கொழும்பு நகரம் உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும் காற்றின் தரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டின் வளிமண்டலம் மாசு அடைந்திருப்பது கடந்த சில தினங்களாக அவதானிக்கப்பட்டு வருகின்றது.
சில தினங்களாக காலை வேளையில் எமது வளிமண்டலத்தில் புகார் தென்படுகின்றது. அதனை நாம் சாதாரண பனிப்புகாராகவே நினைத்துக் கொண்டிருக்கின்றோம். நாட்டில் இப்போது பனிப்பொழிவு உள்ளதும் உண்மைதான். ஆனால் எமது வளிமண்டலம் புகைமூட்டமாகக் காணப்படுவதற்கு பனிப்புகார் மாத்திரம் காரணமல்ல.
வளிமண்டலத்தில் தூசுத்துணிக்ைககள் அதிகரித்து விட்டதனாலேயே இவ்வாறு தென்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் வளிமண்டலம் இவ்வாறு மாசு அடைவதற்கு பல காரணங்கள் உள்ளன. எமது நாட்டில் வாகனங்களிலிருந்து வெளியேறுகின்ற புகையும் இதற்கான ஒரு காரணமாகக் கருதப்படுகின்றது. ஆனால் இலங்கையின் வளிமண்டலம் மாசு அடைவதற்கு வடஇந்தியாவின் கோதுமை வயல்களும் காரணமாக அமைவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வடஇந்தியாவில் உள்ள கோதுமை வயல்களில் அறுவடை முடிவடைந்த பின்னர் வைக்ேகாலுக்குத் தீவைக்கின்றார்கள். அங்குள்ள பெரும் பரப்பிலான வயல்களில் இருந்து வெளியேறுகின்ற புகைமூட்டமானது தமிழ்நாட்டின் வளிமண்டலத்தையும் தாண்டி இலங்கையையும் வந்தடைகின்றது. அதுமாத்திரமன்றி, வடஇந்தியாவின் கோதுமை வயல்களிலிருந்து வெளியேறுகின்ற வைக்ேகால் தூசுத்துணிக்ைககளும் காற்றுமண்டலத்தினால் இலங்கையை வந்தடைகின்றன.
இவ்வாறான காரணிகளால் எமது நாட்டின் காற்று அதன் தரத்தை இழக்க நேரிடுகின்றது. வளிமண்டலத்தில் புகைமூட்டமும் தூசுக்களும் அதிகமாகும் போது அதனை நாம் காற்றுமாசு எனக் குறிப்பிடுகின்றோம். ஆனால் எமது வளிமண்டலமானது எக்காலத்திலும் தூசுக்களாலும் மாசுக்களாலும் நிறைந்துதான் இருக்கின்றது. எனினும் குறிப்பிட்ட அளவைப் பார்க்கிலும் மாசுக்கள் அதிகரிக்கும் போதுதான் சிக்கலே ஏற்படுகின்றது. காற்று அதன் தரத்தை இழப்பது ஒருபுறமிருக்க, வளிமாசு காரணமாக மக்களுக்கு பலவித உடல்உபாதைகளும் தோன்றுகின்றன.
எனவே காற்றின் தரம் வீழ்ச்சியடைவது குறித்து மக்கள் அலட்சியமாக இருந்துவிட முடியாது. குறைந்தபட்சம் முகக்கவசம் அணிந்தவாறு நடமாடுவது ஓரளவு பாதுகாப்புத் தருமென்று மருத்துவர்கள் கூறுகின்றனர். காற்றின் தரம் வீழ்ச்சியடைந்திருக்கும் வேளையிலாவது முகக்கவசத்தை அணிந்து நடமாடுமாறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஐக்கிய அமெரிக்க காற்றின் தரம் நிர்ணயத்துக்கு அமைய நேற்று கொழும்பு நகரில் காற்றின் தரம் 157 சுட்டெண்ணாக பதிவிடப்பட்டுள்ளது. அந்த தரச்சுட்டெண்ணுக்கு அமைய நேற்றுக்காலை இலங்கையின் எதுல்கோட்டே பகுதியில் காற்றின் தரம் 172 சுட்டெண் புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அத்துடன் பதுளை, மொனராகலை, தம்புள்ளை, மஹரகம உள்ளிட்ட பகுதிகளில் நேற்றைய தினம் காற்றின் தரம் 150 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
காற்று தர சுட்டெண் (AQI) என்பது உயிரினங்கள் சுவாசிக்கத் தேவையான அளவு காற்று இருக்கிறதா? அது எந்தளவு மாசுபட்டு இருக்கிறது என்பதைப் பற்றிய அளவீடு ஆகும். இதனைக் கணிப்பதற்கென்று பிரத்தியேகமான சாதனங்கள் இருக்கின்றன.
பூச்சியம் தொடக்கம் 50 வரை சுட்டெண் இருப்பின் அது திருப்திகரமானதாகும். அதுவே 51–100 வரை செல்லுமானால் மக்கள் எளிதில் நோய்வாய்ப்படக் கூடிய ஆபத்து உள்ளது. அதாவது மூச்சுக்கோளாறு போன்ற உபாதைகள் ஏற்படலாம்.
101–200 வரை செல்லுமானால் நுரையீரல் நோய், இருதய நோய் கொண்டவர்களுக்கும், மேலும் சிறார் மற்றும் முதியோர்களுக்கும் மூச்சு விடுவதில் பாதிப்பை ஏற்படுத்தும். 201–300 வரையான மாசுக்காற்றினை தொடர்ச்சியாக நுகர்வோருக்கு சுவாசக் கோளாறும், ஏற்கனவே இருதய நோய் உடையோருக்கு அதிக பாதிப்புகளும் ஏற்படும்.
301–400 வரையான மாசுக்காற்றினை தொடர்ச்சியாக நுகர்வோருக்கு சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். மேலும் இருதய, நுரையீரல்நோய் உடையவர்களுக்கு மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
40–500 வரையான சுட்டெண் காணப்பட்டால் நல்ல உடல் நலத்துடன் இருக்கும் நபர்களுக்கு சுவாச நோய்கள் ஏற்படும் ஆபத்துண்டு. மேலும் நுரையீரல்,இருதய நோய் பாதிப்புகள் உடையோர்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்தியாவின் கங்கை சமவெளி பகுதிதான் மிக மோசமான காற்று மாசடைந்த பகுதியாகும். பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்கம் வரையான இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த மாசு காரணமாக தங்கள் வாழ்நாளில் சராசரியாக 7.6 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது காற்றுமாசு என்பது சுகாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் ஒன்றாகியுள்ளதால், மக்கள் முடிந்தளவு அவதானம் பேணுவது அவசியமாகும். முகக்கவசம் தகுந்த பாதுகாப்புத் தருமானால் அதனை அணிந்து நடமாடுவது சிறந்ததாகும்.