Home » பிறருக்கு நன்மைகள் செய்வோம்!

பிறருக்கு நன்மைகள் செய்வோம்!

by sachintha
February 2, 2024 12:08 pm 0 comment

இஸ்லாம் இறை வணக்கத்திலும் பிறருக்கு நன்மைகள் செய்வதிலும், தான தர்மங்கள் செய்வதிலும், போட்டி போடுவதைத் தான் எதிர்பார்க்கிறது. சிலர், தான் மட்டுமே நன்றாக வாழ வேண்டும். மற்றவர்கள் எப்படிப்போனாலும் கவலையில்லை என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். இன்னும் சிலர் இதையும் தாண்டி பொறாமை எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவ்வாறான எதிர்மறை எண்ணத்தை இஸ்லாம் தடை செய்கிறது.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், நீங்கள் வாழ்வதற்குப் பிறர் வீழ வேண்டுமெனப் போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள்’ என கூறினார்கள்.

(ஆதாரம்: முஸ்லிம்)

எமக்கு எதுவெல்லாம் நடக்கக்கூடாது என நாம் நினைப்போமோ, அது மற்றவருக்கும் நடக்கக்கூடாது என்ற எண்ணம் இருக்க வேண்டும். எதிரிக்கு பதிலுக்குப் பதிலடி கொடுப்பதினால் அவனை வென்று விட முடியாது. அவனுக்கும் நன்மை செய்வதன் மூலம் அவனை வெல்ல வேண்டும்.

இது தொடர்பில் அல் குர்ஆன், ‘நன்மையும் தீமையும் சமமாகாது. நீர் தீமையை மிக அழகியதைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக. அப்பொழுது, எவருக்கும் உமக்குமிடையே பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரைப் போல் ஆகிவிடுவார் (41:34) என்று குறிப்பிட்டுள்ளது.

போட்டி, பொறாமை என்பதெல்லாம் பணத்திலோ, பதவி சுகத்திலோ, பழிவாங்கும் தன்மையிலோ, தீயசெயல்களிலோ இருக்கக்கூடாது. போட்டி என்பது நன்மையான காரியங்களில் அமைய வேண்டும். இத்தகைய போட்டியைத்தான் இஸ்லாம் ஊக்குவிக்கிறது.

இது குறித்து நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் ​போது, இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதற்காகவும் போட்டி, பொறாமைப்படக்கூடாது. அவை: 1) ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனின் ஞானத்தை வழங்கினான். அதை அவர் அல்லும் பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு) வருகிறார். இதைக்கண்ட மற்றொருவர், ‘இவருக்கு வழங்கப்பட்டதைப் போன்றே எனக்கும் வழங்கப்படுமானால் இவரைப் போன்றே நானும் செயல்படுவேனே’ என்று ஆதங்கத்துடன் கூறினார். 2) மற்றொருவருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அவர் அதை உரிய வழியில் செலவிடுகிறார். இதைக் காணும் மற்றொருவர், இவருக்கு வழங்கப்பட்டதைப் போன்று எனக்கும் வழங்கப்பட்டால், இவரைப் போன்றே நானும் செயல்படுவேன்’ என்கிறார். (ஆதாரம்: புஹாரி)

நபித்தோழர்களான அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) இடையே நன்மை செய்வதில் போட்டி இருந்தது. இதுபற்றி உமர் (ரழி) அவர்கள் குறிப்பிடும் ​போது, ‘ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு தர்மம் செய்வது குறித்து ஏவினார்கள். செல்வம் என்னிடம் நிறைவாக இருந்ததால் இது எனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. இதுவரைக்கும் நான் அபூபக்கர் (ரழி) அவர்களை எந்த நன்மையிலும் முந்த முடியவில்லை. இன்றைய தினம் நான் போட்டி போட்டு, கூடுதலாக தர்மம் செய்து முந்திவிட வேண்டி, நபியவர்களிடம் எனது சொத்தில் சரி பாதியை கொண்டு வந்து கொட்டினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நீர் உமது குடும்பத்தாருக்கு என்ன விட்டு வந்தீர்?’ என கேட்க… ‘நான் பாதி சொத்தை விட்டு வந்துள்ளேன்’ என்று கூறினேன். பிறகு, அபூபக்கர் (ரழி) தம்மிடமுள்ள அனைத்தையும் நபியிடம் கொண்டு வந்து கொடுத்தபோது, ‘நீர் உமது குடும்பத்தாருக்கு என்ன விட்டு வந்தீர்’ என நபி (ஸல்) கேட்டதும் ‘நான் இறைவனையும், இறைத்தூதரையும் மட்டுமே மிச்சம் வைத்து வந்துள்ளேன்’ என்றார். இதைப் பார்த்த உமர் (ரழி), அபூபக்கர் (ரழி) அவர்களைப் பார்த்து ‘நான் எதிலும் எப்போதும் உம்மை முந்திவிட முடியாது’ என்றார்.

(நூல்: திர்மிதி)

ஆகவே இஸ்லாமிய வழிகாட்டல்களுக்கு அமைய இறைவிசுவாசிகள் வாழ்வொழுங்கை அமைத்துக் கொள்ள வேண்டும். அது மிகவும் இன்றியமையாததாகும்.

மின்ஸார் இப்றாஹிம்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x