ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மீது நாட்டுமக்கள் நீண்ட கால திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியையே தற்போது எதிர்பார்த்து நிற்கின்றனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியையே நாட்டுமக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, நாம் ஒன்றிணைந்து ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான அகில விராஜ் காரியவசம், மாதம்பையில் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட செயற்குழு கூட்டம் சனிக்கிழமை ( 10 ) மாதம்பை கூட்டுறவுச் சங்க கட்டட வளாகத்தில் சிலாபம் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் ஸ்டீவன் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது.
புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டிய, மாதம்பை, ஆராச்சிக்கட்டுவ, சிலாபம் மற்றும் வென்னப்புவ ஆகிய தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அகில விராஜ் காரியவசம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீண்டகால அரசியல் அனுபவமிக்க ஒரு தலைவர். எமது நாடு மிகவும் சிக்கலான பொருளாதார நிலையில் இருந்தபோதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமது நாட்டை மீட்டெடுத்தார் . படிப்படியாக தற்போது எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. நாம் அதனை பலப்படுத்த வேண்டும். புத்தளம் மாவட்டத்தின் கிராமங்கள் அபிவிருத்தி அடைய வேண்டும் . நாம் ஐக்கிய தேசியக் கட்சியையே பலப்படுத்த வேண்டும் . ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் கீழ் எமது நாடு அபிவிருத்தி அடையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
நாம் கிராமங்கள் தோறும் இந்த செய்தியை மக்களுக்கு எத்தி வைக்க வேண்டும். இதற்காகவே நாம் இங்கு ஒன்று கூடியுள்ளோம் . ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். ஜனாதிபதியின் மீது சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பாரிய நம்பிக்கை வைத்துள்ளனர். எமது நாட்டின் அபிவிருத்திக்கு சர்வதேச நாடுகள் பாரியளவில் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றன . இதனை நாம் கண்கூடாக காண்கிறோம். இதனால் எமது நாடு அபிவிருத்தி அடையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இதனைக் கருத்தில் கொண்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்துவோம். ” என்று கூறினார்.
( நீர்கொழும்பு தினகரன் நிருபர் )