ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா அண்மையில் நடத்திய தாக்குதல்களை ரஷ்யா மற்றும் சீனா பாதுகாப்புச் சபையில் கடுமையாக சாடியுள்ளன.
பிராந்தியத்தில் போர் அச்சுறுத்தலை அமெரிக்கா அதிகரித்திருப்பதாக கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்தில் இந்த இரு நாடுகளும் குற்றம்சாட்டின.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்களை அடுத்து பாதுகாப்புச் சபையை கூட்டும்படி ரஷ்யா விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
அமெரிக்கா தனது பலத்தை காண்பிக்க இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக ஐ.நாவுக்கான ரஷ்ய தூதுவர் வசிலி நபன்சியா குற்றம்சாட்டினார். உள்நாட்டில் தனது பிம்பத்தை உயர்த்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை எதிரொலிப்பதாக ஐ.நாவுக்கான சீன தூதுவர் சங் ஜூன்னின் உரை இருந்ததோடு, பதற்றம் அதிகரிக்கும் நெருக்கடி குறித்து கவலை வெளியிட்டார்.