இந்திய கடற்படைக்கு சொந்தமான INS Karanj நீர்மூழ்கி கப்பல் இரு நாள் விஜயமாக 2024 பெப்ரவரி 03 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தது. இந்நீர்மூழ்கி கப்பலுக்கு இலங்கை கடற்படை அதிகாரிகளால் சம்பிரதாய பூர்வமாக வரவேற்பளிக்கப்பட்டது.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பெப்ரவரி 03ஆம் திகதி அன்று இந்நீர்மூழ்கிக் கப்பலுக்கு விஜயம் செய்ததுடன் கட்டளை அதிகாரி, கமாண்டர் அருணாப் மற்றும் சக மாலுமிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.
இதேவேளை அன்றைய தினம் குறித்த கப்பலைப் பார்வையிட்ட இலங்கை கடற்படை வீர்ர்கள் 100 பேருக்கு நீர்மூழ்கிக் கப்பல் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், இக்கப்பல் தரித்து நிற்கும் காலப்பகுதியில் அதன் கட்டளை அதிகாரி, மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவை மேற்கு கடற்படை பிராந்திய தலைமையகத்தில் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
கல்வேரி வகை நீர்மூழ்கிக் கப்பலில் மூன்றாவதாக உருவாக்கப்பட்ட ஐ.என்.எஸ் கரஞ்ச் என்ற குறித்த கப்பல் 10 மார்ச் 2021 அன்று இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. அத்துடன் ஐ.என்.எஸ் கரஞ்ச் சேவையில் இணைக்கப்பட்ட பின்னர் வெளிநாட்டு துறைமுகம் ஒன்றிற்கு மேற்கொண்டுள்ள முதல் விஜயம் இதுவாகும். முன்னதாக, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மற்றொரு கல்வேரி வகை நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். வாகீர் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொழும்புக்கு வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கப்பல் சார் செயற்பாட்டு நடவடிக்கைக்காக (OTR), வருகை தந்திருக்கும் இந்நீர்மூழ்கி கப்பலுக்கு எரிபொருள் நிரப்பல் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். அத்துடன் இக்கப்பலில் வருகை தந்த மாலுமிகள், கொழும்பு மற்றும் காலியில் உள்ள பல இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் இன்று (05) இலங்கையிலிருந்து புறப்படும் என இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.