தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.3.56 கோடி செலவில் அமைக்கப்பட்ட 58 வீடுகளை உள்ளடக்கிய வீடமைப்பு திட்டத்தின் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் கலந்துகொண்டு புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தார். அத்தோடு சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் இவ்வீடமைப்பு திட்டத்திலுள்ள வீடுகளுக்கான சாவிகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.எஸ். செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களுக்கு விஷேட பேட்டியொன்றை அளித்தார்.
அச்சமயம் அவர் குறிப்பிடும் போது, ‘தமிழகத்தில் இலங்கை தமிழர்களின் 106 முகாம்கள் இருக்கின்றன. அந்த முகாம்களில் 20 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அகதிகள் என்ற வார்த்தையை நீக்கி விட்டு மறுவாழ்வு முகாம் என்ற பெயரை கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு தான்.
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு ரூ. 400 கோடியில் முதல் கட்டமாக 3,551 வீடுகளும், இரண்டாம் கட்டமாக 3,953 வீடுகளும் புதிதாகக் கட்டப்படுகின்றன. கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, 106 முகாம்களில் தங்கியுள்ள 20 ஆயிரம் குடும்பத்தினருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது ரூ.184 கோடி பெறுமதியான உணவுப் பொருள்கள், கப்பல்கள் மூலம் இலங்கைத் தமிழர்களுக்காக அனுப்பிவைக்கப்பட்டன என்று கூறினார்.
அதேநேரம், கடல் தான் நம்மை பிரித்துள்ளது. தமிழர் என்ற உறவு நம்மை எப்போதும் இணைத்துதான் வைத்திருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிக்கு அனுப்பியுள்ளோம். இலங்கை அரசாங்கம், தமிழ்நாடு முதல்வர் நடவடிக்கையை கூர்ந்து அவதானித்து, கடந்த மாதம் இலங்கை தூதகரத்தில் இருந்து அந்நாட்டு ஆளுநரை அனுப்பி, முதன் முதலாக இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 200 பேரை தெரிவு செய்து அந்நாட்டு அரசு, குடியுரிமை மூலம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளது.
மேலும் தமிழ்நாட்டின் சார்பில் முதல் கட்டமாக வந்தவர்களுக்கு உரிமைகள் வழங்குவதற்கான குழு அமைக்கப்பட்டு சட்டத்துறை அமைச்சரின் ஆலோசனைப்படி தீர்வு காணப்படுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நினைத்ததை செய்து முடிப்பவர். அவர் எடுக்கின்ற எல்லா முயற்சிகளும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற முயற்சிக்கு மக்கள் ஆதரவாக இருக்கின்றனர் என்பதையும் அமைச்சர் மஸ்தான் இங்கு சுட்டிக்காட்டினார்.
இலங்கை தமிழர்களில் உள்ள மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரியிலும் வேளாண்மை கல்லூரியிலும் சேர்வதற்கும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கும். மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு தான் சட்ட சிக்கல் இருக்கின்றது. அதற்கும் விரைவில் தீர்வு கிடைக்கப்பெறலாம். அதன் ஊடாக ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் விடிவுகாலம் வரும்போது நம்மோடு இருக்கின்ற இலங்கை தமிழர்களுக்கும் விடிவுகாலம் வரும்.
தமிழகத்தில் தங்கி உள்ள இலங்கை தமிழ் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில தமிழக அரசு அனுமதி அளிக்கிறது. ஆனால், மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு மட்டும்தான் சட்டச் சிக்கல் உள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும்போது, இலங்கைத் தமிழர்கள் உள்பட ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் விடிவு ஏற்படும் என்பதையும் அவர் இச்சமயம் சுட்டிக்காட்டினார்.
எம்.கே.ஷாகுல் ஹமீது.
திருச்சி