ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து உபாதை காரணமாக விலகியுள்ள வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவுக்கு பதில் அசித்த பெனாண்டோ அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய (11) இரண்டாவது போட்டியில் அசித்த பெனாண்டோ அணியில் இடம்பெற்றார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியின்போது தனது எட்டாவது ஓவரை வீச வந்த சமீர காலில் அசௌகரியத்தை வெளிப்படுத்தினார். அவர் அப்போது இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தபோதும் தொடர்ந்து பந்து வீச வரவில்லை. இதனையடுத்து அவரது வலது காலில் உபாதை ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
எனினும் இது அவரது முந்தைய உபாதைகளுடன் தொடர்புபட்டது அல்ல என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் உபாதைகள் மற்றும் கணுக்கால் காயத்திற்காக சத்திர சிகிச்சைக்கு முகம்கொடுத்த அவர் பல போட்டிகளை தவறவிட்டார்.
இந்நிலையில் அவரது தற்போதைய உபாதையின் தீவிரம் உறுதி செய்யப்படவில்லை. முதலாவது ஒருநாள் போட்டிக்குப் பின்னர் 32 வயதான சமீரா ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் முடிவுகள் இங்கிலாந்தில் உள்ள மருத்துவ நிபுணர் ஒருவரின் ஆலோசனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
“அவர் தற்போது நான்றாக உணர்கின்றபோதும், மருத்துவ நிபுணரிடம் இருந்து முடிவு கிடைக்கப்பெறும் வரையில் அவரது காயத்தின் சரியான நிலை குறித்து எமக்கு உறுதியாகத் தெரியாதுள்ளது” என்று இலங்கை அணி முகாமையாளர் மஹிந்த ஹலன்கொட தெரிவித்துள்ளார்.
அவருக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் பெனாண்டோ கடைசியாக 2022 நவம்பரில் ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆடியதோடு அதுவும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவாகும். இதுவரை (நேற்றைய போட்டி தவிர்த்து) ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் ஒரே ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.
எவ்வாறாயினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சோபித்து வரும் அசித்த பெனாண்டோ ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அண்மைய போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.