வெளிநாட்டில் இருந்து வந்து , யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்த நபரின் உடைமைகளை களவாடிய திருட்டு சந்தேகநபரை பொலிஸார் ஒரு மணி நேரத்தில் கைது செய்து , திருட்டு போன பொருட்களையும் மீட்டுள்ளனர்.
நீண்ட காலமாக வெளிநாட்டில் வசித்து வந்தவர் விடுமுறையை களிக்கும் நோக்குடன் யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வீடொன்றில் தங்கி இருந்துள்ளார்.
குறித்த வீட்டினுள் நேற்று (13) உள்நுழைந்த திருடன் ,வீட்டில் இருந்த வெளிநாட்டுவாசியின் மடிக்கணினி, கையடக்க தொலைபேசி, கடவுச்சீட்டு, வங்கி அட்டைகள், வங்கி புத்தகங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை களவாடி சென்றுள்ளான்.
இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாரிடம் முறையிட்டதை அடுத்து , துரித விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் அச்சுவேலி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , திருடப்பட்ட பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.விசேட நிருபர்