– 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானம்
– நாமல் ராஜபக்ஷவும் வாழ்த்துத் தெரிவிப்பு
தமிழக வெற்றி கழகம் எனும் புதிய அரசியல் கட்சியைத் ஆரம்பித்துள்ளதாக நடிகர் விஜய் உத்தியோகபூர்மாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிவித்தலொன்றை விடுத்துள்ள அவர், இதனைத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயின் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள கட்சியின் பெயர் தமிழக முன்னேற்ற கழகம் என முன்னர் தகவல் வெளியாகியிருந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் என அதன் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
#தமிழகவெற்றிகழகம் #TVKVijay https://t.co/Szf7Kdnyvr
— Vijay (@actorvijay) February 2, 2024
அதற்கமைய, தான் வாக்களித்த இறுதிப் படத்தை நடித்துக் கொடுத்து விட்டு, சினிமாவில் இருந்து முழுமையாக விலகி முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளின் அனுமதியுடன் புதிதாக தொடங்கப்பட்ட கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் உட்சபட்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். கடந்த சில ஆண்டுகளாகவே இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே வசூலில் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.
அதேநேரம் விஜய் அரசியலுக்கு வரப்போவதாகவும் கடந்த சில ஆண்டுகளாகவே தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் கூட அதை நோக்கி இருந்து வந்துள்ளது.
கடந்த முறை நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு வென்றனர். இந்தத் தேர்தலில் விஜய் படத்தையும், விஜய் மக்கள் இயக்க கொடியைப் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. தேர்தலில் வென்றவர்களை அழைத்துப் பேசிய விஜய் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இது அரசியல் வருகைக்கான முக்கிய விஷயமாகப் பார்க்கப்பட்டது.
அதேபோல லியோ வெற்றி விழாவில் 2026 சட்டசபைத் தேர்தல் குறித்த கேள்விக்கு “கப் முக்கியம்” என்று சொல்லி அதிர வைத்திருப்பார். மேலும், பதிப்பகங்களை ஆரம்பிப்பது, அதிக மார்க் வாங்கியவர்களுக்குச் சட்டசபை தொகுதிகள் வாரியாக உதவிகளை வழங்குவது, புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி பொருட்களை வழங்குவது என்று அவர் செய்யும் காரியம் எல்லாம் பேசுபொருள் ஆனது.
இந்தச் சூழலில் தான் கடந்த மாதம் சென்னை பனையூரில் விஜய் அவரது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். விஜய் அரசியல் கட்சியைப் பிப்ரவரி முதல் வாரத்தில் பதிவு செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் அப்போதே வெளியானது. அதன்படி இன்றைய தினம் விஜய் மக்கள் இயக்கத்தினர் கட்சியைப் பதிவு செய்தனர். அதன்படி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2024 லோக்சபா தேர்தலில் போட்டியில்லை என அறிவித்துள்ள விஜய், அதில் யாருக்கும் ஆதரவும் இல்லை என்றும் அறிவித்துள்ளார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் பொட்டிட்டு வெற்றி பெற்று அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதே நமது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி இதில் சினிமாவில் இருந்தும் முழுமையாக விலகுவதாகவும் விஜய் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், “என் சார்பில் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு. முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செலுத்தும் நன்றிக்கடனா இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி மற்றொரு படத்தில் விஜய் நடிப்பார் என்று தெரிகிறது. அதன் பின்னரே சினிமாவில் இருந்து விலகி அவர் அரசியலில் முழுமையாக இறங்க உள்ளார்.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சியில் உறுப்பினர்களை இணைப்பதற்காக புதிய செயலியொன்று நிறுவப்பட்டு அதன் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அரசியலுக்கு வந்த நடிகர் விஜய்க்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும், அவரது புதிய அத்தியாயத்திற்கு வாழ்த்துக்கள் எனவும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது X (ட்விட்டர்) கணக்கில் வாழ்த்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
My heartfelt congratulations to @actorvijay for entering politics. All the best for your new chapter.
#ThalapathyVijay𓃵— Namal Rajapaksa (@RajapaksaNamal) February 2, 2024