எகிப்துடனான காசாவின் எல்லை நகரான ரபாவில் இருந்து இரு பணயக்கைதிகளை மீட்டதாக இஸ்ரேல் கூறியிருக்கும் நிலையில் அந்த நகர் மீது நடத்தப்பட்ட உக்கிர வான் தாக்குதல்களில் சிறுவர்கள் உட்பட 100க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நடத்தும் தாக்குதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கானோர் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா நகர் மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டு வருகிறது.
இந்தத் தாக்குதல் திட்டத்திற்கு உதவிக் குழுக்கள் மற்றும் இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்க உட்பட வெளிநாட்டு அரசுகள் கடும் கவலையை வெளியிட்டு வருகின்றன. ரபா நகர் அபாயகரமான மனிதாபிமான நிலைமைய எதிர்கொண்டிருக்கும் நிலையில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்துவது பேரழிவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவம் மற்றும் பொலிஸ் கூட்டு நடவடிக்கையில் சுமார் 130 நாட்களாக பிடிக்கப்பட்டிருந்த இரு பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று (12) காலை அறிவித்தது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலின்போது கடத்திச் செல்லப்பட்ட பெர்னாண்டோ சிமொன் மர்மன் மற்றும் லுவிஸ் ஹார் ஆகிய இருவருமே விடுவிக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறியது. இருவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
“இராணுவம் மற்றும் ஷின் பெட் (இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனம்) நீண்ட காலமாக இந்த நடவடிக்கையில் பணியாற்றி வந்தன. அதனை மேற்கொள்வதற்கு சரியான நேரம் வரை அவர்கள் காத்திருந்தனர்” என்று இராணுவ பேச்சாளர் டனியேல் ஹகரி தெரிவித்துள்ளார்.
இந்த பணயக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கட்டடத்தில் இருந்து அவர்கள் அழைத்துச் செல்லப்படும்போது துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட ஹகரி, துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் அருகில் உள்ள கட்டடங்கள் மீது வான் தாக்குதல்கள் நடத்தியதாகவும் கூறினார்.
எனினும் கடந்த ஞாயிறு இரவு தொடக்கம் இஸ்ரேல் ரபா நகரில் குண்டு மழை பொழிந்ததாக அங்கிருப்போர் விபரித்துள்ளனர். இதன்போது 14 வீடுகள் மற்றும் மூன்று பள்ளிவாசல்கள் தாக்கி அளிக்கப்பட்டதாக பலஸ்தீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 63 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அங்கிருக்கும் அல் ஜசீரா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் காசா சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் ரபா நகரில் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 100க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களை அடுத்து நகரில் இருந்து கரும்புகை வெளிவந்த வண்ணம் இருந்ததாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் விபரித்துள்ளனர்.
உயிரிழப்பு 28,340 ஆக உயர்வு
இந்நிலையில் ரபா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலைத் தொடுத்தால் காசாவில் தம்மிடம் எஞ்சி இருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அது சிதறடிக்கும் என்று ஹமாஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.
காசாவில் தொடர்ந்து 130 பணயக்கைதிகள் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது. இவர்களில் உயிரிழந்த 29 பேரின் உடல்களும் அடங்கும். இதனையொட்டி போர் நிறுத்தம் ஒன்றுக்கான புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் இஸ்ரேல் அண்மைய நாட்களில் நடத்திய தாக்குதல்களில் இரு பணயக்கைதிகள் கொல்லப்பட்டு மேலும் எட்டுப் பேர் காயமடைந்ததாக ஹமாஸ் ஆயுதப் பிரிவை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
காசாவில் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான இடமாக உள்ள ரபா மீதான தரை வழித் தாக்குதல் பாரிய உயிரிழப்புகளுக்கு காரணமாகும் என்று உதவி நிறுவனங்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றன.
சுமார் 1.4 மில்லியன் பலஸ்தீனர்கள் அல்லது காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் தற்போது ரபா நகரில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.
ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டித்திருக்கும் ஹமாஸ் அமைப்பு, எமது மக்கள் மீது படுகொலைகளின் எல்லையை விரிவுபடுத்தி வருவதாகவும் விபரித்துள்ளது.
ரபாவில் அடைக்கலம் பெற்றிருக்கும் சுமார் 1 மில்லியன் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முறையான திட்டம் ஒன்று இன்றி ரபாவில் இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளக் கூடாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை (11) கூறியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதன்போது இரு தலைவர்களும் 45 நிமிடங்கள் பேசியுள்ளனர். காசா மீதான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை மிதமிஞ்சி இருப்பதாகவும் அங்கு பொதுமக்களின் உயிரிழப்புகள் பெரும் கவலை அளிப்பதாக உள்ளதாகவும் ஜோ பைடன் அண்மையில் கூறிய நிலையிலேயே அவர் நெதன்யாகுவுடன் பேசியுள்ளார்.
எனினும் அமெரிக்க தொலைக்காட்சியான ஏ.பி.சி. நியூஸ் நிறுவனத்திற்கு பேட்டியளித்த நெதன்யாகு, ஹமாஸ் ஒழிக்கப்படும் வரை ரபா நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அங்குள்ள பொதுமக்கள் வெளியேற விரும்பினால் பாதுகாப்பான பாதை ஏற்படுத்தப்படும் என்றும் கூறி இருந்தார்.
அவர்கள் எங்கே போவார்கள் என்று நெதன்யாகுவிடம் கேட்டபோது, “உங்களுக்குத் தெரியும், ரபாவின் வடக்கே நாங்கள் விடுவித்த ஏராளமான பகுதிகள் உள்ளன. ஆனால், நாங்கள் விரிவான திட்டம் ஒன்றை வகுத்து வருகிறோம்” என்றார்.
ஏற்கனவே வடக்கு காசா மற்றும் தெற்கு காசாவின் பிரதான நகரான கான் யூனிஸில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களை அடுத்தே அங்கிருந்த பலஸ்தீனர்கள் ரபா வரை துரத்தப்பட்டனர். இதில் பலரும் பல தடவைகள் இடம்பெயர்ந்தே ரபா நகரை அடைந்துள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் ஆறு தடவைகள் இடம்பெயர்ந்து தற்போது ரபாவில் தனது உறவினரின் வீட்டில் அடைக்கலம் பெற்றிருக்கும் இரு குழந்தைகளின் தாயான கதா எல் குத்ர், ரபாவில் இருந்தும் வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
“நேற்றிரவு (11) அதிகாலை 01.00 மணிக்கு இராணுவ நடவடிக்கை ஒன்றை இஸ்ரேல் நடத்தியது” என்று ‘பி.பி.சி. ரேடியோ போர்’ வானொலிக்கு குறிப்பிட்டுள்ளார்.
“அவர்கள் பல பலஸ்தீனர்களை கொன்றார்கள். சரியாக நாம் வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்தோம். என்றாலும் முடியுமான விரைவில் ரபாவில் இருந்து வெளியேறுவதற்கான சமிக்ஞை ஒன்றாகவே இது உள்ளது. ஏனென்றால் கான் யூனிஸ் மற்றும் காசா நகர் என மற்ற நகரங்களிலும் இதே சூழல் தான் இருந்தது.
எனவே நாம் மீண்டும் ஒருமுறை ரபாவில் இருந்து வெளியேற திட்டமிட்டிருக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆளில்லா விமானங்கள் மற்றும் விமானங்களின் சத்தம் கேட்பதாகவும் வெளியேற்றத்திற்கான திட்டம் அறிவிக்கப்படும் வரை காத்திருப்பதாகவும் குத்ர தெரிவித்தார்.
“வழக்கமாக எங்கே செல்ல வேண்டும் என்பது பற்றி அவர்கள் துண்டுப் பிரசுரங்களை எறிந்தும் சமூக ஊடகங்களில் பதிவிட்டும் தெரிவிப்பார்கள். எனவே நாம் அதற்காக காத்திருக்கிறோம்” என்றும் அவர் கூறினார்.
இதேவேளை காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. மத்திய காசா பகுதியில் இருக்கும் டெயிர் அல் பலாஹ் நகரில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் போர் விமானம் நேற்று நடத்திய வான் தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.
காசாவில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 28,340 ஆக அதிகரித்துள்ளது. இதில் 67,984 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசா பகுதியில் உள்ள குடும்பங்கள் மீது இஸ்ரேலியப் படை நடத்திய 19 படுகொலைச் சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 164 பேர் கொல்லப்பட்டு மேலும் 240 பேர் காயமடைந்திருப்பதாக அந்த அமைச்சு டெலிகிராமில் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.