizwan Segu Mohideen
February 14, 2024 8:50 pm 0 comment

கல்வியில் சர்வதேச அனுபவமுள்ள நிபுணர்களின் அவதானத்திற்குப் பின்னர் அரச பல்கலைக்கழகங்கள் மூலம் பல்துறைப் பட்டங்களை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

இலங்கையில் 03 சர்வதேச பல்கலைக்கழகங்களை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்,

“03 சர்வதேச பல்கலைக்கழகங்களை இலங்கையில் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இவற்றில் இரண்டு பல்கலைக்கழகங்கள் ஆரம்பிப்பதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மே மாதத்திற்குள் மூன்றாவது பல்கலைக்கழகமும் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும்.

கண்டியில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (indian institutes of technology) ஆரம்பிக்கப்பட உள்ளது. ஏனைய இரண்டு பல்கலைக்கழகங்களும் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தை மையமாக கொண்டு அவற்றின் இரண்டு கிளைகள் திறக்கப்படவுள்ளதுடன் அவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவும் தயாராக உள்ளோம்.

விஜயதாச ராஜபக்ஷ குழுவின் அறிக்கை மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் குழு அறிக்கையை இணைத்து புதிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன. குழுவின் தலைவர் பதவிக்கு, முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவனை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கான சட்டக் கட்டமைப்பு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டு, சட்ட வரைவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அரச பல்கலைக்கழகங்களில் பல்துறை பட்டங்களை வழங்குவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இலங்கைக்கு வருகை தருமாறு அவுஸ்திரேலிய உயர்கல்வி அமைச்சருக்கு அவுஸ்திரேலிய தூதரகத்தின் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ன், சிட்னி பல்கலைக்கழகம் உட்பட 10 பல்கலைக்கழகளுடன் தொடர்புள்ள நிபுணத்துவ அறிவுள்ள வேந்தர்களும் இலங்கைக்கு வருகை தர உள்ளனர். எமது கல்வி நிலைமையை ஆய்வுசெய்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தனியார் உயர்கல்வித் துறையை முறைப்படுத்த வேண்டும். ஆனால் கல்வித்துறையை விற்பனை செய்வதற்கு நாம் தயாரில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்” என்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x