விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல திடீர் சுகவீனமடைந்துள்ள நிலையில் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் வைத்து திடீர் சுகவீனமுற்ற நிலையில் அவர் சிறைச்சாலை மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டபோது மருத்துவரின் பரிந்துரைக்கிணங்க அமைச்சர் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சுற்றாடல் அமைச்சரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல கடந்த இரு தினங்களுக்கு முன் சிஐடியினரால் கைது செய்யப்பட்டதையடுத்து எதிர்வரும் 15ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கடந்த 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, 3ஆம் திகதி மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் அவருக்கு விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்தது.
சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோப்லின் மருந்து தொடர்பான வழக்கு சம்பந்தமாக தற்போதைய சுற்றாடல் அமைச்சரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்த நிலையில் அதனையடுத்து மேற்படி அதிகாரிகளினால் அமைச்சர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவ்வாறு தரமற்ற மருந்தை இறக்குமதி செய்து பகிர்ந்தளித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய்களை நட்டம் ஏற்படுத்தியிருந்தார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
லோரன்ஸ் செல்வநாயகம்